முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரையும், மார்ச் மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்ற நீதவான், இன்று உத்தரவிட்டுள்ளார்.
பசிலுக்கு உள்ளிட்ட இருவருக்கு பிணை
திவிநெகும நிதிமோசடியில் ஈடுபட்டார்கள் என்று குற்றஞ்சாட்ட முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஆகிய இருவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
இந்தோனேஷியாவில் இலங்கை பிரஜை கைது
அனுமதிப்பத்திரம் காலாவதியாகியும் இந்தோனேஷியாவில் தங்கியிருந்த இலங்கை பிரஜையை, இந்தோனேஷியாவின் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அமில ஸ்ரீனாத் ஜயதிலக்க என்ற 33 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தோனேஷியாவின் குடிவரவு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளாகவும் இவர் அங்குள்ள நிறுவனமொன்றில் முகாமையாளராக கடமையாற்றி வந்தார் என்றும் தெரியவருகின்றது.
உயர்பாதுகாப்பு வலயங்கள் இல்லை: பாதுகாப்பு அமைச்சு
'வடக்கு, கிழக்கு ஆகிய இரு மாகாணங்களிலும் உள்ள முப்படைகளினதும் முகாம்களை 2016ஆம் ஆண்டில் அகற்றுவது தொடர்பில் சரியான பதிலொன்றை வழங்க முடியாது' என்று பாதுகாப்பு அமைச்சு, நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (09) அறிவித்தது.
நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, 'வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள முகாம்களை இவ்வாண்டில் அகற்றுவது தொடர்பில் முடிவேதும் இருக்கின்றதா?' என ஜயந்த சமரவீர எம்.பி, பாதுகாப்பு அமைச்சிடம் கேள்விகளை கேட்டிருந்தார். அதற்கான பதில் சபைக்கு ஆற்றப்பட்டது.
'நாட்டின், வலையத்தின் சர்வதேசத்தின் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பை கவனத்தில் எடுத்தே ஷமுகாம்கள்... நிறுவப்படும். இதற்கு புலனாய்வு துறையின் அறிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படும'; என்றார்.
'இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பேணிவரப்படுகின்ற இராணுவ முகாம்களைச் சார்ந்ததாக உயர் பாதுகாப்பு வலயங்கள் எதுவும் இல்லை என்றும் அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019இல் புதிய கல்வி முறை: பிரதமர்
கல்வித் துறையை மேம்படுத்த வேண்டுமாயின், பயிற்றப்;பட்ட ஆசிரியர்களை பாடசாலைகளுக்குக் கொடுக்கவேண்டும் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2019இல் புதிய கல்வி முறைமையை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்போம் என்றும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில், நேற்று புதன்கிழமை(09) பிரதமரிடம் கேள்விகளைக் கேட்பதற்கான நேரத்தின்போது, எட்வட் குணசேகர எம்.பி கேட்டிருந்த கல்வி முறையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் தொடர்பிலான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதமர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
கடந்த காலத்தில், பாடசாலைகளுக்கோ, இன்றேல் மாணவர்களுக்கோ, தேவைக்கேற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. அரசியல் நியமனங்களே வழங்கப்பட்டன. அதிபர்கள் பலருக்கும் அரசியல் நியமனங்களே வழங்கப்பட்டுள்ளன.
பயிற்றப்பட்ட ஆசிரியர்கள், இன்னும் 10 வருடங்களுக்குள் ஓய்வு பெற்றுவிடுவர். இதற்கு இடைப்பட்ட காலப்பகுதிகளில் ஆசிரியர்கள் பயிற்றப்படவில்லை. பயிற்சியளிக்கும் நிறுவனங்களும் சீர்குலைந்துள்ளன. இந்த நிறுவனங்களைக் கட்டியெழுப்பவேண்டிய தேவையுள்ளது.
பாடசாலைகளில் நிலவுகின்ற வெற்றிடங்களுக்கு ஏற்ப பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்கவேண்டும்.
பட்டதாரிகளுக்கு, விடயதானங்களுக்கு ஏற்ப பயிற்சியளிக்க வேண்டும். பல்கலைக்கழகத்துக்குள்ளேயே பயிற்சியளிக்கும் முறையை உருவாக்கவேண்டும்.
க.பொ.த உயர்தரத்துக்குப் பின்னர் ஆசிரியராக்கி, 5,6 வருடங்களுக்குள் பட்டதாரியாக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். அக்காலப்பகுதிக்குள் பயிற்றப்பட்ட ஆசிரியராக மாற்றவேண்டும்.
