'காணாமற்போனோர் தொடர்பான மரணச்சான்றிதழைப் பெற்றுக்கொண்டு, அதன் மூலம் நட்டஈடு பெற்றுக்கொள்ள முடியும்' என காணாமல்போனோரின் உறவினர்களிடம், காணாமற்போனரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின், சாவகச்சேரி அமர்வில் கலந்துகொண்ட காணாமற்போன உறவினர்களிடமே, ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவ்வதிகாரிகள், 'நீங்கள் விரும்பினால் மரணச் சான்றிதழ் எடுக்கலாம். அதன் மூலம் நட்டஈடும் பெற்றுக்கொள்ளலாம். அதற்காக நாங்கள் விசாரணையை கைவிடமாட்டோம். நாங்கள் தொடர்ந்தும் விசாரிப்போம். எங்கள் விசாரணைகளில் உங்கள் பிள்ளைகள் கிடைக்கப்பெற்றால், மரணச் சான்றிதழை இரத்துச் செய்வோம். ஆனால், வழங்கிய நட்டஈட்டைத் திரும்ப கேட்கமாட்டோம்' என்றனர்.
காணாமற்போன பெண்ணின் புகைப்படம் பேஸ்புக்கில் தரவேற்றம்
காணாமற்போன எனது மகள் சிவலிங்கம் அனுசியாவை வெலிக்கடைச் சிறைச்சாலையில் ஒருமுறை கண்டேன். அதன் பின்னர் முகப்புத்தகத்தில் இலக்கம் போடப்பட்டு, தரவேற்றியிருந்த படங்களையும் நான் பார்த்தேன் என, காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின், சாவகச்சேரி அமர்வில் சாட்சியமளிக்கச் சென்ற தாயொருவர் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது,
'கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றிய எனது மகளை, 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் திகதியன்று, விடுதலைப் புலி உறுப்பினர்கள் பிடித்துச் சென்றனர். தொடர்ந்து, ஸ்கந்தபுரம் பகுதியில் புலிகளில் சீருடையுடன் எனது மகளை கண்டேன். அதன் பின்னர் தகவல் இல்லை.
இந்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு, வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மகளைத் தேடிச் சென்று, பார்வையாளர்கள் காத்திருக்கும் பகுதியில் அமர்ந்திருந்தேன். அப்போது, வெள்ளை நிறம் கொண்ட உடுப்புக்களுடன் பெண்கள் நிற்பதைப் பார்த்தேன். அதில் எனது மகளை அடையாளங் கண்டேன். அங்கு, இராணுவத்தினரும் பொலிஸாரும் அதிகம் இருந்தமையால் நான் மகளை அழைக்கவில்லை. சிறிது நேரத்தில் அவர்களை வாகனம் ஒன்றில் ஏற்றிச்சென்றனர்.
அங்கு விசாரித்தபோது, நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிராக வழக்கு நடக்கின்றது அதற்காக ஏற்றிச் செல்கின்றோம் என்றனர். இந்நிலையில், 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பேஸ்புக்கில் எனது மகளின் புகைப்படங்களை ஒருவர் பதிவேற்றம் செய்திருந்தார்' என்று அந்த தாய் குறிப்பிட்டார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரை காணவில்லை
யாழ்ப்பாணம், வட்டுவாகல் பகுதியில் வைத்து இராணுவத்தினரிடம் சரணடைந்த தனது மகன் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை, இன்று வரை காணவில்லையென கதிர்காமசேகரம் என்ற முதியவர், காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில், இன்று (29) சாட்சியமளித்தார்.
சாவகச்சேரி பிரதேச செயலக மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (29) நடைபெற்ற இந்த சாட்சியங்களைப் பதிவு செய்யும் நிகழ்வின் போது, தொடர்ந்து சாட்சிமளித்த அந்த முதியவர் கூறியதாவது,
'எனது மகன் சத்தியமூர்த்தி, மருமகள் கவிதா, பேரப்பிள்ளைகளான தமிழ் முகிலன், தமிழ் அன்டன், இறைநிலா மற்றும் நான், வட்டுவாகல் பகுதியிலுள்ள இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் 2009 மே மாதம் 18ஆம் திகதி சென்றோம். இதன்போது, புலிகள் அமைப்பில் ஒருநாளேனும் இருந்தவர்களை வந்து சரணடையுமாறு இராணுவத்தினர் அறிவித்தனர்.
