சந்திரிக்கா அரசை நாம் ஒரு போதும் குற்றம் சுமத்தவில்லை : கோத்தா
22 Apr,2017
மீதொட்டமுல்ல அனர்த்த பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருமாறு என்னிடம் கோரிக்கை விடுத்தால் கண்டிப்பாக நான் உதவி செய்வேன் என கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மீதொட்டமுல்ல குப்பை பிரச்சினைக்கு கடந்த அரசாங்கமே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.
இந்த விடயம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவிடம் ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்கு பதிலளித்த கோத்தபாய, எங்களது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, யுத்தத்தை முற்றாக நிறைவுக்கு கொண்டு வந்தோம்.
ஆனால், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் குப்பை பிரச்சினையை தீர்க்கவில்லை. ஆனாலும்,கடந்த அரசாங்கத்தையே குற்றம் சுமத்துகின்றனர் என கோத்தபாய தெரிவித்துள்ளார்.
இருப்பினும், நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கத்தை குற்றம் சுமத்தவில்லை. எங்களது வேலைகளை நாங்கள் சரியாகவே செய்தோம் என கோத்தபாய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நீங்களே இருந்தீர்கள்? ஏன் மக்கள் குற்றச்சாட்டுக்களை உங்கள் மீது முன்வைக்கின்றனர் என கேள்வி எழுப்பப்பட்ட போது,
குப்பை தொடர்பான பிரச்சினைக்கு பொறுப்பு கூற வேண்டியது நானல்ல, சுற்றாடல் துறை அமைச்சும் அதன் செயலாளருமே என கோத்தபாய பதிலளித்துள்ளார்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தருமாரு தங்களிடம் கேட்டுக்கொண்டால் என்ன செய்வீர்கள்? என கேள்வி எழுப்பிய போது,
தீர்வு பெற்றுத்தருமாறு என்னிடம் கோரிக்கை விடுத்தால் கண்டிப்பாக நான் உதவி செய்வேன் என கோத்தபாய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.