அதிபர் மாளிகையில், தாம் நிலத்தடி சொகுசு மாளிகையை அமைக்கவில்லை என்றும், அது விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலில் இருந்து பாதுகாப்புத் தேடுவதற்காக அமைக்கப்பட்ட பதுங்குகுழி என்றும், அதுபோன்ற பதுங்கு குழி அலரி மாளிகையிலும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.
நாரஹேன்பிட்டிய விகாரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசியி அவர்,”அதிபர் மாளிகையில் இரகசிய நிலத்தடி மாளிகை ஒன்றை அமைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இது மாளிகை அல்ல. நாம் அமைத்தது பதுங்குகுழி.பதுங்குகுழி ஒன்றை அமைத்துள்ளதாக தெரிவிப்பதை நான் மறுக்கவில்லை. அது போர்க்காலகட்டத்தில் அமைக்கப்பட்ட பதுங்குகுழி.
விடுதலைப் புலிகளின் தரப்பு பலமடைந்திருந்த காலகட்டத்தில் எம்மை பாதுகாக்க வேண்டிய தேவை இருந்தது.
அந்த நேரத்தில் முக்கிய பாதுகாப்பு கலந்துரையாடல்களையும் முக்கிய தீர்மானங்களையும் நாம் அதிபர் மாளிகையில் தான் மேற்கொள்வோம்.
அவ்வாறு இருக்கையில் அதிபர் மாளிகை தாக்கப்பட்டால் இந்த பதுங்குழியில் இருந்து செயற்படலாம் என்ற நோக்கத்துக்காகவே இதை உருவாக்கினோம்.
இந்த பதுங்குகுழியை வெளியில் இருந்து பார்க்கும் போது சாதாரண வீடு போன்று தெரியும். ஆனால் உள்ளே பாதுகாப்பான வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
போர்க்காலகட்டத்தில் இதை நாம் அமைத்தோம். அப்போதைய சூழ்நிலையில் புலிகளின் தாக்குதல் மிகவும் கடுமையானதாக இருந்தது.
விமான தாக்குதல்களை புலிகள் மேற்கொண்டனர். அதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள எமக்கு இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டி இருந்தது.
அவர்களின் விமான தாக்குதல் மற்றும் நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் என்பன எமக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது. அவற்றை எதிர்கொள்ள நாம் தயாராக இருந்தோம்.
அதிபர் மாளிகையில் மட்டுமல்ல அலரி மாளிகையிலும் இவ்வாறான பதுங்குகுழி உள்ளது. இன்னும் சில முக்கிய இடங்களிலும் பதுங்குகுழிகள் உள்ளன. அவற்றை அமைத்தது தவறென குறிப்பிட முடியாது.
நாம் தாக்குதல் நடத்தும்போது புலிகள் பதுங்குகுழி அமைத்தனர். அதேபோல் அவர்கள் தாக்கும் போது நாம் பதுங்குகுழி அமைத்தோம்.
புலிகளின் தலைவர் பிரபாகரனும் இவ்வாறு பதுங்குகுழிகளை அமைத்து வைத்திருந்தார். இராணுவத் தாக்குதலில் இருந்து தப்பிக்க அவர் வீட்டின் அடியில் பதுங்குகுழியை அமைத்திருந்தார். அதை எவரும் விமர்சிக்கவில்லை.
அதேபோல நாமும் எமது பாதுகாப்பிற்காக பதுங்குகுழியை அமைத்துக் கொண்டோம். புலிகள் செய்வது நியாயமெனின் நாம் செய்வதும் நியாயமானதே.
அவ்வாறு செய்யாமல் நான் இறக்க வேண்டும் என் நினைக்கிறீர்களா? முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற எதிர்பார்க்கக் கூடாது.
புலிகளின் விமானங்கள் கொழும்பில் வந்து தாக்குதல் நடத்தியது இளையவர்கள் பலருக்கு மறந்து விட்டது.
பதுங்குகுழி அமைக்க எவ்வளவு செலவானது என்ற எனக்குத் தெரியாது. ஆனால் அவர்களும் அமைத்தனர், நாங்களும் அமைத்தோம் அவ்வளவு தான்” என்று தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ வெட்டிய குழியே இன்று அவருக்கு ஆபத்தானதாக மாறியிருக்கிறது. அவர் கொடுத்த பொல்லை வைத்தே அவரைத் தாக்கத் தொடங்கியிருக்கிறது அரசாங்கம்.