இதனை அரசாங்கத்தால் மட்டும் செய்ய முடியாது. மாகாண சபைகளுடன் இணைந்தே செய்யமுடியும். விஞ்ஞானம், தொழிநுட்பமின்றி அபிவிருத்தி செய்யமுடியாது' என்றார்.
'இராணுவ முகாம் எதற்கு?'
'மன்னார் தள்ளாடி இராணுவ முகாமுக்கு அண்மையில் மன்னார் கூட்டுறவுத் திணைக்களத்தின் கட்டடத்தில் இராணுவம் இன்னுமிருக்கிறது. அந்த முகாம் எதற்கு, அதனை எப்போது அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்?' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான சார்ள்ஸ் நிமலநாதன் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பிரதமரிடம் கேள்வி கேட்பதற்கான நேரத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார். மன்னார் கூட்டுறவுத் திணைக்களத்துக்கு சொந்தமான கட்டடத்தில் இராணுவம் தங்கியுள்ளது. தற்போது மரக்கறிகளையும் விற்பனை செய்கிறது. அவ்விடத்திலிருந்து இராணுவம் எப்போது அகற்றப்படும். தள்ளாடி முகாமுக்கு 2 கிலோமீற்றர் தூரத்திலேயே இந்த முகாம் இருக்கிறது. இது எதற்கு என்று வினவினர்.
இதற்குப் பதிலளித்த பிரதமர், இராணுவத்துக்கு தேவையான மாற்றுக் காணி கிடைத்தவுடன் மன்னார் கூட்டுறவு திணைக்களத்துக்கு சொந்தமான கட்டடத்திலுள்ள இராணுவம் அகற்றப்படும் என்பதுடன் நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் கவனத்துக்கு கொண்டு வருகின்றேன் என்றார்.
'தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்'
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் சிலருக்கு எதிராக, நேற்றைய (09) தினம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது' என, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். அத்தோடு, 'கடந்த 15 நாட்களாக, கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்திய பின்னர்,
சட்டமா அதிபர் ஊடாக அவர்களுக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது' என்றும் அவர் கூறினார்.
ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம், கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்குச் சென்று, உண்ணாநிலைப் போராட்டத்தில் குதித்துள்ள கைதிகளின் நிலைமை தொடர்பில் ஆராய்ந்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து கூறுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த அவர் கூறியதாவது,
'உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். அதில் முக்கியமானது, எந்தவொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படாத நிலையில், தங்களை சிறையில் அடைத்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
இரண்டாவதாக, பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு புனழ்வாழ்வளிக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்ட பின்னர், மீண்டும் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ளமை மற்றும் வெளிநாடுகளில் தங்கியிருந்து, நாடு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.
கடந்த 15 நாட்களாக உண்ணாநிலைப் போராட்டத்தில் குதித்துள்ள இந்த கைதிகள், நீரை மட்டுமே அருந்தி வருகின்றனர். நான் அவர்களைப் பார்க்கச் சென்ற போது, உடலில் பலமில்லாத நிலையில், பாய்களில் சுருண்டு படுத்திருந்தனர்' என்று ஆளுநர் ரெஜினோல்ட் குரே மேலும் கூறினார்.
ஊடகவியலாளர்களுக்கு நியாயம் வழங்குவதற்கு விசேட குழு
கடந்த காலங்களில் துன்புறுத்தல்களுக்கும் கொடுமைகளுக்கும் உட்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பாக கண்டறிந்து நியாயம் வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 2005 ஜனவரி முதல் 2015 ஜனவரி வரையான காலப்பகுதிக்குள் தொழில்சார் ஊடகவியலாளராகப் பணியாற்றி அநீதிகள் மற்றும் துன்புறுத்தல்கள் அல்லது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் ஆகியவற்றை எதிர்கொண்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் இவ்விசேட குழுவின்மூலம் நிவாரணம் வழங்கப்படும்.
அநீதி இழைக்கப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களும் தமது தொழில்சார் அடையாளத்துடன், தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக உறுதிப்படுத்தக்கூடிய அனைத்து தரவுகள் மற்றும் தகவல்கள் ஆகியவற்றை ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைக்க முடியும்.
இவ்வனைத்துத் தகவல்களும் 2016 ஜூன் 15ஆம் திகதிக்கு முன்னர் எஸ்.ரி.கொடிகார, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், ஜனாதிபதி அலுவலகம், கொழும்பு என்ற முகவரிக்கு அனுப்பப்படல் வேண்டும்.
A.Raj