இந்தியப்பிரஜை கைது
சுற்றுலா விஸாவில் வருகைதந்து, குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி, வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்தியப் பிரஜையை (வயது 54) மன்னார், பேசாலை நகரில் வைத்து கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரிடமிருந்து சாரி, சல்வார் மற்றும் ஆபரணங்கள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை, மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மனைவியை கொன்றவருக்கு மரணத்தண்டனை
தன்னுடைய மனைவியை 2011.01.24ஆம் திகதியன்று கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலைச்செய்தார் என்று குற்றச்சாட்டப்பட்டிருந்த அவருடைய கணவனை, குற்றவாளியாக இனங்கண்ட பலப்பிட்டிய மேல் நீதிமன்றம், அவருக்கு மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
அஹூன்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிராக்மணவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதானவருக்கே இவ்வாறு நேற்று மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
'மஹிந்தவைப் பொறுக்காது கல்லும் வெடித்தது'
'மஹிந்த ராஜபக்ஷ, குருநாகல் மாவட்டத்துக்குச் சென்றதைப் பொறுத்துக்கொள்ளாது, குருநாகலில் உள்ள யானைக்கல்லும் வெடித்து விட்டது' என்று இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (24) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'நாட்டையும் பொருளாதாரத்தையும் சீர்குலைத்த மஹிந்த ராஜபக்ஷவை மக்கள் வெறுத்துவிட்டனர். எனினும், அவர் குருநாகலுக்குச் சென்றார். அதனைப் பொறுத்துக் கொள்ளாது, அங்குள்ள யானைக்கல்லும் வெடித்துவிட்டது. எனினும், கடந்த 17ஆம் திகதி ஹைட்பார்க்கில் நின்றுகொண்டு, நாட்டைத்தா, நாட்டைத்தா என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு மன்றாடினார். அதனை பொறுத்துக் கொள்ளாது மற்றைய கல்லும் வெடித்து விட்டது' என்றார்.
இதன்போது அவையில் அருந்த இணைந்த எதிரணியினர், '17க்கு அச்சமடைந்து விட்டீர்களா? அச்சமடைந்துவிட்டீர்களா?' என்று கோஷமிட்டனர்.
இதற்குப் பதிலளித்த இராஜாங்க அமைச்சர் 'ஆம், ஆம், அன்று மது அருந்திவிட்டு வீதிகளில் புரண்டு புரண்டு ஆட்கள் சென்றதை நாம் கண்டோம். அதன் சாபக்கேடே, நாட்டில் தற்போது வரட்சி நிலவுகின்றது' என்றார்
சம்பந்தனால் முடியாதா?
'வடக்கு, கிழக்கில் 65ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் கட்டப்படும் வீடுகள், வடக்குக்கு பொருத்தமில்லை என்பதை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிவித்து அதனை நிறுத்த முடியும் தானே, பின்னர் ஏன் வீணாக வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றுகின்றீர்கள்?' என வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் வை.தவநாதன் ஆளுங்கட்சி உறுப்பினர்களைப் பார்த்து கேள்வியெழுப்பினார்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (24) நடைபெற்றது. இதன்போது, வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடுகள் அமைக்கும் வீட்டுத்திட்டத்தை வடமாகாண சபையுடன் கலந்தாலோசித்த பின்னர் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், அதுவரையில் அந்த வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவைக் கோருகின்ற அவசர பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டது.
இந்தப் பிரேரணை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே தவநாதன் இவ்வாறு கேள்வி எழுப்பினார். 'பிரேரணையை நிறைவேற்ற காலத்தை இழுத்தடிப்புச் செய்யாமல், உடனடியாக எதிர்க்கட்சித் தலைவரே ஜனாதிபதியுடன் கதைத்து நிறுத்த முடியும் தானே' என்றார். அதற்குப் பதிலளித்த அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், 'இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரின் கவனத்துக்கு கொண்டு போகின்றோம்' என்றார்
சி.வி.க்கு சுகமில்லை
தனக்கு சுகயீனம் ஏற்பட்டமையால் கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற 32ஆவது முதலமைச்சர் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அரசியல் காரணங்களுக்காக நான் கலந்துகொள்ளவில்லை என்பது முற்றுமுழுதாக பொய்யெனவும், சுகயீனம் மாத்திரமே காரணம் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
32ஆவது முதலமைச்சர் மாநாடு கடந்த 21ஆம் திகதி காலி ஹிக்கா ட்ரான்ஸ் ஹோட்டலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது
நிதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
.
இலங்கை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக, மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிர்க்கட்சியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணையில் கூட்டு எதிர்க்கட்சியின் 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளிக்கப்பட்ட இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை எப்போது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பது பின்னரே முடிவு செய்யப்படும்.
வித்தியா குடும்பத்துக்கும் ஒரு வீடு கையளிப்பு!
.
சத்விருகம (நல்லிணக்கக் கிராமம்) என்ற பெயரில் இலங்கை படையினரால் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள இராணுவக் கிராமத்தில்,
புங்குடுதீவில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா குடும்பத்தினருக்கும் வீடு ஒன்று வழங்கப்படவுள்ளது.
வவுனியாவில் கொக்கெலிய என்று சிங்களப் பெயர் சூட்டப்பட்ட கொக்குவெளி என்ற தமிழ் கிராமத்தில் சிறிலங்கா இராணுவத்தின் 56ஆவது டிவிசனைச் சேர்ந்த 4ஆவது பொறியியல் படைப்பிரிவினால் 51 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அமைச்சின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட இந்த வீடுகள், சிறிலங்கா இராணுவத்தில் இணைந்து கொண்ட தமிழ்ப் பெண்களுக்கும், தமிழ்ப் பெண்களைத் திருமணம் செய்து கொண்ட சிங்கள இராணுவச் சிப்பாய்களுக்கும், 7 குழந்தைகளைப் பெற்ற சிங்கள இராணுவச் சிப்பாய் ஒருவருக்கும் வழங்கப்படவுள்ளன.
இவற்றில் ஒரு வீடு புங்குடுதீவு மாணவி வித்தியாவின் குடும்பத்தினருக்கும் வழங்கப்படவுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்தார்.
தலா 40 பேர்ச் காணியுடன் அமைந்த இந்த வீடுகள் ஒவ்வொன்றும் 2 மில்லியன் ரூபா பெறுமதியானவை.
சத்விருகம (நல்லிணக்க கிராமம்) என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தக் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வரும் ஏப்ரல் 3ஆம் நாள் கையளிக்கவுள்ளார்.
புங்குடுதீவில் கொல்லப்பட்ட மாணவியின் தாயாரை யாழ்ப்பாணத்தில் சந்தித்த சிறிலங்கா அதிபர், வவுனியாவில் வீடு ஒன்றை அமைத்து தருவதாக உறுதியளித்திருந்தார். அதன்படியே, இராணுவக் கிராமத்துக்குள் வித்தியா குடும்பத்தினருக்கும் வீடு ஒன்று வழங்கப்படவுள்ளது.
இந்த நிலையில், வவுனியாவில் இராணுவக் கிராமம் அமைக்கப்படுவதற்கு, இன்று நடக்கும் வடக்கு மாகாண சபை அமர்வில் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்