இப்போதைக்கு அரசாங்கத்தின் இந்த வாதம்- பதிலடி அரசியல் ரீதியாக எடுபட்டுள்ளது. என்றாலும், இது எந்தளவு காலத்துக்கு தாக்குப்பிடிக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்
பொல்லைக் கொடுத்து அடிவாங்கியது என்பார்களே, அது தான் இப்போது மஹிந்த ராஜபக் ஷவுக்கு நடக்கிறது.
மஹிந்த ராஜபக் ஷவை வைத்தே, அவரது வாயை அடைக்கின்ற உத்தியைத் தான், தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
குறிப்பாக, போர்க்குற்ற விசாரணை விடயத்தில், அரசாங்கம் கடுமையான நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் எதிர்கொண் டாலும், அதற்கான பழியில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான கருவியாக மஹிந்த ராஜபக் ஷவையே தெரிவு செய்திருக்கிறது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கைக்கு எதிராகவும், ஜெனீவா தீர்மானத்துக்கு ஆதரவு அளித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு எதிராகவும் மஹிந்த ராஜபக் ஷவும் அவரது அணியினரும், சிங்கள மக்களிடையே தீவிரமான கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.
இது அரசாங்கத்தினால் முன்னரே எதிர்பார்க்கப்பட்ட விடயம் தான்.
அதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து செயற்பட வேண்டியதும், பொறுப்புக்கூறல் கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டியதும் அரசாங்கத்தின் கடமையாகவே உள்ளது.
ஒரு பக்கத்தில் இந்த கடப்பாட்டில் இருந்து விலக முடியாது. அதேவேளை, மஹிந்த அணியினர் அதற்கு எதிராக வீசப்போகும் அஸ்திரங்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும்.
அதைவிட, தமிழர் தரப்பின் நம்பிக்கையையும் காப்பாற்றியாக வேண்டிய கட்டாயமும் இருக்கிறது, இந்த அரசாங்கத்துக்கு.
இதனால் எப்படியாவது போர்க்குற்ற விசாரணையை முன்னெடுக்க வேண்டிய நிலையில் அரசாங்கம் இருக்கிறது.
ஜெனீவா தீர்மானத்தையும், ஐ.நா. விசாரணை அறிக்கையையும், மஹிந்த ஆதரவு அணியினர், அரசாங்கத்துக்கு எதிரான ஒரு ஆயுதமாக மட்டும் பார்க்கவில்லை. அது, தமது கழுத்துக்குப் போடப்படும் சுருக்காகவும் கூடப் பார்க்கின்றனர்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் போரின் போது இடம்பெற்ற மீறல்களை மையப்படுத்தியே விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த விசாரணைகளில், இராணுவத்தினர் எதிர்கொள்ளப்போகும் விசாரணைகளுக்கு முன்னைய அரசாங்கத்தில் இருந்தவர்களே பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.
போருக்கு அரசியல் ரீதியாக தலைமையேற்றவர்கள், அதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்தவர்கள், விசாரணைகளை எதிர்கொள்ளலாம்.
அவர்களின் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், ஒருவேளை தண்டனையை எதிர்கொள்ளும் நிலை கூட வரலாம்.
எனவே தான், இத்தகைய விசாரணைகளைத் தவிர்க்கவும், தடுக்கவும் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் முயற்சிக்கின்றனர்.
சர்வதேச விசாரணை அல்லது சர்வதேச தலையீட்டுடன் கூடிய நம்பகமான விசாரணைகளுக்கு மஹிந்த ராஜபக் ஷ ஆரம்பத்தில் இருந்தே இணங்க மறுத்து வந்ததன் மர்மம் இது தான்.
இப்போது அவரைத் தாம் மின்சார நாற்காலியில் இருந்து பாதுகாத்து விட்டதாக அரசாங்கத் தரப்பு கூறிவந்தாலும், மஹிந்த ராஜபக்ஷவுக்கோ அவருடன் இணைந்து போரை நடத்தியவர்களுக்கோ ஆபத்து முற்றாக விலகிவிட்டதெனக் கூறமுடியாது.
