தோல்வி பயம் காரணமாக தேர்தலில் போட்டியிடாமல் குறுக்கு வழியில் நாடாளுமன்றத்துக்குள் நுழைய ராஜபக்சே திட்டம்
08 Jun,2015
இலங்கையில் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் போட்டியிட்டால் தோல்வியடைய நேரிடுமோ என்ற சந்தேகத்தின் பேரில், தேசிய பட்டியல் வழியாக நாடாளுமன்றத்திற்குள் நுழைய அந்நாட்டின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
பொதுத்தேர்தலில் பாராளுமன்ற தொகுதி ஒன்றில் போட்டியிட்டால், கடும் சவாலை சந்திக்க நேரும் என்ற பயம் காரணமாக ராஜபக்சே இம்முயற்சியில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தன் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட்டால், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை வெளியிட்டு தன்னை தோல்வியடைய செய்துவிடுவார்கள் என ராஜபக்சே மிரண்டுள்ளதாகவும் பேசப்படுகிறது.
மேலும் தனது ஆதரவாளர்களுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பிலோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சி சார்பிலோ தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்பதால் ராஜபக்சே மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளாராம். இதனால் தனது ஆதரவாளர்களுடன் புதிய கட்சி சார்பில் தேர்தலில் களமிறங்கலாமா என்றும் அவர் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.