திருகோணமலையில் இளைஞனின் சடலம் மீட்பு!
திருகோணமலை கன்னியாப் பிரதேசத்தில் இளைஞனின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இச்சடலம் திருகோணமலை கன்னியாப்பிரதேசத்தில் புதுக்குடியிருப்பு – வரோதயநகர் பகுதியில் இன்று காலை 6.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட இளைஞர் 19 வயதுடைய கரிதாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இச்சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட என்ற குற்றச்சாட்டின் பேரில், 28 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை, பாம்பன் மற்றும் தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த மீனவர்களே, இவ்வாறு காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்
தங்கொட்டுவ விவகாரம்: ஐவர் கைது
தங்கொட்டுவ பகுதியில், வான் ஒன்றுக்குள் இருந்து ஐந்து சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளின் போது, குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (11), வான் ஒன்றுக்குள் இருந்து கருகிய நிலையில் ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
சிறுமிக்கு சூடு; தந்தையும் வளர்ப்புத்தாயும் கைது
மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதேசத்தில் 10 வயதுடைய சிறுமியொருவருக்கு சூடு வைத்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையையும் வளர்புத்தாயையும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
காத்தான்குடி ஆறாம் குறிச்சியில் வசிக்கும் சிறுமியொருவருக்கு அவரது செவிலித்தாய் நெருப்பால் சூடு வைத்ததாகவும் இதனால், அவரது உடம்பில் எரிகாயம் காணப்படுவதாகவும் காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்புப் பிரிவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை (11) தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் சிறுமியின் வீட்டுக்குச் அவரை விசாரித்ததுடன், சிறுமியின் தந்தை மற்றும் வளர்ப்புத்தாயிடமும் விசாரணை செய்தனர்.
இந்நிலையில், சிறுமியையும் சிகிச்சைக்காக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தமக்கும் தகவல் வழங்கப்பட்ட நிலையில் விசாரணை செய்து மேற்படி இருவரையும் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சிறுமியின் தாய் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். இதன் பின்னர், சிறுமியின் தந்தை மற்றுமொரு திருமணம் செய்த நிலையில் முதல் மனைவியின் இரண்டு பிள்ளைகளும் வளர்ப்புத்தாயிடம் வளர்ந்து வந்துள்ளனர்.
மகனின் தாக்குதலில் தந்தை பலி
35 வயதான மகனொருவனின் தாக்குதலில் 62 வயதான அவருடைய தந்தை பலியான சம்பவம் ஹப்புத்தளை, தம்பேதென்ன மாவுஸ்ஸாகொல்ல பிரதேத்தில் இடம்பெற்றுள்ளது.
குடும்ப பிரச்சினை, கைகலப்பாக மாறியதையடுத்தே தந்தையை மகன் தாக்கியுள்ளதாக தெரியவருகின்றது.
சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவரை, பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை மீனவர்கள் மூவர் கைது
சங்கமன்கந்தை மற்றும் திருக்கோவில் பிரதேசங்களுக்கு அண்மித்த கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் மூவரை நேற்று சனிக்கிழமை கைதுசெய்ததாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு பயன்படுத்திய ஒரு சோடி துடுப்புகள், ஜீ.பி.எஸ் கருவி, கடலில் முக்குளிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒக்சிஜன் சிலிண்டர் 10 மற்றும் 26 சங்குகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் கூறினர்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் என்பன மேலதிக விசாரணைக்காக ஒலுவில் உதவி கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் கூறினர்.