இந்தநிலையில், ஜெனீவா தீர்மானத்தையும், ஐ.நா. விசாரணை அறிக்கையையும் வைத்து அரசாங்கத்துக்கு எதிரான சிங்கள இனவாத அலை ஒன்றை பரவச் செய்யும் முயற்சியில் மஹிந்த ராஜபக் ஷ தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.
மீண்டும் சிங்கக்கொடியேந்தி, சிங்கள நாடாக இலங்கையைக் கட்டியெழுப்ப சிங்களவர்கள் முன்வர வேண்டும் என்று விமல் வீரவன்ச கடந்த 19ஆம் திகதி விஹாரமாதேவி பூங்காவில் நடத்திய கூட்டத்தில் அழைப்பு விடுத்திருந்தார்.
இது, அரசாங்கத்துக்கும், தமிழர்களுக்கும் எதிரான இனவாத அலை ஒன்றை உருவாக்குகின்ற மஹிந்த தரப்பினரின் முயற்சியோகும்.
ஆனால், அதனை அவ்வளவு இலகுவாக செய்ய முடியுமா என்பது கேள்விக்குரிய விடயமே,
போர்க்குற்ற விசாரணை விவகாரம், சிங்கள மக்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களையும், உணர்வுகளையும் ஏற்படுத்தும் என்பதை அரசாங்கம் நன்றாகவே அறியும்.
மஹிந்த ராஜபக்ஷ அணியினர், தமது அரசியல் நலனுக்காக இதனை எந்தளவு தூரத்துக்குக் கொண்டு செல்வார்கள் என்பதும் அரசாங்கத்துக்குத் தெரியும்.
அதனால் தான், மஹிந்த ராஜபக்ஷவை வைத்தே அவர் சிங்கள மக்கள் மத்தியில் கட்டியெழுப்ப முனையும், அரச எதிர்ப்பு அலையை, முறியடிக்கும் நகர்வுகளில் அரசாங்கம் இறங்கியிருக்கிறது.
ஐ.நாவுடனும், மேற்குலகுடனும், இலங்கையின் புதிய அரசாங்கம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, பொறுப்புக்கூறல் பற்றிய கடப்பாடுகளை நிறைவேற்ற இணங்கிய போது, அதற்கு எதிராக மஹிந்த ராஜபக் ஷ ஆதரவு அணியினர் வெளியிட்ட எதிர்ப்பை அரசாங்கம் அடக்கியது.
ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் 2009இல் இலங்கை வந்த போது, பொறுப்புக்கூறல் கடப்பாட்டை நிறைவேற்றுவதாக, ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக் ஷவே வாக்குறுதி அளித்திருந்தார்.
அதனை நிறைவேற்றாததால் தான், இலங்கை நெருக்கடிக்குள் சிக்க நேர்ந்தது என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்தியது.
இது அரசாங்கத்துக்குக் கிடைத்த முதல் வெற்றி.
அதையடுத்து, மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் இருந்திருந்தால், ஆயிரம் மடங்கு கடுமையானதாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை அமைந்திருக்கும், நாம் ஆட்சிக்கு வந்ததால் தான், அதன் காரத்தை குறைத்து விட்டோம் என்றும் நம்ப வைத்திருக்கிறது தற்போதைய அரசாங்கம்.
இது அவர்களின் இரண்டாவது வெற்றி.
இப்போது அடுத்த தடையைத் தாண்ட வேண்டிய நிலையில் அரசாங்கம் இருக்கிறது.
அதாவது உள்நாட்டு விசாரணையே நடத்தப்படவுள்ளது என்று அரசாங்கம் சிங்கள மக்களை நம்பவைக்க முயன்றாலும், ஏதோ ஒரு வகையில், வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத் தொடுனர்கள், சட்டவாளர்கள் இதில் பங்கேற்கப் போகின்றனர் என்பது உறுதி.
அதற்கான உத்தரவாதம், ஜெனீவா தீர்மானத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
அதனை மீறி அரசாங்கம், உள்நாட்டு விசாரணையே நடத்தப்படும் என்று அடம்பிடிக்க முடியாது.
வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்பட்டால், அது கலப்பு விசாரணை தான்.
கலப்பு விசாரணை நாட்டின் இறைமையை மீறுகின்ற செயல் என்றும், அரசியலமைப்புக்கு முரணானது என்றும், மஹிந்த அணியினர் போர்க்கொடி எழுப்பத் தொடங்கி விட்டனர்.
கடந்தவாரம், இவர்கள் விஹாரமாதேவி பூங்காவில் பெரியதொரு கூட்டத்தையும் நடத்தியிருந்தனர்.
இந்தக் கட்டத்தில் அரசாங்கம், நடக்கப்போவது கலப்பு விசாரணை அல்ல உள்நாட்டு விசாரணையே என்று நிரூபிக்க முனையவில்லை.
அது, ஆபத்தான விடயமாகிவிடும் என்பதால், தந்திரமாக மஹிந்த கொடுத்திருந்த பொல்லை வைத்தே அவரது உச்சியில் அடிபோடத் தொடங்கியிருக்கிறது.
இந்த போர்க்குற்ற விசாரணைக்கு உதவுவதற்காக, ஜப்பானிய நீதிபதி மோட்டூ நொகுசி கொழும்பு வந்திருக்கிறார்.
விசாரணைகளுக்கு ஜப்பானிய நீதிபதி உதவப் போவதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாகவே குறிப்பிட்டிருந்தார்.
ஜெனீவா கூட்டத்தொடரில் உரையாற்றிய ஜப்பானிய பிரதிநிதி இதனை ஏற்கனவே அறிவித்திருந்தார்.
மோட்டூ நொகுசி என்ற இந்த நீதிபதி, கம்போடியாவில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் இடம்பெற்றிருந்தவர்.
இந்த தீர்ப்பாயத்தில் இடம்பெற்றிருந்த, நியூஸிலாந்து நீதிபதி சில்வியா கார்ட்ரைட் அம்மையார், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகம் உருவாக்கிய விசாரணைக் குழுவுக்கு, ஆலோசனை வழங்கும் குழுவிலும் இடம்பெற்றிருந்தார்.
அவரே கலப்பு நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தார்.
அவருடன், பணியாற்றிய ஜப்பானிய நீதிபதி, இங்கு முன்னெடுக்கப்படவுள்ள போர்க்குற்ற விசாரணைகளில் முக்கியமான பங்களிப்புச் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த ஜப்பானிய நீதிபதியை தாம் அழைக்கவில்லை என்றும், மஹிந்த ராஜபக் ஷவே, காணாமற்போனோர் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க அழைத்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
-
மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சிக்காலத்தில், உடலகம ஆணைக்குழுவுக்கான ஆலோசகர்களை வெளிநாடுகளில் இருந்து நியமித்திருந்தார். பரணகம ஆணைக்குழுவுக்கும் வெளிநாடுகளின் ஆலோசகர்களை நியமித்திருந்தார்.
அவர் விடுத்த அழைப்புக்கமையவே இப்போதும் வெளிநாட்டவர்களை அழைக்கிறோம் என்று பதிலடி கொடுக்கத் தொடங்கியிருக்கிறது அரசாங்கம்.
அதுபோதாதென்று, மஹிந்த ராஜபக்ஷ நியமித்த பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த ஆணைக்கு ஏழு போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச பங்களிப்புடன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
இதனை மஹிந்த ராஜபக் ஷ நிராகரிக்க முடியாது. ஏனென்றால் இது அவர் நியமித்த ஆணைக்குழு.
மஹிந்த ராஜபக்ஷ வெட்டிய குழியே இன்று அவருக்கு ஆபத்தானதாக மாறியிருக்கிறது.
அவர் கொடுத்த பொல்லை வைத்தே அவரைத் தாக்கத் தொடங்கியிருக்கிறது அரசாங்கம்.
இப்போதைக்கு அரசாங்கத்தின் இந்த வாதம்- பதிலடி அரசியல் ரீதியாக எடுபட்டுள்ளது.
என்றாலும், எடுபட்டுள்ளது.
என்றாலும், இது எந்தளவு காலத்துக்கு தாக்குப்பிடிக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
-சத்திரியன்