சீன இராணுவத்தின் ஆண்டுவிழா சிறிலங்காவிலும் கொண்டாடப்பட்டது.
31 Jul,2015
சீன இராணுவத்தின் ஆண்டுவிழா சிறிலங்காவிலும் கொண்டாடப்பட்டது.
சீனாவில் மக்கள் விடுதலை இராணுவம் ஆரம்பிக்கப்பட்ட 88 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் சிறிலங்காவிலும் இடம்பெற்றுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை (28ஆம் நாள்) கொழும்பில் உள்ள கிங்ஸ்பெரி விடுதியில் இந்தக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.
கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தினால் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வில், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் பி.எம்.யு.டி.பஸ்நாயக்க, அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி உள்ளிட்டோர் சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொண்டனர்.
அத்துடன் சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதி மற்றும் முப்படைகளின் தளபதிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
கொழும்பில் உள்ள சீனத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர், மூத்த கேணல் லி செங்லின் தலைமையில் சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 88ஆவது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் இடம்பெற்றிருந்தன.
பொதுவாக, நாடுகளின் தேசிய தினங்கள், சுதந்திர தினங்கள் தான், வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களினால் கொண்டாடப்படுவது வழக்கம்.
எனினும், சீனா தனது இராணுவம் உருவாக்கப்பட்ட தினத்தை கொழும்பில் கொண்டாடியுள்ளது.
சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் உலகின் மிகப்பெரிய இராணுவங்களில் ஒன்றாக விளங்குகிறது.
சீன மக்கள் விடுதலை இராணுவம் முக்கியமாக நான்கு பிரிவுகளைக் கொண்டது. தரைப்படை, கடற்படை, விமானப்படை மற்றும் இரண்டாவது பீரங்கிப்படை ஆகியனவே அவையாகும்.