இரட்டை வேடம் போடுகிறார் மஹிந்த
11 Mar,2017
இரட்டை வேடம் போடுகிறார் மஹிந்த
அரசியல் பொறியில் சிக்குண்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ் தற்போது இரட்டை வேடம் போடுகின்றார் என இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியல் ரீதியில் மேற்கொண்டுவரும் நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர் ஆகஸ்ட் 17ஆம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தல் வரைக்குமான 8மாத காலம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையிலேயே அரசாங்கம் இருந்தது.
இதில் வியப்புக்குரிய விடயம் என்னவென்றால் அந்த காலப்பகுதியில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் தனக்கு ஆதரவானவர்கள் என தெரிவித்து வந்த மஹிந்த ராஜபக்ஷ குறைந்த பட்சம் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றையேனும் கொண்டுவராதமையாகும்.
அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குருணாகல் மாவட்ட வேட்பாளர் பட்டியலில் பாராளுமன்றத்துக்கு தெரிவான மஹிந்த ராஜபக்ஷ, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்துக்குள் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்காமல் ஒதுங்கிக்கொண்டுள்ளமை மற்றும் வரவு–செலவு திட்ட வாக்கெடுப்பில் கூட வாக்களிக்காமல் சென்றமை அவர் அரசியல் பொறியில் சிக்கிக்கொண்டுள்ளமைக்கு சான்றாகும்.
அதேபோன்று தற்போது சைட்டம் பிரச்சினை தொடர்பாகவும் அவர் இரட்டை வேடத்தை பின்பற்றும் வகையிலேயே கருத்து தெரிவித்திருக்கின்றார். அன்று சைட்டம் ஆரம்பிப்பதற்கு மில்லியன் கணக்கில் நிதி வசதிகளை செய்துகொடுத்த ராஜபக் ஷ இன்று சைட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றார்.
அத்துடன் கோடிக்கணக்கில் பாரிய வட்டிக்கு கடன் பெற்றுக்கொண்டு அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் விமான நிலையம் போன்ற பொருளாதார இலாபமற்ற அபிவிருத்தித் திட்டங்களை மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்திருந்தார். என்றாலும் அந்த அபிவிருத்தி திட்டங்களை இலாபமீட்டும் முதலீட்டு வலயங்களாக மாற்றியமைக்கும்போது அதற்கு எதிராக செயற்படுகின்றார்.
மேலும் நாட்டில் இருக்கும் மாகாண சபைகளில் பெரும்பாலானவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முதலமைச்சர்களுக்கு கீழ் செயல்படுகின்றவையாகும்.
இந்த மாகாண சபைகளுக்கு கீழ் மக்களுக்கு சேவைசெய்யக்கூடிய கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகள் உரித்தாகின்றன.நாடு பொருளாதாரம் மற்றும் அரசியல் பிரச்சினைக்கு முகம்கொடுத்துள்ளதாக தெரிவித்துவரும் மஹிந்த மற்றும் கூட்டு எதிர்க்கட்சி ஆரம்பமாக செய்யவேண்டியிருப்பது மாகாண சபைகளின் அதிகாரங்களை மாற்றியமைத்து அவற்றை வீழ்த்துவதாகும்.
எனவே மஹிந்த ராஜபக் ஷ மற்றும் கூட்டு எதிர்க்கட்சி முடியுமானால் ஒரு மாகாணசபையையேனும் வீழ்த்தி அரசாங்கத்தை வீழ்த்த முயற்சிக்கட்டும் என்றார்.