விடுதலைப்புலிகளை தோற்கடித்ததில் பாக்கிஸ்தானின் பங்களிப்பை ஜனாதிபதி சிறிசேனா ஏற்றுக்கொண்டுள்ளார்
09 Jun,2015
விடுதலைப்புலிகளை தோற்கடித்ததில் பாக்கிஸ்தானின் பங்களிப்பை ஜனாதிபதி சிறிசேனா ஏற்றுக்கொண்டுள்ளார்
இலங்கையின் புதிய அரசாங்கம் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை பேணுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ள இந்த தருணத்தில் விடுதலைப்புலிகளை தோற்கடித்ததில் பாக்கிஸ்தானின் பங்களிப்பை ஜனாதிபதி சிறிசேனா ஏற்றுக்கொண்டுள்ளமை பாக்கிஸ்தான் இராணுவ தளபதியின் விஜயத்தின் மூலம் கிடைத்துள்ள முக்கியமான வெற்றியாகும் என த எக்ஸ்பிரஸ் டிபியுன் செய்தித்தாள் தெரிவித்துள்ளது
அது மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
2009 வரை மிகவும் பயங்கரமான கிளர்ச்சியின் பிடியில் சிக்குண்டிருந்த இலங்கையின் ஓருமைப்பாட்டை காப்பாற்றுவதில் பாக்கிஸ்தான் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதாக இலங்கை ஜனாதிபதி மைத்திhபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாக்கிஸ்தானின் இராணுவதளபதி ஜெனரல் ரஹீவ் ஷெரீவ்வினை திங்கட்கிழமை சந்தித்தவேளை பயங்கரவாதத்திற்கு எதிரான இலங்கையின் போராட்டத்தின் போது பாக்கிஸ்தானும் அதன் மக்களும் அளித்த முழுமையான ஆதரவையும் ஜனாதிபதி பாராட்டியுள்ளதுடன்,பிராந்தியத்தினதும் இருதரப்பினதும் பாதுகாப்பில் சகாவாக விளங்கியதற்காகவும் நன்றியை தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளினதும் படையினர் மத்தியில் தற்போது காணப்படும் ஓத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு இராணுவ தளபதியின் ஓத்துழைப்பு மிகவும் முக்கியமானது எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளும் உறுதியான பாதுகாப்பு உறவுகளை நீண்ட காலமாக கொண்டுள்ளன.விடுதலைப்புலிகளை இலங்கை படையினர் தோற்கடித்தமைக்கு பாக்கிஸ்தானின் ஆதரவு மிகமுக்கியமானதாக விளங்கியது என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் புதிய அரசாங்கம் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை பேணுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ள இந்த தருணத்தில் விடுதலைப்புலிகளை தோற்கடித்ததில் பாக்கிஸ்தானின் பங்களிப்பை ஜனாதிபதி சிறிசேனா ஏற்றுக்கொண்டுள்ளமை பாக்கிஸ்தான் இராணுவ தளபதியின் விஜயத்தின் மூலம் கிடைத்துள்ள முக்கியமான வெற்றியாகும்.
பாக்கிஸ்தான் இராணுவம் தற்போது முன்னெடுத்துள்ள இராணுவ நடவடிக்கையின் மகத்தான சாதனைகளையும் பிராந்தியத்தின் அமைதிக்காக அது புரிந்து வரும் தியாகங்களையும் சிறிசேன பாராட்டியுள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை அரசாங்கமும், அதன் படைகளும் மக்களும் போரிட்டதற்காகவும்,அதன் பின்னர் ஏற்பட்ட முன்னேற்றத்திற்காகவும் பாக்கிஸ்தானின் இராணுவதளபதி தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.
பாக்கிஸ்தான் இராணுவ தளபதி பிரதமர் உட்பட பலருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் இந்த பேச்சுவார்த்தைகளின்போது பாதுகாப்பு தொடர்பான ஓத்துழைப்புகளை அதிகரிக்க இரு தரப்பும் இணங்கியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.