இறுதிப் போரில் 400 கிலோ தங்கம் மீட்பு!
இறுதிப்போரின் போது 400 கிலோவுக்கு மேற்பட்ட தங்கம் மீட்கப்பட்டதாக நாடாளுமன்றில் நேற்று தகவல் வெளியிட்ட அமைச்சர் சரத் பொன்சேகா, இவற்றுள் பெருந்தொகையான தங்கத்தை ராஜபக்ஷவினர் கொள்ளையடித்து விட்டனர் என பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். அத்துடன், தன்னால் கைப்பற்றப்பட்ட 220 கிலோகிராம் தங்கத்தின் உரிமையாளர்களின் பெயர், விவரங்கள் பொறிக்கப்பட்டிருந்தன என்று மேலும் தகவல் வெளியிட்ட அவர், தங்கம் விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இறுதிப்போரின் போது 400 கிலோவுக்கு மேற்பட்ட தங்கம் மீட்கப்பட்டதாக நாடாளுமன்றில் நேற்று தகவல் வெளியிட்ட அமைச்சர் சரத் பொன்சேகா, இவற்றுள் பெருந்தொகையான தங்கத்தை ராஜபக்ஷவினர் கொள்ளையடித்து விட்டனர் என பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். அத்துடன், தன்னால் கைப்பற்றப்பட்ட 220 கிலோகிராம் தங்கத்தின் உரிமையாளர்களின் பெயர், விவரங்கள் பொறிக்கப்பட்டிருந்தன என்று மேலும் தகவல் வெளியிட்ட அவர், தங்கம் விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று தனது கன்னி உரையை நிகழ்த்தியபோதே அமைச்சர் பொன்சேகா இந்தத் தகவலை வெளியிட்டதுடன், மேலும் தெரிவிக்கையில், "வடக்கில் 137 கிலோகிராம் தங்கம் கிடைக்கப்பெற்றதாக பிரதமரால் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பில் பிரதமருக்கு வழங்கப்பட்ட தகவலும் திரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஏனெனில், இறுதி யுத்தத்தில் நான் இராணுவத் தளபதியாக பதவி வகித்தபோது 220 கிலோகிராம் தங்கம் மீட்கப்பட்டது. இந்தத் தங்கத்தில் பெயர், விவரம் குறிப்பிடப்பட்டிருந்தது.
இருப்பினும், அப்போது ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட பஸில் ராஜபக்ஷ 110 கிலோகிராம் தங்கம் மீட்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். தங்கம் மீட்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயே நூற்றுக்கு 50 வீதம் கொள்ளையடிக்கப்பட்டு விட்டது. அதன்பின்னர் நான் இராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகிய பின்னர் பெருந்தொகை தங்கம் மீட்கப்பட்டது. சுமார் 400, 500 கிலோ தங்கம் மீட்கப்பட்டது. இவை அனைத்தும் ராஜபக்ஷவால் கொள்ளையடிக்கப்பட்டவை. எனவே, இது தொடர்பில் விசாரணை நடத்தவேண்டும்'' என்றார்.
எமிரேட்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது
அவுஸ்திரேலியாவிலிருந்து டுபாய் நோக்கிப் பயணித்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம், அவசரமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிரக்கப்பட்டது.
அதில் பயணித்த பயணியொருவர் திடீர் சுகயீனமடைந்தமையினால் குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சுமார் 7 மணித்தியாலங்கள் தரித்து நின்ற விமானம் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.
விமானம் தரித்து நின்றக் காலப்பகுதியில், பயணிகள் ஹோட்டலொன்றில் தங்கவைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது
ஐந்து சடலங்கள் மீட்பு
தங்கொடுவ பகுதியில் இன்று காலை வானொன்றிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் அடையாளம் காண முடியாதவாறு தீயினால் எரிந்து கருகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறாக 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை பொலிஸ் அவசர சேவை இலக்கமான 119ற்கு கிடைத்த தகவலொன்றுக்கமைய அங்கு சென்ற பொலிஸார் அந்த சடலங்களை மீட்டுள்ளனர்.
தீயினால் எரிந்து முற்றாக சேதமடைந்த வானுக்குள் சடலங்கள் இருந்துள்ளதுடன் வானுக்கு வெளியே இரத்த கரைகளும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையா அல்லது விபத்து சம்பவமா என பொலிஸார் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வழக்குகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்: பிரதமர்
சிறந்த சட்டத்தரணிகளை அமர்த்தி, வழக்குகளை எதிர்கொள்வதற்குத் தயாராகுங்கள் என்று கூட்டு எதிரணியைப் பார்த்து கேட்டுக்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, திருடர்கள் எதிர்வரும் மூன்று மாத காலப் பகுதிக்குள் வெளிப்படுத்தப்படுவர் என்றும் கூறினார்.
நாடாளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (11) வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது உதய கம்மன்பில எம்.பி, அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரான மலிக்சமர விக்கிரமவிடம் எழுப்பிய கேள்விக்கு தெளிவுப்படுத்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பங்குச் சந்தை மோசடி ஒன்று தொடர்பில் பிரான்ஸ் உயர்நீதிமன்றத்தினால் 2006ஆம் ஆண்டு குற்றவாளியாகக் காணப்பட்ட ஜோர்ஜ் சொரொ என்பவரை 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற பொருளாதார மாநாட்டுக்குச் சிறப்பு அதிதியாக அழைத்தது ஏன்? என உதய கம்மன்பில கேள்வியெழுப்பினார்.
அக்கேள்விக்குப் பதிலளிப்பதற்காக இரண்டு வார கால அவகாசம் தேவைப்படுவதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவிக்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெளிவுபடுத்தினார்.
ஜோர்ஜ் சொரொவை நாம் அழைக்கவில்லை. அந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு அவர் வந்திருந்தார். அவருக்கு ஒரு சதம் கூட நாம் வழங்கவில்லை. அவரது வருகை தொடர்பில் அவைக்கு முன்னரே நாம் அறிவித்திருந்தோம்.
இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் வெற்றிலை வைத்து அழைத்தனர். எனினும், அவர் வரவில்லை. இவரைப் போலவே பலரையும் அழைத்திருந்தனர். ஆனால், யாருமே வரவில்லை.
மோசடிக்காரர்கள், பங்குச் சந்தையில் களவெடுத்தவர்கள் எதிர்வரும் மூன்று மாதங்களில் வெளிப்படுத்தப்படுவர். எனவே, சிறந்த சட்டத்தரணிகளை அமர்த்தி வழக்குகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள் என்று கூட்டு எதிரணியைப் பார்த்துக் கூறினார்.