முல்லைத்தீவு படைத் தளபதியுடன் பிரித்தானிய துணைத் தூதுவர் பேச்சு?
27 Feb,2017
முல்லைத்தீவு படைத் தளபதியுடன் பிரித்தானிய துணைத் தூதுவர் பேச்சு?
பிரித்தானிய துணைத் தூதுவர் லோறா டேவிஸ், முல்லைத்தீவு படைகளின் தலைமையகத்தில், முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை, முல்லைத்தீவு படைகளின் தலைமையகத்துக்குச் சென்ற சிறிலங்காவுக்கான பிரித்தானிய துணைத் தூதுவர் லோறா டேவிஸ், முல்லைத்தீவு படைத் தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோவுடன் பேச்சு நடத்தினார்.
இந்தக் கலந்துரையாடலில், பிரித்தானியத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் ஸ்ருவார்ட் அன்ட்ரூ போர்லன்டும் பங்கேற்றார். இதன் போது, பரஸ்பரம் ஈடுபாடுள்ள விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக, சிறிலங்கா இராணுவத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
எனினும், முல்லைத்தீவு மாவட்டத்தில் நடத்தப்பட்டு வரும் பொதுமக்களின் நில மீட்புப் போராட்டங்களை மையப்படுத்தியே இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
படையினர் வசமுள்ள தமது காணிகளை மீள ஒப்படைக்குமாறு கோரி, கேப்பாப்பிலவு மற்றும் புதுக்குடியிருப்பில், பொதுமக்கள் கடந்த நான்கு வாரங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவாக, வடக்கு, கிழக்கில் மாத்திரமன்றி கொழும்பிலும் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாகவே முல்லைத்தீவு படைகளின் தளபதியுடன், பிரித்தானிய துணைத் தூதுவர் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே பிரித்தானியத் துணைத் தூதுவர், தன்னுடன் பாதுகாப்பு ஆலோசகர், கப்டன் ஸ்ருவார்ட் அன்ட்ரூ போர்லன்டையும் அழைத்துச் சென்றிருந்தார் என்றும் தெரியவருகிறது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது அமர்வு இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வில் சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் முன்வைக்கவுள்ள நிலையில், பிரித்தானிய தூதரக உயர் மட்ட அதிகாரிகளின் முல்லைத்தீவு பயணம் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.