சிசிரிவி காட்சிகளில் தெளிவில்லை - ஓட்டை வழியாக தப்புகிறார் தஹம் சிறிசேன!
14 Oct,2016
சிசிரிவி காட்சிகளில் தெளிவில்லை - ஓட்டை வழியாக தப்புகிறார் தஹம் சிறிசேன!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேன தொடர்புபட்டதாகக் கூறப்படும், கொழும்பு இரவு கேளிக்கை விடுதி தாக்குதல் சம்பவம் தொடர்பான சீ.சீ.ரீ.வி காட்சிகள் தெளிவில்லை என மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொம்பனித்தெருவில் அமைந்துள்ள இரவு கேளிக்கை விடுதி ஒன்றில் பணியாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நள்ளிரவில் தாக்கப்பட்டிருந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் ஜனாதிபதியின் மகன் தஹம் சிறிசேனவிற்கும், ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கும் தொடர்பு உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. எனினும் சீ.சீ.ரீ.வி கமராவில் பதிவாகியிருந்த 90 செக்கன் வீடியோ காட்சி தெளிவற்றதாக காணப்படுகின்றது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நிறுவன உரிமையாளர், முகாமையாளர் மற்றும் தாக்குதலுக்கு இலக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் ஏற்கனவே வாக்கு மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, தாக்குதல் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு எதுவும் செய்யப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.