...............
முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல்துறை உறுப்பினர் குமார் குணரத்னத்திற்கு இலங்கை பிரஜா உரிமை வழங்கப்பட்டுள்ளது.முன்னதாக மக்கள் விடுதலை முன்னணியின் முக்கிய தலைவராக செயற்பட்ட இவர், கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று அந் நாட்டின் குடியுரிமையையும் பெற்றுக் கொண்டார்.
இதனையடுத்து, கடந்த ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு மீண்டும் சுற்றுலா விசாவில் வந்த அவர் (இலங்கைப் பிரஜை அல்லாத நிலையில்) அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டு பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
எனினும், கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் எந்த சட்ட சிக்கல்களோ அல்லது தொந்தரவுகளோ இன்றி இலங்கைக்கு வந்து முன்னிலை சோசலிசக் கட்சிக்காக அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.
பாரிய சர்சைகளுக்கு பின்னர் நாட்டைவிட்டு வௌியேற்றப்பட்ட அவர், மீண்டும் அந்த அரசாங்கத்தின் ஆசிர்வாதத்துடனேயே நாட்டுக்குள் வந்து அரசியல் செய்தமை குறித்து பலர் பல்வேறு கருத்துக்களை வௌியிட்டனர்.
எதுஎவ்வாறு இருப்பினும் முன்னிலை சோசலிசக் கட்சி அப்போதைய அரசாங்கத்தின் ஒப்பந்தத்தினை தன்னை வைத்து நிறைவேற்றுவதாக எழுந்த குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.
இதேவேளை தேர்தலின் பின்னர் குமார் குணரட்னம் என்பவர் குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறி நாட்டில் தங்கியிருப்பதாக, குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்ட வேளை, அவரை நாட்டில் இருந்து வௌியேற்றக் கூடாது என, முன்னிலை சோசலிசக் கட்சியால் அடிப்படை உரிமை மனு ஒன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
எனினும் அந்த மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் 2015ம் ஆண்டு பெப்ரவரி 18ம் திகதி அவரை நாட்டில் இருந்து வௌியேற்ற முடியும் என குறிப்பிட்டது.
இதனையடுத்து தலைமறைவாக இருந்த குமார் குணரட்னம் கடந்த நவம்பர் 4ம் திகதி கேகாலை – அகுருகெல்ல பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டதோடு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இதனையடுத்து, நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர், கடந்த மார்ச் 31ம் திகதி இவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து கேகாலை நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
இதன்படி, சிறையில் அடைக்கப்பட்ட அவர் டிசம்பர் 2ம் திகதி விடுதலை செய்யப்பட்டார்.
இதேவேளை, குமார் குணரத்னத்திற்கு இலங்கை பிரஜா உரிமை வழங்கப்பட வேண்டும் என, முன்னிலை சோசலிசக் கட்சியின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முதல் (01) அமுலுக்கு வரும் வகையில் இவருக்கு இலங்கைப் பிரஜா உரிமை வழங்கப்பட்டுள்ளதாக, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.