போர்க்குற்ற விசாரணையை இனிமேலும் தாமதிப்பது, சிறிலங்காவுக்கு மேலும் அழுத்தங்களைக் கொடுக்கும் என்று சிறிலங்கா இராணுவத்தின்
முன்னாள் தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இருந்து வெளியாகும் வீரகேசரி நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“போர் முடிவுக்கு வந்தவுடன் நாடு விடுதலை அடையப் போவதில்லை. போர் நிலவிய எந்த நாட்டிலும் அவ்வாறான எதுவும் நடக்கவும் இல்லை.
போரை முடிவுக்குக் கொண்டு வந்தவுடன் உண்மைகளை வெளிப்படுத்த துணிவுடன் செயற்பட்டிருக்க வேண்டும். ஆனால் நாம் ஆரம்பத்தில் இருந்தே உண்மைகளை கண்டறியும் சயற்பாடுகளில் தாமதமாகவே செயற்பட்டு வருகிறோம்.
போர்க்குற்றசாட்டுகள் எம்மீது சுமத்தப்பட்டபோது அவற்றை பொய்யென நிரூபிக்க நாம் முன்வந்திருக்க வேண்டும். அப்போதே அந்த பொறிமுறைகளை மேற்கொண்டிருந்தால் இன்று நாம் அனைத்துலக நீதிமன்றத்தின் கூண்டில் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
எவ்வாறாயினும், எமது இராணுவம் மீது படிந்துள்ள கறைகளை நாம் நீக்க வேண்டும். எமது இராணுவத்தினர் முறையான வகையிலும் மனிதாபிமான வகையிலும் செயற்பட்டு போரை முடிவுக்கு கொண்டுவந்தனர் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
இறுதிப்போரில், வடக்கில் இராணுவத்தினால் பாரிய இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டதாக அனைத்துலக அமைப்புகளும் ஒருசில அரச சார்பற்ற நிறுவனங்களும் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றன.
எனினும் இதில் எந்தவித உண்மைகளும் இல்லை. அதேபோல் வடக்கில் நடந்த சம்பவங்கள் உண்மையானதா அல்லது பொய்யானதா என்பதை விசாரணைகள் மூலமே நிரூபிக்க முடியும்.
எனவே, ஒரு விசாரணையை நடத்தி எமது இராணுவத்தை காப்பாற்ற வேண்டும். அதற்கான சரியான களம் இப்போது ஏற்பட்டுள்ளது.
இப்போதுள்ள அரசியல் சூழல், சுதந்திரமான செயற்பாடுகள் மற்றும் அனைத்துலக நாடுகளுடன் ஏற்படுத்தியுள்ள நட்புறவுகள் அனைத்தும் எமது நிலைப்பாட்டை சரியாக முறையில் கொண்டு செல்ல வாய்ப்பாக அமையும்.
போர்க்குற்ற விசாரணையை காலம் கடத்துவது எம்மீது முன்வைத்துள்ள பொய்யான குற்றச்சாட்டுகள் உண்மையாகி விட வாய்ப்பாக மாறிவிடும்.
இப்போது அனைத்துலகத் தரப்பு முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் மற்றும் உள்நாட்டில் எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பில் உள்ளக ரீதியிலோ அல்லது கலப்பு விசாரணைக்கு அமைவாகவோ விசாரணை ஒன்றை முன்னெடுக்க வேண்டும்.
காலத்தை கடத்தி மேலும் மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்திக்கொள்ளாது உண்மையான விசாரணைகளை முன்னெடுத்து பிரச்சினைகளை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.