அரசியல் கைதிகளை விடுதலை செய்த பின் சுதந்திர தினத்தை கொண்டாட உரிமை உள்ளது!-
03 Feb,2016
அரசியல் கைதிகளை விடுதலை செய்த பின் சுதந்திர தினத்தை கொண்டாட உரிமை உள்ளது!-
சுமார் 5 ஆண்டுகள் தொடக்கம் 20 ஆண்டுகள் வரை விசாரணைகள் இன்றி சிறைகளில் வாடுகின்ற எமது தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாமலும், காணாமல் போன எமது உறவுகளுக்கு ஒரு முடிவும் காணாமலும் விமர்சையாக தெற்கில் சுதந்திர தின கொண்டாட்டங்களை மேற்கொள்ள இருக்கின்ற இந்த அரசாங்கம் மனிதாவிமான அடிப்படையில் அவர்களை விடுதலை செய்து விட்டு சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டிய தார்மீக உரிமை இருக்கின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
மைத்திரிபால சிறிசேன அவர்கள் தமிழ் மக்களின் வாக்குப்பலத்தின் காரணமாக வெற்றி பெற்று இன்று இலங்கை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன் காரணத்தினால் அவர் இந்த விடயத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது.
ஓரு வருடம் முடிவடைந்த இந்த நல்லாட்சி என்கின்ற அரசாங்கத்தினால் தமிழ் மக்களினுடைய வாழ்வியல் உரிமைகளிலே எந்த விதமான மாற்றங்களையும் ஏற்படுத்துகின்ற நிகழ்ச்சி நிரலை ஏற்படுத்தாத காரணத்தினால் தமிழ் மக்களுக்கு மஹிந்த ராஜபக்ஸவும் மைத்திரிபால சிறிசேனவும் ஒன்று என்கின்ற நிலைப்பாடு தோற்றம் பெற்றுவிட்டது.
இதன் காரணத்தினால் இந்த சுதந்திர தினத்திலாவது சிங்கள ஏகாதிபத்திய சிந்தனைத்துவத்தை துறந்து தமிழ் மக்களுக்கு கருணை காட்டக்கூடிய அடிப்படையில் இவர்களை விடுதலை செய்யக்கூடிய தேவை இருக்கின்றது என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
-எனவே இவ்வாறான ஒரு நிலைப்பாட்டை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்பதனையும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
ஏன் என்றால் ஒரு மனிதாவிமான அடிப்படையில் இந்த விவகாரங்களை கையாள வேண்டிய ஒரு தேவையும் அவர்களுக்கு உண்டு என்பதனையும் நாங்கள் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். என அவர் மேலும் தெரிவித்தார்.
வி.எஸ்.சி