ஒற்றை ஆட்சியின் கீழ் சகல இன மக்களினதும் உரிமைகளையும் காக்கும் வகையில் இனப் பிரச்சினைக்கு தீர்வுபெற்றுக் கொடுக்கப்படுமென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான பேச்சு வார்த்தை ஆறு மாதங்களுக்குள் துவங்கும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று கொழும்பில் வெளியிடப்பட்டது.
இதன்படி, அரசியல் யாப்பின் 13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்லாத வகையில் அதிகாரங்கள் வழங்கப்பட்டு, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபைகளை பலப்படுத்தக்கூடிய தீர்வொன்று பெற்றுக் கொடுக்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு ஒரு மாதத்திற்குள், இது தொடர்பான பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்படுமென்றும் ஆறு மாதங்களுக்குள் தீர்வு முன்வைக்கப்படுமென்றும் அந்த தேர்தல் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்துவடுத்துவதற்காக தேசிய நல்லிணக்க ஆணைக் குழுவொன்று ஸ்தாபிக்கப்படும் என இன்று வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நல்லிணக்க ஆணைக் குழுவினால் முன்வைக்கப்படும் பரிந்துரைகள் ஒரு வருடத்திற்குள் நிறைவேற்றப்படுமென்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மக்களுக்கு பாரிய நஷ்டத்தை ஏற்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட திறைசேரி பத்திர விற்பனை தொடர்பில் முறையான விசாரணையொன்று மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு தகுந்த தண்டனை பெற்றுக்கொடுக்கப்படுமென்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, பேசிய முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ, தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் புதிய அரசியல் யாப்பு தயாரிக்கப்படும் என தெரிவித்தார்.
அத்தோடு, 20ஆவது திருத்த சட்டத்தை நிறைவேற்றுவோம் என்றும் தகவல் அறியும் சுதந்திரத்தை பாதுகாப்போம் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வடக்கு - கிழக்கு இணைப்பு கோரிக்கைக்கு எதிர்ப்பு
இலங்கையில் தீர்வாக வடக்கு - கிழக்கு மாகாணங்களின் இணைப்பை வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பு முன் வைத்துள்ள தேர்தல் அறிக்கைக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் பரவலாக எதிர்ப்பு தோன்றியுள்ளது.
இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணும்போது, வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறியிருந்தது.
மூவின மக்களும் வாழும் கிழக்கு மாகாணம் தொடர்ந்தும் தனி மாகாணமாகவே இருக்க வேண்டும் என்ற கருத்துகள் தெரிவிக்கப்பட்டுவருகின்றன.
இனப் பிரச்சினைக்கு அதிகார பகிர்வை கொண்ட அரசியல் தீர்வான்று காணப்படும்போது அது இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணங்களை கொண்டதாக அமைய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை கூறுகின்றது.
இது தொடர்பாக பிபிசி தமிழோசையுடன் பேசிய வழக்கறிஞர் உவைசுர் ரகுமான் .இலங்கை - இந்திய ஓப்பந்தம் மூலம் இணைக்கப்பட்டிருந்த இரு மாகாணங்களும் நீதிமன்றத் தீர்ப்பொன்றின் மூலம் பிரிக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார்.
மீண்டும் இரு மாகாணங்களும் இணைக்கப்படுமானால் அதனை முஸ்லிம்கள் ஒரு போதும் ஏற்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
கிழக்கு மாகாணத்தில் 35 சதவீதமாக காணப்படும் முஸ்லிம்களின் விகிதாசாரம் வடக்கு - கிழக்கு இணையும் போது 18 சதவீதமாக குறையும் ஆபத்து இருப்பதாக சமூக செயற்பாட்டாளரான எம்.எஸ்.எம். நஸீர் கூறினார்.
இதனைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் மக்கள்தான் என்கிறார் ஓய்வுபெற்ற அரச அதிகாரியான எஸ்.ஏ. ஐனுடின்.
வடக்கு - கிழக்கு இணைப்பு என்பது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வழமையான தேர்தல் கோஷம். இது ஒரு போதும் சாத்தியப்படக் கூடியது அல்ல என கிழக்கு மாகாண சிங்களவர் அமைப்பு கூறுகின்றது
நாட்டில் எந்தவொரு தலைவரும் இதற்கு இனிமேல் இணங்கப் போவதும் இல்லை. அப்படி இணைப்பதன் மூலம் மீண்டும் பயங்கரவாதத்திற்கு இடமளிக்கப் போவதும் இல்லை என்று அமைப்பின் தலைவரான அனுர பண்டார குறிப்பிடுகின்றார்