சக்திவாய்ந்த வெடி மருந்துகளுடன் 4 பேர் கைது
05 Aug,2015
சக்திவாய்ந்த வெடி மருந்துகளுடன் 4 பேர் கைது
பதுளை - இராவணா எல்ல பிரதேசத்தில் அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகளுடன் கைது செய்யப்பட்ட நபர் வழங்கிய தகவல்களுக்கு அமைய மேலும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவர்கள் வெடி மருந்துகளை எடுத்துச் செல்ல உதவியவர்கள் எனவும் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் கூறியுள்ளது.
உமாஓய அபிவிருத்தித் திட்டத்தின் கரந்கொல பிரதேசத்தில் உள்ள பணியிடத்தில் இந்த வெடி மருந்து திருடப்பட்டு வீரகெட்டிய பிரதேசத்தை நோக்கி எடுத்துச் செல்லப்படவிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூன்று பேரும் ரந்தெனிய மற்றும் பதுளை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இராவணா எல்ல பிரதேசத்தில் நேற்று இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்றை சோதனையிட்ட காவற்துறையினர் அதில் இருந்த 50 கிலோ கிராம் வெடி மருந்துகளுடன் ஒருவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள நான்கு சந்தேக நபர்களும் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.
மன்னாரில் தலை இல்லாத நிலையில் சடலம்
மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் மிகவும் உருக்குலைந்த நிலையில் நேற்று இரவு சடலம் ஒன்றை மீட்டுள்ளாதாக பொலிசார் தெரிவித்தனர்.
தாழ்வுபாட்டு கடற்கரையில் தலை அற்ற நிலையில் மிகவும் சிதைவடைந்து உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியதைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் உடனடியாக மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் பொலிசார் சடலத்தை மீட்டு தாழ்வுப்பாடு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சடலம் தலை இன்றிக் காணப்பட்டதோடு கை, கால் மற்றும் உடற்பகுதிகள் மிகவும் சிதைவடைந்த நிலையில் உள்ளது. குறித்த சடலம் ஆண், பெண் என்பது கூட அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.