இலங்கையரின் படகை திருப்பியனுப்ப ஆட்கடத்தற்காரர்களுக்கு பணம் வழங்கிய அவுஸ்திரேலியா
இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்களுடன் நியூஸிலாந்தை நோக்கிப் பயணித்த படகொன்றைத் திருப்பி அனுப்புவதற்காக ஆட்கடத்தற்காரர்களுக்கு அவுஸ்திரேலிய அதிகாரிகள் பணம் வழங்கியமை தெரியவந்துள்ளது.
இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மியன்மாரைச் சேர்ந்த 65 புகலிடக்கோரிக்கையாளர்களுடன் பயணித்த படகொன்று கடந்த மாத இறுதியில் அவுஸ்திரேலிய கடற்படை மற்றும் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.
நியூஸிலாந்திற்குப் பயணிக்கவிருந்த குறித்த படகைத் திருப்பி அனுப்புவதற்காக படகை செலுத்திய குழுவினருக்கு தலா 5000 அமெரிக்க டொலர்கள் வீதம் வழங்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அதிகாரிகள் தமக்கு பணம் வழங்கியமையை படகை செலுத்திய குழுவினர் ஒப்புக்கொண்டதாக இந்தோனேஷிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
எவ்வாறாயினும், படகைத் திருப்பி அனுப்புவதற்கு பணம் வழங்கப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பீட்டர் டட்டன் மறுத்திருந்தார்.
அவுஸ்திரேலிய அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்ட குறித்த படகு அதனை செலுத்தியவர்களால் கைவிடப்பட்ட நிலையில் கற்பாறையில் மோதி விபத்திற்குள்ளானமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தப் படகில் இருந்த 54 இலங்கையர்கள் உள்ளிட்ட 65 புகலிடக் கோரிக்கையாளர்களும் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தபோது இந்தோனேஷிய மக்களால் காப்பாற்றப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்கள் தற்போது இந்தோனேஷியாவில் உள்ள முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன
யாழில் 59 இராணுவ முகாம்கள் நீக்கம்
யாழ். மாவட்ட பாதுகாப்பிற்கு அவசியமான முகாம்களை மாத்திரம் வைத்துவிட்டு அம்மாவட்டத்தில் நடத்தி செல்லப்பட்ட 59 இராணுவ முகாம்கள் தற்போது வரையில் நீக்கப்பட்டுள்ளது என யாழ். பாதுகாப்பு படைகள் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.
யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏனைய பிரதேசங்களுக்கமைவாக யாழ் மாவட்டத்தின் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இராணுவத்திற்கு கீழ் இருந்த 12 ஆயிரத்து 901 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ். மாவட்டத்தில் அனைத்து இடங்களுக்கும் செல்லக்கூடிய வகையில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும்
பிரதி அமைச்சர்களாக சனத் ஜயசூரிய உள்ளிட்ட நால்வர் பதவிப் பிரமாணம்
சனத் ஜயசூரிய, விஜய தஹநாயக்க, எரிக் வீரவர்தன மற்றும் திலங்க சுமதிபால ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதி அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
இந் நால்வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.