விசாரணையை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயச் சூழல் ; இந்தியாவும் விரும்பவில்லை
08 Feb,2016
விசாரணையை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயச் சூழல் ; இந்தியாவும் விரும்பவில்லை
ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானத்துக்கு அமைவாக போர்க்குற்ற விசாரணையை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டிருப்பதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் செயத் ரா-அத் அல் ஹூசைனின் கொழும்பு விஜயத்தின் பின்னர் இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் இதனால் நல்லாட்சி அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் தோன்றியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சில அமைச்சர்கள் ஆணையாளர் அல் ஹூசைன் யாழ்ப்பாணம் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்குச் சென்றமை தொடர்பாக அதிருப்பதியடைந்துள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் சிலரும் விரும்பவில்லை. இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் மூத்த அமைச்சர்கள் சிலர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வாதாடியதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
குறிப்பாக போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிபதிகள், சர்வதேச நிபுணர்கள் ஆகியோர் அடங்கிய கலப்புமுறை நீதிமன்றத்திற்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றும் உள்ளக பொறிமுறை ஒன்றின் மூலமே போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்படும் என்பதை ஆணையாளர் அல் ஹூசைனிடம் அரசாங்கம் வற்புறுத்த வேண்டும் எனவும் அமைச்சர்கள் சிலர் வாதிட்டுள்ளனர்.
அதேவேளை ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப உள்ளக பொறிமுறை ஒன்றின் மூலம் போர்க்குற்ற விசாரணையை நடத்த இந்தியா உதவியளிக்கும் என கொழும்புக்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கூறியதாகவும் மற்றுமொரு தகவல் கூறுகின்றது.
இதேவேளை ஜெனீவா மனித உரிமைச் சபையின் அழுத்தங்களினால் போர்க்குற்ற விசாரணையை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஸ்ரீலங்காவின் வெளியுறவுக் கொள்கையில் சில மாறறங்களை ஏற்படுத்த அரசாங்கம் முற்படுவதாக அமைச்சரவைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா, சீனா போன்ற நாடுகள் போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் சர்வதேச நிபுணர்கள் உள்ளிட்ட கலப்புமுறை நீதிமன்றத்தை விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.