வெள்ளைக்கொடி விவகாரத்தில் உண்மையான விசாரணைகளை முன்னெடுத்தால் முதல் குற்றவாளியாக சரத் பொன்சேகாவே சிக்குவார் என முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்டப் போர் தொடர்பாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
”சரத் பொன்சேகா ஒரு நல்ல அரசியல்வாதியோ அல்லது நல்ல இராணுவத் தளபதியோ அல்ல. அவர் எந்த நிலையிலும் விலைபோகக் கூடியவர்.
அவர் பலமான நபராகவோ மக்களின் ஆதரவை பெற்றிருந்த நபராகவோ இருந்திருந்தால் கடந்த 2010ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்தலில் அவர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்.
போர் நடந்த காலகட்டத்தில் அவர் இராணுவத் தளபதியாக இருந்துள்ளார். ஆனால் போரை முன்னெடுத்துச் சென்றவர் என்று கூறுவதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது.
அவர் மட்டும் தலைமை தாங்கி போரை முடிக்கவில்லை. எமது அரசாங்கம் வழிநடத்தியது. கோத்தாபய ராஜபக்ச வழிநடத்தினார்.
மாறாக சரத் பொன்சேகாவை என்ற தனிநபரை போரின் நாயகனாகப் பார்க்கின்றதை ஒருபோதும் ஏற்க முடியாது.
சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் பொய்.
மகிந்த ராஜபக்ச மீதும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீதும் வைராக்கியத்துடனும் பழிவாங்கும் நோக்கத்துடனும் மாத்திரமே உள்ளார் என்பதை அவரது உரை காட்டுகிறது.
விடுதலைப் புலிகளைப் பலப்படுத்த ராஜபக்ச குடும்பம் பணம் கொடுத்ததாக கூறுவது முழுமையான பொய்.
பசில் ராஜபக்சவோ,கோத்தபாய ராஜபக்சவோ புலிகளுடன் நெருக்கத்தை பேணியிருந்தால் அப்போதே அவர் இதை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.
நாட்டின் மீதும் இராணுவத்தின் மீதும் பற்று கொண்டவர் ஏன் அப்போது இந்த உண்மைகளை மறைக்க வேண்டும். அப்படியாயின் அவரும் புலிகளுக்கு உடந்தையாக செயற்பட்டிருக்க வேண்டும்.
வெள்ளைக்கொடி விவகாரத்தில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கூறுகிறார். இந்த விவகாரத்தில் உண்மையான விசாரணைகளை முன்னெடுத்தால் இந்த குற்றச்சாட்டில் முதல் குற்றவாளியாக சரத் பொன்சேகாவே சிக்குவார்.
அவரின் தலைமையில் இடம்பெற்ற மிகப்பெரிய குற்றம் இது என்பதை என்பதை மறந்து விட்டோ அல்லது இந்த விவகாரத்தில் அவர் மீது இருக்கும் குற்றங்களை மறைத்து விட்டோ செயற்பட பார்க்கிறனர்.
மகிந்த, கோத்தபாய ஆகியோரை பழிவாங்கும் எண்ணத்தில் அவர்களை போர்க்குற்றவாளிகள் என்று தண்டிக்கவே முயற்சிக்கிறார்.
மிகவும் மோசமான பயங்கரவாதிகளுடன் போரிடும் போதும், பல இலட்சம் தமிழ் மக்களை காப்பாற்றும் மனிதாபிமான போராட்டத்தின் போதும் ஒரு சில தவறுகள் நடைபெறும். அதை தவிர்க்க முடியாது.
இந்த கருத்தை பல்வேறு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். டெஸ்மன் டி சில்வா தனது அறிக்கையிலும் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான சிறுசிறு காரணிகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு மனித உரிமை மீறல்கள் நடந்தேறியது என கூறுவதை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
போர் முடிவுக்கு வந்த பின்னரும் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உயிருடன் இருந்தார் என சரத் பொன்சேகா தெரிவித்ததும் பொய்.
பிரபாகரன் கொல்லப்பட்டது உறுதியான பின்னரும், கொல்லப்பட்டது அவர் தான் என பல தடவைகள் உறுதிப்படுத்திய பின்னருமே நாம் போர் வெற்றியை அறிவித்தோம்.