விடுதலைப் புலிகளின் மரக்காலையில் முகாமையாளராக கடமையாற்றிய காரணத்தால் எனது மகன் சரணடைந்தார். அவரை விட்டு வரமாட்டேன் என மருமகளும் அவரது குழந்தைகளுடன் சென்றார். அவர்கள் ஐவரையும் பஸ் ஒன்றில் ஏற்றினார்கள். என்னை, முகாமுக்குச் செல்லுமாறும் விசாரணை முடிய தாங்கள் வருவோம் என்றும் கூறிச் சென்றனர். ஆனால் இன்றுவரை அவர்கள் திரும்பிவரவில்லை' என்று சாட்சியமளித்தார்.
வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கும் புனர்வாழ்வு!
ஓர் அமைப்புக்கு எதிராகவே இராணுவம் செயற்பட்டதே தவிர தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் ஒரு போதும் செயற்பட்டதில்லையென புனர்வாழ்வு அதிகாரி மேஜர் ஜெனரல் ஆர்.எம்.ஜே.ஏ.ரத்நாயக்க தெரிவித்தார்.
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் கடந்த ஒரு வருடங்களாக புனர்வாழ்வு பெற்று வந்த முன்னாள் போராளிகள் 14 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிகழ்வு வவுனியா பூந்தோட்ட புனர்வாழ்வு முகாம் பொறுப்பதிகாரி கேணல் எம்.ஏ.ஆர்.கமிடோன் தலைமையில் நடைபெற்றது.
புனர்வாழ்வு அதிகாரி மேஜர் ஜெனரல் ஆர்.எம்.ஜெ.ஏ.ரத்நாயக்கா இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது.
2009ம் ஆண்டிலிருந்து 2015 வரை 12 ஆயிரம் போராளிகளை புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைத்துள்ளோம்.
இவ்வேலைத்திட்டத்திற்கு தனியான நிறுவனங்களோ, திணைக்களங்களோ முன்வராததால் இராணுவத்திடம் இப்பணி கையளிக்கப்பட்டது.
இராணுவம் இவ்வேலைத்திட்டத்தை சரியாக செய்துள்ளதுடன் இப்போது புனர்வாழ்வு நிலையத்தில் 300 பேர் மாத்திரமே புனர்வாழ்வு பெற்று வருகின்றனர். அவர்களும் வெகு விரைவில் சமூகத்துடன் இணைக்கப்படுவார்கள்.
அத்துடன் சிறையிலிருப்பவர்கள், வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கும் புனர்வாழ்வு அளிக்க தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் செயற்படவில்லை. பயங்கரவாத அமைப்பிற்கு எதிராகவே செயற்பட்டது.
இதேபோன்று ஜே.வி.பி. இயக்கத்திற்கு எதிராக இராணுவம் செயற்ப்பட்டதே தவிர சிங்கள மக்களுக்கு எதிராக செயற்படவில்லை.
ஆகவே இராணுவத்தற்கு எதிராக தமிழ் மக்கள் கோபமோ, வைராக்கியமோ கொள்ளக்கூடாது. எங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட வேலையை மாத்திரமே நாங்கள் நிறைவேற்றினோம்.
எனவே நாங்கள் இலங்கையர்கள் என்ற எண்ணத்துடன் செயற்பட்டு நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச்செல்ல வேண்டும்.
ஜே.வி.பி.யுடன் யுத்தம் செய்து அவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டார்கள் ஆனால் சமூகம் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஜே.வி.பி. அமைப்பின் கிளர்ச்சி முடிவடைந்து அவர்கள் தேர்தலில் போட்டியிட்டார்கள் இன்று எத்தனை பேர் பாராளுமன்றத்தில் உள்ளனர்? சமூகம் அவர்களை ஏற்றுக் கொண்டதா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
கடந்த 30 வருடகால யுத்தம் எந்தவிதமான நன்மையையும் பெற்றுத் தரவில்லை .யுத்தத்தால் பொருளாதாரத்தில், கலாசாரத்தில் நாடு 30வருடங்கள் பின்தங்கிவிட்டது.
இவ்யுத்தத்தில் மூவின மக்களுமே பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இராணுவத்தை பொறுத்தமட்டில் நாட்டின் அபிவிருத்தியே முக்கியம்.
அத்துடன் இராணுவம் போராளிகளுக்கான புனர்வாழ்வு பணியை வெற்றிகரமாகவும் நிறைவாகவும் செய்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.