பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு சீட் கிடையாது:
06 Jul,2015
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு சீட் கிடையாது: தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு
இலங்கை பாராளுமன்றம் சமீபத்தில் கலைக்கப்பட்டது. அடுத்த மாதம் 17-ந்தேதி, பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில், முன்னாள் அதிபர் ராஜபக்சே போட்டியிட தற்போதைய அதிபர் சிறிசேனா சம்மதம் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலின்போது, சிறிசேனாவை ஆதரித்த தமிழர் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழர் பகுதிகளில் களம் இறங்குகிறது. இது, 5 தமிழ் கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆகும். விடுதலைப்புலிகள், களத்தில் இருந்தபோது, அவர்களின் ஆதரவு பெற்ற அமைப்பாக இது கருதப்பட்டது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில், அந்த கூட்டமைப்பு சார்பில் போட்டியிட முன்னாள் விடுதலைப்புலிகள் பலர் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள், இறுதிக்கட்ட போரில் ராணுவத்திடம் சரண் அடைந்து மறுவாழ்வு அளிக்கப்பட்டவர்கள் ஆவர்.
ஆனால், அவர்கள் வேட்பாளராக போட்டியிட ‘சீட்’ கொடுப்பது இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இனிவரும் காலங்களில் நடக்கும் தேர்தல்களில் வேண்டுமானால், அவர்களை நிறுத்துவது பற்றி பரிசீலிப்போம் என்று கூட்டமைப்பு அறிவித்துள்ளது. வடக்கு மாகாண சபையின் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உறுப்பினரான ஆனந்தி சசிதரனுக்கும் வேட்பாளர் ‘சீட்’ மறுக்கப்பட்டுள்ளது. இவருடைய கணவர் எழிலன், விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் மூத்த உறுப்பினராக இருந்தவர் ஆவார். ராணுவத்திடம் சரண் அடையச் சென்ற பிறகு எழிலனை காணவில்லை என்று ஆனந்தி குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
225 தொகுதிகளைக் கொண்ட இலங்கையில், அதிகபட்சம் 20 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூத்த தலைவர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த 2010-ம் ஆண்டு தேர்தலில், இந்த கூட்டமைப்பு 13 இடங்களை கைப்பற்றி இருந்தது.