மைத்திரிபால சிறிசேனவிற்கு எழுந்துள்ள புதிய சவால்களும்-ரவிராஜ் கொலை வழக்குமாற்றம்
17 Mar,2016
மைத்திரிபால சிறிசேனவிற்கு எழுந்துள்ள புதிய சவால்களும்
புதிய நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஓராண்டு காலத்திற்குள் பல்வேறு இடர்பாடுகளும், சவால்களும் அடுக்கடுக்காய் வந்து போய்க்கொண்டிருக்கின்றன.
மைத்திரி ரணில் அரசாங்கம், எதிர்கொண்டுள்ள சிக்கல்களுக்கான தீர்வு உடனடியாக கிடைக்குமா என்பது சந்தேகமாகவேயுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டத் தொடங்கியிருக்கின்றார்கள்.
கடந்த ஆண்டு, தை மாதம் 9ம் திகதி ஆட்சிப் பொறுப்பை பொறுப்பெடுத்த மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப் பொறுப்பினை பெற்றுக்கொண்டார்.
ஆனால் தற்பொழுது அக்கட்சியில் உள்ளவர்களே அவருக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருப்பதாக சில உள்வீட்டுத் தகவல்கள் கசியத் தொடங்கியிருக்கின்றன. முன்னதாக மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக செயற்பட்ட சிலர் இப்பொழுது அவரின் கருத்துக்களோடு முரண்பட்டுச் செயற்பட ஆரம்பித்துள்ளார்கள்.
இதுவொரு புறமிருக்க, ஐக்கிய தேசியக் கட்சியிடம் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை பாதுகாக்கும் பொறுப்பும் மைத்திரியிடமே இருக்கின்றன. ஆனால் அவர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பாக செயற்படுகின்றார் என கூட்டு எதிர்கட்சியினர் எதிர்த்து குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
இன்னொருபுறத்தில் குடும்ப அரசியலில் மைத்திரி ஈடுபடுவதாக பல குற்றச்சாட்டுக்கள் மேல் எழுந்துகொண்டிருக்கின்றன. அதற்கு வலுச்சேர்ப்பதாக அவரது மகள் சதுரிகா சிறிசேன பல்வேறு அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொண்டிருப்பதை முன்னுதாரணமாக காட்டுகின்றார்கள்.
இவை யாவற்றுக்கும் மேலாக இரண்டு பிரதான தலையிடியினை கொடுக்க கூடிய சிக்கல்களை மைத்திரி, ரணில் அரசாங்கம் எதிர் கொண்டுள்ளது.
ஒன்று பாதாள உலக கும்பலின் அட்டகாசம், மற்றையது மின்தடை.
இலங்கையின் அரசியலில் அதிக தாக்கத்தையும், வீழ்ச்சியையும் கொடுக்க கூடிய மிக முக்கியமான பிரச்சினையாகவே இவை தற்பொழுது மாறியிருக்கின்றன.
நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்று ஒருவருடத்திற்குள் இலங்கையின் பல்வேறு இடங்களிலும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், நடத்தப்பட்டுள்ளன. இதுபோதாது என்று, கொள்ளைச் சம்வங்களும், போதைப் பொருள் கடத்தல்களும் அதிகரித்துக் கொண்டே போகின்றன.
நாட்டின் தலைநகரத்தில் போதைப்பொருளும், கொள்ளையும், கொலையும் நடந்து கொண்டிருப்பதை பொது எதிரணியினர் தூக்கிப் பிடிக்க ஆரம்பித்துள்ளனர். சர்வதேச அழுத்தங்களும் தற்பொழுது வந்து குவிந்து கொண்டு தான் இருக்கின்றன.
தவிர, மின்சார தடையில் மைத்திரி அரசாங்கம் தவித்துக் கொண்டிருப்பது போல் தோன்றுகின்றது. ஆட்சி அமைத்து ஓராண்டுக்குள் மூன்று தடவை நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்ட சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. பலகோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்திய ஒன்றாக இந்த மின்தடை அமைந்துள்ளது.
