சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவுக்கும் இடையிலான சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.
தாஜ் சமுத்ரா விடுதியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்று வருகிறது.
இந்திய வெளிவிவகார அமைச்சருடன், இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா உள்ளிட்ட அதிகாரிகளும் இந்தப் பேச்சுக்களில் ககலந்து கொண்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இரண்டு நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், சற்று முன்னர், (இன்று முற்பகல்) சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்தச் சந்திப்பு, சந்திரிகா குமாரதுங்கவில் இல்லத்தில் நடைபெற்றது.
சிறிலங்காவில் நல்லிணக்க நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பணியத்தின் தலைவராக சந்திரிகா குமாரதுங்க பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், சிறிலங்காவில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் தொடர்பாகவே சந்திரிகா குமாரதுங்கவும், சுஸ்மா சுவராஜும் பேச்சுக்களை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் இருவரும், நீண்டகால நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கூட்டமைப்பு,மைத்திரி - சுஸ்மா சந்திப்பு ஆரம்பமானது சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இன்று காலை, சிறிலங்கா அதிபர் மைத்திரி்பால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்தச் சந்திப்பின் போது, ஒன்பதாவது இந்திய – சிறிலங்கா கூட்டு ஆணைக்குழுக் கூட்டத்தின் பெறுபேறுகள் குறித்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் எடுத்துக் கூறினார்.
அத்துடன், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தல் உள்ளிட்ட மேலும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும், பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தப் பேச்சுக்களில், இந்திய, சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர்களும், கொழும்புக்கான இந்தியத் தூதுவரும், சிறிலங்கா அதிபரின் செயலரும் கலந்து கொண்டனர்.
அதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், இன்றும் சற்று நேரத்தில், மதியம் 12 மணியளவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்