வட மாகாண முதலமைச்சர் இன்று வடக்கு மாகாண முதலமைச்சர் கதிரையில் அமர்ந்து கருத்துக்களை வெளியிடுவதற்கான சந்தர்ப்பத்தை தானே ஏற்படுத்திக் கொடுத்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சதெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சி அமைத்திருக்கும் பட்சத்தில் வட மாகாணத்தில் 10 வீத அபிவிருத்தி கூட இருந்திருக்காது என வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளமை குறித்து ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர்.
இந்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பதரமுல்லை பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தான் வட மாகாணத்திற்கான தேர்தலை நடாத்தியமையினாலேயே சீ.வி.விக்னேஸ்வரன் இன்று முதலமைச்சராக ஆசனத்தில் அமர்ந்திருக்கின்றார் என அவர் நினைவூட்டியுள்ளார்.
யுத்தத்தை நிறைவு செய்து, கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு அபிவிருத்தியை நோக்கி தான் கொண்டு சென்றதாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.
தான் செய்த பணிகளினாலேயே தற்போது அனைவராலும் கதைக்கக்கூடியதாக உள்ளதெனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்
மகிந்த குறித்து மைத்திரி இறுதி முடிவு
.
காலியில் நடக்கவுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினப் பேரணியில், பங்கேற்காத சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கட்சியின் மத்திய குழு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் மகிந்த சமரசிங்க.
கொழும்பில் நேற்று நடத்திய ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர், மேதினப் பேரணியில் பங்கேற்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது என்று குறிப்பிட்டார்.
ஏற்கனவே கூட்டு எதிரணியினர் நடத்திய ஹைட்பார்க் கூட்டத்தில், பங்கேற்கும் சுதந்திரக் கட்சியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்த போதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததை ஊடகவியலாளர் ஒருவர் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.
கட்சியின் மீதான அன்பினால் தான் அவர்கள் மீது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்கவில்லை என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க பதிலளித்தார்.
“அவர்களைத் தண்டிக்கவில்லை என்பதை பலவீனமாக எடுக்கக் கூடாது. இம்முறை நிலைமைகள் வித்தியாசமானது.
கிருலப்பனையில் கூட்டு எதிரணியினரின் மேதினப் பேரணியில் பங்கேற்பவர்கள் மீது சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்.
இந்தக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச பங்குபற்றினால் அவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபற்றிய இறுதி முடிவு சிறிலங்கா அதிபராலேயே எடுக்கப்படும். ஏனென்றால் அவர் ஒரு முன்னாள் அதிபர். அத்துடன் கட்சியின் போசகரும் கூட” என்றும் அவர் தெரிவித்தார்.