பிரபாகரன் கொல்லப்பட்ட போது சரத் பொன்சேகா அங்கு இருக்கவில்லை. நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச போர் வெற்றியை அறிவித்த பின்னரே சரத் பொன்சேகா அறிந்து கொண்டார்.
மகிந்த ராஜபக்சவையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் பழிவாங்கும் ஒரே நோக்கத்தில் சரத் பொன்சேகா செயற்படுகிறார். அடிமட்ட நிலைக்கு அவர் இறங்கியுள்ளார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொன்சேகா வெளியிட்ட தகவல்களை மறுக்கும்: பசில்
.
முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல்கள் அப்பட்டமான பொய் என்று மறுத்திருக்கிறார் இலங்கைவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச.
“2005 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெறுவதற்காக, விடுதலைப் புலிகளுக்குப் பணம் கொடுத்ததாக நான் ஒருபோதும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் கூறவில்லை. அரசியல் இலாபம் தேடும் வகையில் அவரது குற்றச்சாட்டுக்கள் அமைந்திருக்கின்றன.
பொன்சேகா நாடாளுமன்றத்தில் கூறிய குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை. அவை முற்றிலும் பொய்யானவை. அவர் கூறுவது போன்று எந்தவொரு சம்பவமும் இடம்பெறவில்லை.
அத்துடன், விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்ததாகவும், அதனை நான் பொன்சேகாவிடம் கூறியதாகவும் சொல்லப்படுகின்ற கதை அப்பட்டமான பொய். அவ்வாறு எந்த விடயத்தையும் அவரிடம் நான் கூறவில்லை.
சரத் பொன்சேகா இந்தக் குற்றச்சாட்டுக்களை சொந்தமாக கூறவில்லை. நீண்டகால இலக்கு ஒன்றை குறிவைத்து மேற்கொள்ளப்படும் அரசியல் வேட்டையாடல் நடவடிக்கையாகவே இதனைக் கருத வேண்டும்.
புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்கத்தை மீண்டும் மக்களிடம் கையளிக்கும் நடவடிக்கைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதால் அது பற்றிய மேலதிக தகவல்கள் எனக்குத் தெரியாது.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சர் என்ற வகையில், கூட்டுப் பொறுப்பின் அடிப்படையில்,பொன்சேகாவின் குற்றச்சாட்டை மறுக்கின்றேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரபாகரனுக்கு உண்மையில் என்ன நடந்தது அமைச்சர் மகிந்த சமரசிங்க
.
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கு உண்மையில் என்ன நடந்தது என்ற உண்மைகளை கண்டறிய வேண்டும் என இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று, இலங்கைவின் முன்னாள் இராணுவத் தளபதியான அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மகிந்த சமரசிங்க,
“இத்தனை காலமாக வெளிவராத உண்மைகள் இன்று உரிய நபரின் மூலமாக வெளிவந்திருப்பது முக்கியமான திருப்புமுனையாக உள்ளது.
இறுதிப்போரை வழிநடத்திய அப்போதைய இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா மூலமாக இவ்வாறு கருத்துகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றதையிட்டு அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது ஆரோக்கியமானது. ஆனால் போரை எவ்வாறு முடித்தனர் என்பதில் தான் அனைத்துலக தரப்பில் இருந்து கேள்வி எழுந்துள்ளது.
போரின் இறுதித் தருணங்களில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக, இதுவரை மகிந்த ராஜபக்ச தரப்பு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், போரை முன்னெடுத்து சென்ற தளபதியே இறுதி தருணத்தில் குற்றங்கள் இடம்பெற்றன எனவும் வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பாக அனைத்துலக விசாரணை வேண்டும் எனவும் கூறுவதை சாதாரணமாகக் கருதக்கூடாது.
அனைத்துலக தரப்பின் பரிந்துரைகள் தொடர்பாக நாம் கவனத்தில்கொண்டு செயற்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.
இறுதிப் போரில் மோசமான தவறுகள் நடைபெற்றிருந்தால் உண்மையான குற்றவாளிகள் யார் என இனங்காணப்பட்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சரத் பொன்சேகா முன்வைத்துள்ள கருத்துக்களை ஆதாரமாகக் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும்.
