சடலங்களைப் போல கோவைகளும் மாயம்
அ..ராஜ்
பிரதமர் தெரிவிப்பு: வரி அதிகரிப்பு, கடன்சுமை, எதிர்பார்ப்புக் குறித்தும் அறிவிப்பு
மக்களின் ஜாதகம் உச்சத்தில் இருந்தது என்கிறார்
வரிக்கு வரி, குட்டிபோட்டது
கடனுக்குக் கடன், கன்று ஈன்றது
விலைகளைக் குறைக்கத் தயார்: ஆனால், அபாயகரமானது
ராஜபக்ஷ ரெஜிமென்டின் இறுதிப் பயணம்
2016ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை (பாதீடு) தயாரிக்கும் போது, நாட்டின் கடன் தொடர்பிலான முழுமையான அறிக்கை கிடைத்திருக்கவில்லை என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இது, இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற நிலைமைக்கு ஒப்பானதாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
'இறுதி யுத்ததில் பலர் காணாமல் போனார்கள். எனினும், அவர்கள் பலியாகிவிட்டதாகத் தகவல் கிடைத்தது. ஆனால், அவை உறுதிப்படுத்தப்படவில்லை. சடலங்களும் கிடைக்கவில்லை' என்று அவர் கூறினார்.
2015ஆம் ஆண்டு தேர்தலில், மக்கள் ஜாதகம் உச்சத்தில் இருந்தமையால், ராஜபக்ஷ ரெஜிமென்ட், இறுதிப் பயணம் செய்தது என்றும் பிரதமர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,
'நாட்டைக் கட்டியெழுப்ப முடியாத நிலையொன்றே உருவாக்கப்பட்டிருந்தது. அதனை ஜனவரி 8ஆம் திகதியன்று மாற்றியமைத்தோம். பொருளாதாரத்தில் அதல பாதாளத்தில் விழுந்திருக்கும் நாட்டை மீPட்டெடுப்பது என்பது மிகவும் கடினமானதாகும்.
நாடு, மலை போன்று கடனில் மூழ்கியிருக்கின்றது. நாட்டின் கடன் தொடர்பிலான அறிக்கையின்றியே, 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டது. இத்திட்டம் தயாரிக்கப்பட்டதன் பின்னரே, கடன் தொடர்பில் இன்னுமின்னும் அறிக்கைகள் எமக்குக் கிடைத்தன.
பல்வேறு நிறுவனங்களின் ஊடாக பெற்ற கடனை கடந்த அரசாங்கம், அரசாங்கத்தின் வருமானமாக காண்பித்து, அதனால் வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறை மற்றும் பெற்ற கடன் தொடர்பிலான உண்மையான அறிக்கைகள் எமக்கு கிடைக்கவில்லை.
அரசாங்கம் பெற்ற கடன் தொடர்பிலான அறிக்கைகள், இன்னும் இன்னும் கிடைப்பதனால் கடன் பெற்றிருப்பது 10 சதவீதம் இன்னும் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ராஜபக்ஷ ரெஜிமென்ட், அபிவிருத்தி என்று கூறிய போதிலும், பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் எதனையும் செய்யவில்லை. விமான நிலையத்தை நிர்மாணித்தனர், விமானங்கள் இல்லைஜ துறைமுகத்தை நிறுவினர், கப்பல்கள் இல்லை. ஆகக் குறைந்தது விமான, துறைமுகம் ஆகியவற்றுக்கு அண்மையில் கைத்தொழிற்சாலைகளை நிர்மாணிப்பதற்குக் காணிகள் கூட ஒதுக்கப்படவில்லை.
கடன் பொறிக்குள் சிக்கவைத்து விடுவதையே ராஜபக்ஷ ரெஜிமென்ட் செய்தது. ஆகையால் நாடு 9.5 டிரில்லியன் ரூபாய் கடன் பொறிக்குள் சிக்கிக்கொண்டுள்ளது.
அந்தப் பொறிக்குள் இருந்து விடுபடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அந்தச் சவாலை வெற்றிகொள்ள வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பாகும். உலக மக்களும் அதனையே விருப்புகின்றனர்.
மசகு எண்ணெய் விலை குறைந்துள்ளது. ஆகையால், எரிபொருட்களின் விலைகளைக் குறைக்குமாறு கோருகின்றனர். ஆனால், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு 365 மில்லியன் ரூபாய் கடனாகும்.
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதச் செயற்பாடுகள் காரணமாக மத்திய கிழக்கு வலய நாடுகள் அச்சுறுத்தல்களுக்கு முகங் கொடுத்துள்ளன. ஆகையால், எங்களுடைய தேயிலை ஏற்றுமதி கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது.
