கொழும்பு வந்தார் ஜெய்சங்கர் –, சம்பூர், திருமலை விவகாரங்களுக்கு முக்கியத்துவம்
20 Feb,2017
..............
சிறிலங்கா அரசாங்கத்துடன் உயர்மட்டப் பேச்சுக்களை நடத்துவதற்காக, இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் நேற்றுமாலை கொழும்பு வந்தடைந்தார். கடந்த 11 மாதங்களில் இவர் சிறிலங்காவுக்கு மேற்கொண்டுள்ள மூன்றாவது பயணம் இதுவாகும்.
மூன்று நாள் சிறிலங்கா பயணமாக கொழும்பு வந்துள்ள இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், நாளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
இந்திய வெளிவிவகாரச் செயலரின் இந்தப் பயணம், பொருளாதார, மூலோபாய, மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், இந்த ஆண்டில் இடம்பெறவுள்ள முக்கியமான இருதரப்பு உயர்மட்டப் பயணங்களுக்கான தயார்படுத்தல்களை மேற்கொள்வதாகவும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் இந்த ஆண்டில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அத்துடன் இரண்டு நாடுகளும் மிகப்பெரிய அறிவிப்புகளை வெளியிட எதிர்பார்த்துள்ளன.
அதேவேளை, திருகோணமலை துறைமுக அபிவிருத்தி தொடர்பான புதுடெல்லியின் உதவியைப் பெறுவது குறித்து இரண்டு நாடுகளும் உடன்பாடு, செய்து கொள்ளும் விவகாரம் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் தொடருந்து வலையமைப்பை விரிவாக்கும் திட்டத்தை கொழும்பு கொண்டிருக்கும் நிலையில், தொடருந்து துறையில் திட்டங்களை இந்தியா முன்னெடுக்கும் சாத்தியங்களும் உள்ளன.
சம்பூரில் மின் திட்டம் ஒன்றை அமைக்கும் விவகாரம் குறித்த பேச்சுக்களையும் இந்திய வெளிவிவகாரச் செயலர் முன்னெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், பாதுகாப்பு ஒத்துழைப்புக் குறித்தும் இரண்டு நாடுகளும் கலந்துரையாடவுள்ளன. இந்த துறையில் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்திக் கொள்ள இரண்டு நாடுகளும் திட்டமிட்டுள்ளன