அதிர்ச்சி தரக்கூடிய அரசியல் மாற்றம் ஏற்பட்டது!
29 Nov,2016
நாட்டின் அரசியல் சாசனம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதுடன் அதை நிறைவேற்ற வேண்டியதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டு முற்பகுதியிலாவது அது நிறைவேற்றப்படக்கூடிய நிலைமை உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் விஷேட கூட்டம் எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் அவரது இல்லத்தில் நேற்று (28) மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து உரையாற்றியவர்,
“நாட்டின் பெரும்பான்மையினத் தலைவர்கள் மத்தியிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை உணர முடிகிறது. இந்த சந்தர்ப்பத்தை தவறவிட முடியாது. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றபோது நாம் எதிர்பார்க்காத அரசியல் மாற்றம் இந்த நாட்டில் ஏற்பட்டது. அது எங்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய மாற்றமாகும்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இந்த நாட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்திலும் நாம் ஒரு வருடகாலமாக பேச்சுவார்த்தை நடத்தினோம். அதில் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருவதைத் தவிர்த்தார்கள்.
நாங்கள் கோரிக்கைகளை வைத்தபோதும் அவர்கள் எந்த விடயத்தையும் முன்வைக்கவும் இல்லை. பதில் தரவும் இல்லை. இந்த அரசாங்கம் வந்த பின்னர் நாடாளுமன்றத்தை ஓர் அரசியல் சாசன சபையாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாற்றப்பட்டது. அதன் அடிப்படையில் ஒரு நடவடிக்கைக்குழு அமைக்கப்பட்டு பல உப குழுக்கள் அமைக்கப்பட்டன.
பல முக்கிய விடயங்கள் உப குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டு அந்த உப குழுக்கள் பல விடயங்களையும் ஆராய்ந்தது. மனித உரிமை, நிதி, நீதி, பொதுச்சேவை, மத்திக்கும் பிராந்தியத்துக்கும் உள்ள தொடர்புகள், சட்டம், ஒழுங்கு, அவசரகாலச்சட்ட ஒழுங்கு எனப் பல விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. அந்தக் குழுக்கள் அறிக்கைகளை நடவடிக்கைக் குழுவுக்குச் சமர்ப்பித்து அந்த அறிக்கைகளை பிரதமர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். நடவடிக்கைக்குழு இதுவரையில் 45 தடவைகள் கூடியுள்ளதுடன் பல விடயங்கள் தொடர்பிலும் பேசியுள்ளனர்”, என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.