இறுதிப் போரில் இலங்கை இராணுவம் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டிருந்தால் அவை தொடர்பாக விசாரிக்க வேண்டும்.
இறுதிக் கட்டத்தில் ஒரு சிலரின் தூண்டுதலின் பேரிலோ அல்லது புகழையும் பெயரையும் தக்கவைக்கும் வகையிலோ, ஒருசிலர் மோசமான வகையில் செயற்பட்டிருந்தால், சரத் பொன்சேகா கூறியதைபோல் மோசமான வகையில் இவர்கள் மக்களை கொன்று குவித்திருந்தால், அந்த குற்றங்கள் தொடர்பாக தனிப்பட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஒருசிலர் செய்ததாக கூறப்படும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த இராணுவத்தையும் குற்றவாளிகளாக நிறுத்த முடியாது.
இராணுவத்தை தலைமை தாங்கும் எவரேனும் தமது தனிப்பட்ட அதிகாரத்தில் மக்களை அழித்திருந்தால் அதை கண்டறிந்து அவர்களை தண்டிக்க வேண்டியது எமது கடமையாகும்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதி நேரத்தில் உயிருடன் இருந்தாரா அல்லது கொல்லப்பட்டாரா என்ற உண்மைகளில் கூட இப்போது சந்தேகம் எழுந்துள்ளது. இந்த உண்மைகள் அனைத்தையும் கண்டறிய அரசாங்கம் முன்வரும்.
சமாதானம், நாட்டின் அமைதியான சூழல் மீண்டும் பாதிக்கப்படக் கூடாது. இப்போது வெளிவரும் உண்மைகளினால் மீண்டும் குழப்பகரமான சூழல் ஒன்று உருவாகிவிடக் கூடாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
படையினரின் எண்ணிக்கையை குறைக்கவில்லை- ருவான் விஜேவர்த்தன
.
இலங்கை இராணுவத்தினரின் ஆளணியைக் குறைக்க எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று, இலங்கைவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் உள்ள கெமுனுவோச் படைப்பிரிவின் முகாமில், நேற்று நடந்த இராணுவத்தினரின் குடும்பங்களுக்கான விருசர சிறப்புரிமை அட்டை வழங்கும் நிகழ்வில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
”இராணுவத்தினரை சிறையில் அடைத்து விட்டு புலிகளை விடுவிப்பதாக கூட்டு எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். நாம் அவ்வாறு செய்யவில்லை. அதற்கான தேவையுமில்லை.
கடந்த ஆட்சிகாலத்தில் தான் இராணுவத்தினர் கூலிப்படைகளாகவும் அரசியல்வாதிகளின் தேர்தல் பரப்புரைக்கான சேவையாளர்களாகவும் வீட்டு வேலைக்காரர்களாகவும் கடமை புரிந்தனர்.
அதனை இன்றைய அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வந்து முப்படைகளையும் மரியாதையுடன் நடத்துவதுடன் அவர்களின் நலனில் கூடுதல் அக்கறை கொண்டுள்ளது.
இலங்கைவின் சட்டம் அனைவருக்கும் சமமாகும். தவறு செய்தவர்கள் தண்டனை பெறுவார்கள். அதன்படி தவறு செய்த இராணுவத்தினர் நீதிமன்ற சட்டத்திற்குட்பட்டுள்ளனர்.
நீதிமன்ற, காவல்துறை நடவடிக்கைகளில் நாம் தலையிடுவதில்லை.
அனைத்துலக ரீதியில் இலங்கை படையினருக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இராணுவத்தினரை பாதுகாக்கவே கூட்டு அரசாங்கத்தை ஏற்படுத்தியுள்ளோம். இதனை தெரியாதவர்கள் தான் எம்மை குறை கூறுகின்றனர்.
வெளிநாட்டு நீதிபதிகள் எமது சட்டத்தில் தலையிட முடியாது. அவர்கள் மேற்பார்வையாளர்களாக கடமைபுரிய அனுமதிக்கலாம். அது கூட இதுவரை இறுதி தீர்மானத்திற்கு உட்படவில்லை.
இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நாம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தேசிய பாதுகாப்பிற்கும் எவ்விதமான இடையூறும் ஏற்படாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.