மனித உரிமைகளை பயங்கரவாத புலனாய்வு பிரிவு மீறியதாக குற்றச்சாட்டு-கோட்டாபய மீது குற்றச்சாட்டு
30 Aug,2016
ஜனாதிபதி மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவினால் பிறப்பிக்கப்பட்டுள்ள வழிக்காட்டுதல்களை பயங்கரவாத புலனாய்வு பிரிவு மீறி வருவதாக குற்றம்சாட்டி இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் லக்ஷான் டயஸ் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
பயங்கரவாத தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை முன் அனுமதியின்றி வழக்கறிஞர்கள் சந்திக்க முடியுமென்று ஜனாதிபதி மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பிறப்பித்துள்ள உத்தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், அந்த பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐயாத்துரை மோகதாஸ் எனும் சந்தேக நபரை சந்திக்கும் அவகாசத்தை போலீசார் மறுத்து வருவதாக குற்றம்சாட்டிய வழக்கறிஞர் லக்ஷான் டயஸ், அதற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைமை அதிகாரியின் அனுமதி அவசியமென்று கூறியுள்ளதாக குற்றம்சாட்டினார்.
இதன் மூலம் ஜனாதிபதி மற்றும் இலங்கை மனித உறிமைகள் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட வழிக்காட்டுதல்கள் மீறப்பட்டுள்ளதாக கூறிய வழக்கறிஞர், இதன் காரணமாக மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோட்டாபய மீது குற்றச்சாட்டு
இறுதி யுத்தத்தின் போது, விடுதலை புலிகள் உறுப்பினர்கள் வெளிநாடு செல்வதற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பணம் பெற்றுக் கொடுத்து உதவியதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோரை கண்டறியும் அலுவலகத்தின் ஊடாக இது தொடர்பில் மேலதிக தகவல்களை வெளிப்படுத்த முடியும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.