பல்வேறு தரப்பினரும், இப்பொழுது இந்த மின்தடைக்கு விசனம் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். மின்தடையால் அரசாங்கம் எதிர்கொள்ளும் சிக்கல்களை சமாளிக்கவே மின்சார சபையின் தலைவர் தான் பதவி விலகுவதாக அறிவித்திருக்கின்றாரோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
ஆனால் மின்தடையிலும் சூழ்ச்சியிருப்பதாக அமைச்சர் அஜித் பெரேரா கருத்துத் தெரிவித்திருக்கின்றார்.
இந்த பாதாள உலக கும்பல்களின் அட்டகாசத்திலும் மின்தடையிலும் உண்மையில் சூழ்ச்சியிருப்பது போலவே தோன்றுகின்றது. மைத்திரி ரணில் அரசாங்கத்திற்கு எவ்வாறெல்லாம் நெருக்கடிகளை கொடுக்க முடியுமோ அவ்வாறெல்லாம் நெருக்கடிகளைக் கொடுத்து அரசியல் செய்யவிடாமல் தடுப்பதே இதன் நோக்கம் என்பதையும் உணர முடிகின்றது.
அதற்கு ஏற்றால் போல் தற்பொழுது கூட்டு எதிர்க்கட்சியினர் எதிர்த்து குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
குறிப்பாக நல்லாட்சி என்கிற இந்த அரசாங்கத்தில் மின்சாரத்தைக் கூட ஒழுங்காக வழங்கமுடியாத நிலையில் இருக்கிறது என்றும், பொருட்களின் விலைகள் மற்றும், பாதாள உலக கும்பல்களின் செயற்பாடுகளால். நாடு சீரழிந்து போய்க்கொண்டிருப்பதாகவும் அவர்கள் பேசத் தொடங்கியிருக்கின்றார்கள்.
ஆனால் இந்தப் பிரச்சினையினை எவ்வாறு மைத்திரி ரணில் அரசாங்கம் கையாளப்போகின்றது என்பது தான் பெரிதான கேள்வியாக உள்ளது.
இதற்கிடையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சி அதிகாரத்தை என்னிடம் ஒப்படையுங்கள் நிர்வாகத்தினை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பாக கற்பிப்பதாக நக்கலாக கூறியுள்ளார்.
மொத்தத்தில் மைத்திரி, ரணில் அரசாங்கத்திற்கு இந்த பிரச்சினைகளைக் கொண்டு நெருக்கடிக்குள் தள்ளிவிடலாம் என்றே மகிந்த ராஜபக்சவும், அவர் தரப்பும் யோசித்துக் கொண்டிருக்கின்றன.
தமக்கான சந்தர்ப்பம் எப்போது கிடைக்கும் எனக் காத்திருந்த அவர்களுக்கு இப்பொழுது கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாளை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தினை நடத்தினாலும் ஆட்சரியப்படுவதற்கு இல்லை
மீண்டும் மின்சாரத்தடை ஏற்பட்டால் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்புவேன்!- பிரதமர் ரணில்
நாட்டை நெருக்கடிக்குள்ளாக்கும் இன்னொரு மின்சாரத் தடை ஏற்படுமானால், பல உயர் அதிகாரிகள் வீட்டுக்குச் செல்ல நேரிடும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களை நேற்றுச் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஏற்பட்ட மின்சாரத் தடைகளுக்கு மின்சார சபை உயர் அதிகாரிகளின் சதியே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு எச்சரித்துள்ளார்.
அதேவேளை மின்சாரத் தடைக்கான காரணங்களைக் கண்டறிவதற்கான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த விசாரணைகளில், மின்சாரத் தடைக்கு சதித் திட்டங்களே காரணம் என்று கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர்கள் பலரும் எச்சரித்துள்ளனர்.
ரவிராஜ் கொலை வழக்கு: மேல் நீதிமன்றுக்கு மாற்றம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது சாரதி படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான நீதவான் விசாரணை பூர்த்தியான நிலையில், மேலதிக விசாரணைக்காக மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இவ்வழக்கில், கடற்படை வீரர்கள் உட்பட 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்குப் போதியளவான சாட்சிகள் உள்ளன என்றும் இவ்வழக்கை மேல் நீதிமன்றத்துக்கு மாற்றுவதாகவும், இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே குறிப்பிட்டார்.
அத்துடன், சந்தேகநபர்களை எதிரவரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.