இரவு விடுதி தாக்குதலுடன் மைத்திரியின் மகனுக்குத் தொடர்பா?
14 Oct,2016
இரவு விடுதி தாக்குதலுடன் மைத்திரியின் மகனுக்குத் தொடர்பா?
இரவுநேர களியாட்ட விடுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவ்விதமான முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக பொலிஸாரினால் விசாரணை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு 2.00 மணிக்கும் 2.30க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேன தொடர்புபட்டுள்ளதாக ஆரம்பத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும் இந்த தாக்குதல் சம்பவத்துடன் தஹம் சிறிசேனவுக்கு தொடர்பு உள்ளதாக வெளியான செய்தியை குறித்த விடுதி முகாமையாளர் நிராகரித்திருந்தார்.
எனினும், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விடுதி உரிமையாளர் இதுவரையில் முறைப்பாடு செய்யாமல் இருப்பதற்கான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் விடுதி மீதான தாக்குதல் சம்பவத்துக்கும் தஹம் சிறிசேனவுக்கும் தொடர்பு உண்டா இல்லையா என்பது தொடர்பிலும் இதுவரையில் தகவல் வெளியாகவில்லை.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் யோஷித ராஜபக்ஷ இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும், குறித்த இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சென்று நிலைமையை சமூக நிலைக்கு கொண்டு வந்ததாகவும் சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதல் சம்பவம் காரணமாக விடுதியின் ஜன்னல்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்துள்ளதுடன், அத்துடன் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.