கோத்தாவிடம் விரைவில் விசாரணை
23 Jan,2017
கோத்தாவிடம் விரைவில் விசாரணை
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரைவில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
இந்தப் படுகொலை நடந்த போது சிறிலங்கா இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம், கடந்தவாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஐந்து மணிநேரம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்த விசாரணையின் போது. சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், கோத்தாபய ராஜபக்சவிடம் விசாரணைகளை மேற்கொள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக கோத்தாபய ராஜபக்ச விரைவில் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்படுவார் என்று காவல்துறை தலைமையக வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் சரத் பொன்சேகாவின் சாட்சியங்களின் அடிப்படையில், படுகொலை நடந்த காலப்பகுதியில், கோத்தாபய ராஜபக்சவின் கீழ் செயற்பட்ட உயர்மட்ட படை அதிகாரிகள் பலரும் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது