மகிந்தவின் மனைவியான சிராந்தி ராஜபக்ச நிதிமோசடி விசாரணைப்பிரிவிற்கு விசாரணைக்கு செல்லாமல் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு எவ்வாறு சென்றார் என்ற விடயத்தில் பிரதமர் வாய்திறக்க வேண்டுமென ஜே.வி.பி வலியுறுத்தியுள்ளது. மகிந்த ராஜபக்ச தொலைபேசியில் பிரதமருடன் பேசித்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது. ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திசாநாயக்க நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் இவற்றை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்- சிரிலிய சவிய வங்கிக்கணக்கு தொடர்பில் கடந்த ஏப்ரல் 18ம் திகதியே சிராந்தியிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அது எப்படி யூன் 1 வரை தள்ளிப் போனதென தெரியவில்லை.
கடந்த முதலாம் திகதி அவர் நிதி மோசடிப்பிரிவிற்கே அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் அங்கு செல்லாமல் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கே சென்றார். அவர் எப்படி அங்கு சென்றார் என்பதை பிரதமர் நாட்டு மக்களிற்கு வெளிப்படுத்த வேண்டும்.
நிதிமோசடிப்பிரிவிற்கு முன்பாக முதலாம் திகதி அமைதியற்ற நிலை காணப்பட்டதாகவும், அதனால் அவர் அங்கு செல்லாமல் சபாநாயகரின் இல்லத்திற்கு சென்றதாகவும் கூறினார்கள்.
ஆனால் கடந்த 28ம் திகதி நடந்த கூட்டமொன்றிலேயே, அவர் சபாநாயகரின் இல்லத்திற்குத்தான் செல்லப் போகிறார் என்பதை நான் கூறிவிட்டேன். அப்போதே எனக்கது தெரியும்.
இந்த விடயத்தில் மகிந்த ராஜபக்ச பிரதமருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கதைத்தாரா இல்லையா என்பதை பிரதமர் நாட்டு மக்களிற்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
மைத்திரி- விக்கி இன்று சந்திப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இன்று திங்கட்கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடக்கவிருக்கிறது.
ஒன்பது மாகாண முதலமைச்சர்களுடனான மாநாடு ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெறவிருக்கின்றது. இதில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் கலந்துகொள்ளவிருக்கின்றார்.
இந்த மாநாட்டையடுத்து வடக்கு முதலமைச்சருடன் ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் பேச்சுக்களை நடத்தவிருப்பதாக முதலமைச்சர் அலுவலகத்திலின் நம்பகரமான வட்டாரங்கள் தீபத்திற்கு தகவல் தந்துள்ளன.
இந்த சந்திப்பில், வடமாகாண சபை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்தும் முதலமைச்சர் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவருவார் எனத் தெரிகின்றது.
இன்று அவசர அமைச்சரவை கூட்டம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை கூட்டத்தை இன்று அவசரமாக கூட்டுகிறார். இன்று ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடக்கிறது. நெருக்கடியில் சிக்கியுள்ள 20வது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காகவே இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
20வது திருத்தம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருத்தங்களை உள்வாங்கி, திருத்தத்தை இறுதி செய்து நாளைய தினம் பாராளுமன்றத்தில் அதனை சமர்ப்பிக்க முயற்சிகள் நடப்பதாக தெரிகிறது. இன்றைய கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம்மிக்க இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
யாழ் களேபரம்: 33 பேருக்கு பிணை; இந்தியர் விடுதலை!
யாழ், நீதிமன்ற கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 33 பேர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது சந்தேகநபர்கள் கடும் எச்சரிக்கையின் பின் தலா இரண்டு லட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மாதத்தின் இறுதி ஞாயிறு காலை 9 மணி தொடக்கம் 12 மணிவரை அருகில் உள்ள பொலிஸ் நிலையம் சென்று கையொப்பமிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் இனி இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புபட்டால் பிணை இரத்து செய்யப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய பிரஜை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக சாட்சிகள் இல்லை என்பதால் அவரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.