சீனாவின் பொருளாதார வீழ்ச்சி, எங்களுக்குத் தீமையாகவே இருக்கின்றது. ராஜபக்ஷ ரெஜிமென்ட் பெற்ற கடனை அடைப்பதற்குக் கடன் பெற்றது. கடனுக்கான கடன், கன்று ஈன்றது. வரிக்கு வரி, குட்டி போட்டது. இதனை இன்னும் இன்னும் முன்னெடுத்துச் செல்ல நாங்கள் தயாரில்லை.
கடனை அடைப்பதற்காக, கடந்த அரசாங்கம் பெற்றதை போல, நாமும் கடனைப் பெறுவதற்கு நாம் தயாரில்லை. வருமானங்களை அதிகரிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றறோம்.
புதிய வரி முறைகள் மற்றும் கூடுதலான வருமானத்தை ஈட்டுவதற்கான முறைகளை, 2017ஆம் ஆண்டிலாவது முன்னெடுக்க வேண்டும்
அதேபோல, அபிவிருத்தியை மேம்படுத்த வேண்டுமாயின், எங்களுடைய பொருளாதார வளர்ச்சியை 6 சதவீதமாக வைத்துக்கொள்ள வேண்டும்' எனத் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியா செல்ல முயன்றவர் கைது
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் இடம்பெயர்வதற்கு முயற்சி செய்த 31 வயதுடைய நபரை, குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (08) இரவு கைது செய்துள்ளனர்.
குறித்த கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் அவரை இன்று (09) நீர்கொழும்பு நீதிமன்ற நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குளியாப்பிட்டிய மாணவனுக்கு கண்டியில் கல்வி வாய்ப்பு
வடமேல் மாகாணத்துக்குட்பட்ட குளியாபிட்டிய பிரதேசத்தில், எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாகி, அவனது தந்தை இறந்ததன் பின்னர் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்த 6 வயது சிறுவனை, கண்டி திரித்துவக் கல்லூரியில் அனுமதிப்பதற்கு, அக்கல்லூரிக்கும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்துக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
2 மாதங்களுக்குள் மாறும் என்கிறார் மங்கள
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சர்வதேச விதிமுறைகளுக்கு அமைவாக இன்னும் இரண்டு மாதங்களுக்குள் புதியச் சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
'புதியச் சட்டமூலத்துக்கான நகல் வரைவு பணிகள் சட்ட ஆணைக்குழுவினால் நிறைவுசெய்யப்பட்டு, நீதியமைச்சருக்கு வரைவொன்று அண்மையில் கையளிக்கப்பட்டது.
காணாமல் போனோர் தொடர்பில், காணாமல் போதல் சான்றிதழை வழங்குவதற்கான சட்டத்திருத்தங்கள் நாடாளுமன்றுக்கு இன்னும் கொண்டுவரப்படவில்லை. அதனை விரைவில் கொண்டுவருவதான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும்' என்றார்.
வடமாகாண சபையின் அனுமதிக்காக காத்திருகின்றோம்: அமைச்சர்
'வட மாகாண சபையின் அனுமதி கிடைத்ததன் பின்னர் அடுத்த அமர்வின் போது, தகவலறியும் உரிமைச் சட்டமூலம், நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும்' என்று, வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, அமைச்சின் விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தகவலறியும் உரிமைச் சட்டமூலத்துக்கு அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக, சகல மாகாண சபைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.வட மாகாண சபையைத் தவிர ஏனைய மாகாண சபைகளின் அனுமதி கிடைத்தன. வட மாகாண சபை, எதிர்வரும் 10ஆம் திகதியே கூடும். அந்த மாகாண சபையின் அனுமதி கிடைத்ததன் பின்னர், நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வின்போது சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும்' என்றார்.
ஐ. ம. சுதந்திர முன்னணியின் பொதுச்செயலராக மகிந்த அமரவீர தெரிவு
.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புதிய பொதுச்செயலராக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவு செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் நேற்று
முன்னிரவு நடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்திலேயே இந்த தெரிவு இடம்பெற்றது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், இலங்கை மன்றக் கல்லூரியில் இந்தக் கூட்டம் இடம்பெற்றிருந்தது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாக இருந்த, பேராசிரியர் விஸ்வ வர்ணபால அண்மையில் காலமானதையடுத்தே, மகிந்த அமரவீர இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மகிந்த அமரவீர, மைத்திரிபால சிறி்சேன அரசாங்கத்தில் கடற்றொழில் அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார்.
முன்னர் மகிந்த ராஜபக்சவின் தீவிர ஆதரவாளராக இருந்த இவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த குடும்பத்தின் எதிர்ப்புக்கும் மத்தியில் போட்டியிட்டு, நாமல் ராஜபக்சவுக்கு அடுத்ததாக 84,516 விருப்பு வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டவர் என்பதும் சமல் ராஜபக்சவை மூன்றாவது இடத்துக்கு தள்ளியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது