இலங்கையில் அழிவுகளை மறந்தது அமெரிக்கா.
சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடன் அமெரிக்கா அதிகளவு மென்போக்கை கடைப்பிடிப்பதாகவும், அதன் காரணமாகவே போர்க்குற்றங்கள், பொறுப்புக்கூறல் குறித்து, அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் வாய்திறக்கவில்லை என்றும் கொழும்பு அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சார்பில் சிறிலங்கா தொடர்பாக கருத்து வெளியிடப்படும் சந்தர்ப்பங்களில், பொறுப்புக்கூறல், போர்க்குற்றங்கள் , மனித உரிமைகள் தொடர்பாக குறிப்பிடப்படுவது வழக்கம்.
எனினும், நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச்செயலர் நிஷா பிஸ்வால் மற்றும், இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி ஆகியோர், போர்க்குற்றங்கள், பொறப்புக்கூறல், மனித உரிமைகள் குறித்த எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
அவர்கள் சுருக்கமான உரையின் போது இந்த மூன்று சொற்களையும் பயன்படுத்தவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, தண்டனை விலக்குரிமை, நல்லிணக்கம், போன்ற சொற்களையே அவர்கள் பயன்படுத்தியிருந்தனர்.
கடந்தவாரம் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் கொழும்புடன் முதலாவதாக இராஜதந்திர கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ள வொசிங்டன், சிறிலங்கா தொடர்பாக காண்பித்துள்ள மென்போக்கு சமிக்ஞையாக இது கருதப்படுகிறது.
அதேவேளை, “சில விடயங்களை அடைவதற்கு முன்னோக்கிச் செல்வது கடினமானது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். இந்த முயற்சிகளை நிறைவேற்ற காலஅவகாசம் தேவை என்பதை ஏற்கிறோம்.
குறுகிய காலத்துக்குள் ஆச்சரியங்களை எதிர்பார்க்க முடியாது” என்றும் ரொம் மாலினோவ்ஸ்கி கருத்து வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது