தமிழ் மக்கள் மீதான பாரபட்சம், ஒடுக்குமுறை தொடர்கிறது! - ஐ.நா நிபுணரிடம் தமிழ் சிவில் சமூகத்தினர் முறைப்பாடு
14 Oct,2016
தமிழ் மக்கள் மீதான பாரபட்சம், ஒடுக்குமுறை தொடர்கிறது! - ஐ.நா நிபுணரிடம் தமிழ் சிவில் சமூகத்தினர் முறைப்பாடு
தமிழ் மக்களுக்கு எதிரான போர் வேறு வடிவத்தில் முன்னெடுக்கப்படுவதால் நல்லிணக்கம் குறித்து சிந்திக்க முடியாத நிலையில் உள்ளதாக தமிழ் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஐ.நாவின் சிறுபான்மையினர் தொடர்பான விசேட அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியாவிடம் தெரிவித்துள்ளனர்.
தமிழ் மக்கள் சிறுபான்மையினர் அல்ல. மாறான ஒரு தேசிய இனம் எனவே அவர்களுக்கு அவர்களது பாரம்பரிய பூமியான வடக்கு, கிழக்கு இணைந்த சுய நிர்ணய அடிப்படையிலான அரசியல் தீர்வு வேண்டும். கடந்த ஆட்சிகாலத்தில் இருந்த நிலைமையே தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ் மக்களின் மீதான பாரபட்சம், ஒடுக்குமுறை என்பன தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. உரிமைகள் மறுக்கப்பட்டு கல்வி நியமனங்கள், நீதிச் சேவைகள் உட்பட சகல விடயங்களிலும் பாரபட்சம் காட்டப்படுகிறது.
யுத்தம் முடிவடைந்தாலும் தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகள் இவ்வாறு இடம்பெற்றுவரும் நிலையில் நல்லிணக்கம் தொடர்பில் அவர்களால் சிந்திக்க முடியாதுள்ளதாகவும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
ஐ.நாவின் சிறுபான்மையினர் தொடர்பான விசேட அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியா நேற்று முன்தினம் இலங்கை வந்துள்ளார். அவர் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உட்பட் பகுதிகளில் உள்ள தமிழ் சிவில் அமைப்புக்ககளின் பிரதிநிதிகளை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு கொழும்பு 7இல் உள்ள ஐ.நா தூதுவராலயத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போதே தமிழ் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.