மஹிந்தாவின் புதிய பயணம் தொடங்கியது! அலுவலகம் திறப்பு காட்டிக்கொடுக்கும் அரசுக்கு எதிராகப் போராட்டம்!
முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் விவகார மற்றும் மக்கள் தொடர்புக் காரியாலயம் இன்று பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் திறந்து வைக்கப்படவுள்ளது.
குறித்த நிகழ்வு மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் திறப்புவிழாவில் கூட்டு எதிர்க்கட்சிகளின் பிரமுகர்களும் மற்றும் மஹிந்த அணி ஆதரவாளர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டையும் இராணுவத்தையும் காட்டிக்கொடுக்கும் அரசுக்கு எதிராகப் போராட மகிந்த அறைகூவல்
நாட்டையும் இராணுவத்தையும் காட்டிக்கொடுக்கும் அரசாங்கத்திற்கு எதிராக போராட அனைவரையும் தம்முடன் ஒன்றிணைய வேண்டும் அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.
அவர் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றில், மேலும் தெரிவித்திருப்பதாவது-
2015 ஆம் ஆண்டில் ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதாக, அண்மையில் சிறிலங்கா வந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் சிறிலங்கா அதிபரும், பிரதமரும் உறுதியளித்துள்ளனர்.
சிறிலங்கா அரசாங்கத்தினதாக ஏற்றுக்கொண்டு மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றிக் கொண்டதே இந்த தீர்மானத்தின் சிறப்பு அம்சமாகும்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம், சிறிலங்காவுக்கு எதிரான இந்த தீர்மானம் தொடர்பில் செயற்பட்ட விதமானது 2002 ஆம் ஆண்டில் போர் நிறுத்தத்திற்காக செயற்பட்டதை போன்றே காணப்படுகிறது.
இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் அதனை மாற்றியமைப்பதற்கு ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா பிரதிநிதி செயற்பட்ட போதிலும், அதற்கு தடை ஏற்படுத்தி அமெரிக்காவின் தயாரிப்பின் பிரகாரமே நிறைவேற்றிக் கொள்வதற்கு அரசாங்கம் செயற்பட்டது.
சிறிலங்காவுக்கு எதிரான அமெரிக்காவின் இந்த தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் செய்யாது நிறைவேற்றி கொண்டு அதனை பாரிய இராஜதந்திர வெற்றியாக மக்களுக்கு காண்பிக்க முற்பட்டாலும் , 1815 ஆண்டில் உடரட்ட ஒப்பந்தத்தை (கண்டியப் பிரகடனம்) போன்று நாட்டை காட்டிக்கொடுத்த ஒன்றாகவே அமைந்தது.
ஜெனிவா தீர்மானத்தின் ஊடாக அரசாங்கம் நிறைவேற்ற உள்ள விடயங்கள் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்த வேண்டியதுள்ளது. இந்த தீர்மானத்தின் 1,4,6,7,8 மற்றும் 12 ஆகிய பிரிவுகளின் பிரகாரம் தமிழ் மக்களை கொலை செய்தமை , அவர்களை சித்திரவதை செய்தமை மற்றும் வடக்கில் திட்டமிட்டு உணவு தட்டுப்பாட்டை ஏற்படுத்தியமை உள்ளிட்ட போர் குற்றங்கள் புரிந்துள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் வெளியிடப்பட்ட பக்கச்சார்பான அறிக்கையை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அந்த போர் குற்றங்களை விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அமைத்தல் அதற்கு அனைத்துலக நிதி உதவியை பெற்றுக் கொள்வதற்கும் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
அது மாத்திரமன்றி போர்க்குற்றம் புரிந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் இராணுவத்தினரை, போர்க்குற்ற நீதிமன்றத்திற்கு அழைப்பதற்கு போதிய சாட்சி இல்லாத நிலையிலும் , அவர்களை இராணுவத்தில் இருந்து நீக்குவதற்கும் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
அதேபோன்று சிவில் பாதுகாப்பு சட்டத்தை மறுசீரமைக்கவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்யவும் அரசாங்கம் விருப்பத்தை வெளியிட்டுள்ளது.
ஜெனிவா தீர்மானத்தின் 16,18, மற்றும் 20 ஆகிய பிரிவுகளின் பிரகாரம் சிறிலங்காவின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்காக அதிகாரத்தை பகிரவும் அதனை ஐ.நா மனித உரிமைகள் பணியகத்தின் மேற்பார்வையில் முன்னெடுக்கவும் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் என்பது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விமர்சனத்திற்கு உள்ளான ஒன்றாகும். மேற்குலக சக்திகளின் நிதியில் தங்கி இருப்பதாக கூறி அதனை மாற்றியமைக்க ஒவ்வொரு ஆண்டும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே சிறிலங்காவுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
ஜெனிவா தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதன் ஊடாக நாட்டிற்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை என மக்களுக்கு காண்பிக்க சிறிலங்கா அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது .
போர்க்குற்ற விசாரணைப்பொறிமுறை தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோர், கடந்த நாட்களில் அனைத்துலக ஊடகங்களுக்கு முரண்பாடான கருத்துக்களை கூறியதை அவதானிக்க முடிகிறது.
ஆனால் சிறிலங்கா அதிபரின் சுதந்திர நாள் உரையில் ஜெனிவா தீர்மானம் தொடர்பில் பிரதமருக்கும் அதிபருக்கும் இடையில் கருத்து முரண்பாடு உண்மையாகவே இல்லை என்பது வெளிப்படுகிறது.
நாட்டின் ஜனநாயகம் , நல்லிணக்கம் மற்றும் இராணுவத்திற்கான கௌரவம் ஜெனிவா தீர்மானத்தை செயற்படுத்துவதன் ஊடாக வளர்ச்சி அடையும் என சிறிலங்கா அதிபர் தனது சுதந்திர நாள் உரையில் கூறியிருந்தார்.
அதன் பின்னர் பெப்ரவரி 6 ஆம் நாள் சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஊடக சந்திப்பின் போது ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த சிறிலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.
போர் வெற்றிக்கு எனது தலைமையிலான சிறிலங்கா சுதந்திர கட்சியின் அரசாங்மே காரணமாகும். போருக்கு அனைத்து வகையிலும் இடையுறு ஏற்படுத்திய ஐக்கிய தேசிய கட்சி எமது கட்சியை அடிமைப்படுத்தியுள்ளமை தொடர்பில் கவலை அடைகின்றேன்.
2007 ஆம் ஆண்டில வரவுசெலவுத் திட்டத்தை தோல்வியடைய செய்து அரசாங்கத்தை கவிழ்த்து போரைநிறுத்த ஐக்கிய தேசிய கட்சி எடுத்த முயற்சியை யாரும் மறந்து விட முடியாது.
இந்தநிலையில் இவர்களின் இன்றைய செயற்பாடுகளை கண்டு நான் ஆச்சரியப்பட போவதில்லை.
ஆனால் சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஒரு பகுதியினர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து நாட்டை காட்டிக்கொடுக்கின்றமையை நினைத்து வேதனையடைகின்றேன்.
நாட்டையும் இராணுவத்தையும் காட்டிக்கொடுக்கம் அரசாங்கத்திற்கு எதிராக போராட மக்கள் எம்முடன் ஒன்றிணைய வேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்