கடத்திச் செல்லப்பட்டவர்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கென ஐந்து பேரடங்கிய குழு
17 Jun,2015
கடந்த யுத்த காலத்தில் ஆயுதக் குழுக்களால் கடத்திச் செல்லப்பட்டவர்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கென ஐந்து பேரடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரியந்த குணவர்தன தலைமையில்இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது..
ஆயுதக் குழுக்களினாலும், படையினரினாலும் தங்களது பிள்ளைகளும், கணவரும் கடத்திச் செல்லப்பட்டமை தொடர்பில் பொது மக்கள் வழங்கிய சாட்சியங்களையும், முறைப்பாடுகளையும் குறித்த குழுவினர் பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆணைக்குழுவை சந்தித்து பேச்சு நடத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்களினால் இதுவரை மூவாயிரம் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதில் நாடாளுமன்ற உறுப்பினரான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளள் தேவானந்தா ஆகியோருக்கு எதிராகவே அதிகளவான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு, பாதுகாப்பு பிரிவினர் சிலர் மீதும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் இந்த முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கென நியமிக்கப்பட்டுள்ள குழு எதிர்வரும் சில தினங்களில் இவர்களை விசாரணைக்காக அழைக்கும் என்று காணாமல் போனோர் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.(ரி)