கடந்த 2008 ஆம் ஆண்டு கொழும்பில் ஐந்து தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவத்துடன் கடற்படை அதிகாரிகள் சிலர் சம்பந்தப்பட்டுள்ளதாக காவல்துறையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
காணாமல்போனோர் தொடர்பான வழக்கின் விசாரணை நேற்று நடந்தபோது சாட்சியமளித்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ரஞ்சித் முனசிங்க, சம்பந்தப்பட்ட இளைஞர்களின் கடத்தல்களுடன் சுமித் ரணசிங்க மற்றும் சந்தன குமார ஆகிய கற்படை அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக தான் மேற்கொண்ட விசாரணைகளின்போது தெரியவந்ததாகக் கூறினார்.
இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்கொண்டு செல்லப்படுகின்ற காரணத்தினால் அவர்களைக் கைது செய்யவில்லை என்று கூறிய பொறுப்பதிகாரி, ஆனால் அவர்களின் வெளிநாட்டு பயணங்களைத் தடைசெய்யும் உத்தரவொன்றை நீதிமன்றத்திடமிருந்து பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
இவர்கள் இருவர் தவிர சம்பத் முனசிங்க எனும் மேலும் ஒரு கடற்படை அதிகாரியும் இந்த கடத்தல்களில் சம்பந்தப்பட்டுள்ளதை தான் மேற்கொண்ட விசாரணைகளின்போது ஊர்ஜிதப்படுத்தப்பட்டதாகவும் பொறுப்பதிகாரி ரஞ்சித் முனசிங்க கூறினார்.
இந்த மூன்றாவது சந்தேக நபருக்கு கடந்த காலத்தில் கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் நிகழ்ந்த கடத்தல் சம்பவங்களுடனும் தொடர்பிருப்பதாக தமது விசாரணைகளில் தெரியவந்திருப்பதாகவும் ரஞ்சித் முன சிங்க நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.
இந்த வழக்கின் மேலதிக விசாரணை எதிர்வரும் 23 திகதி வரை ஒத் திவைக்கப்பட்டது.
அம்பலமாகிறது: இறுதிச்சடங்கையும் கோத்தாவே செய்வித்தார்!
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கொல்லப்பட்டிருந்த ரொஷான் சானகவின் இறுதிக்கிரியையை, கோத்தபாயவின் ‘எவன்கார்ட்’ நிறுவனமே நடத்திய விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது. 2011 இல் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ரொஷான் கொல்லப்பட்டிருந்தார். பொலிசாரின் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டிருந்தார். இதனையடுத்து, அங்கு மக்களின் எதிர்ப்பு வலுவடைந்தது. மக்களின் எதிர்ப்பை அடக்குமுறையின் மூலம் மகிந்த ராஜபக்ச அரசு கட்டுப்படுத்தியது. இதற்கு எவன்கார்ட் நிறுவனத்தை பயன்படுத்திய விவகாரமும் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. கொல்லப்பட்டவரின் சகோதரன் இதனை பகிரங்கப்படுத்தியுள்ளார்.
ஊழியர்களின் எதிர்ப்பை அடக்க பொலிசார் நடத்திய தாக்குதலில் ரொஷான் கொல்லப்பட்டிருந்தார். இதனை அடக்குவதற்கு மகிந்த அரசு தனது வழக்கமான பாணியை கடைப்பிடித்தது.
roshanரொஷானின் இறுதிஊர்வலத்திற்கு நீதிமன்றத்தின் மூலம் கட்டுப்பாடு விதித்தது. அச்சுறுத்தல் மூலம் ஆர்ப்பாட்டக்காரர்களை பணியச் செய்தது. எனினும், இந்த மரணம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
ரொஷானின் இறுதி ஊர்வலத்தில் வன்முறை வெடிக்கலாமென நினைத்த அரசு, நீதிமன்றத்தின் மூலம் பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ரொஷானின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்த பின்னர், நூற்றுக்கணக்கான அதிரடிப்படையினர், அந்த வீட்டை முற்றுகையிட்டிருந்தனர்.
மரணச்சடங்கின் முதல்நாள், தேவாலயத்தை விட வேறெங்கும் உடலை கொண்டு செல்ல முடியாதென்றும், ஒரு மதகுரு மற்றும் ஒரு நண்பரின் உரைக்கு மட்டுமே நீதிமன்றத்தின் மூலம் அனுமதியளித்தது.
அது தவிர, மக்கள் போராட்டம் வெடிக்கக்கூடாதென்பதற்காக அந்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு கெடுபிடிகள் பிரயோகிக்கப்பட்டிருந்தன. இது தவிர, மரணச்சடங்கில் அரசிற்கு எதிரான போராட்டங்கள் நடந்து விடக்கூடாதென்பதற்காக, மரணச்சடங்கையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இதற்காக கோத்தபாயவின் சொந்த பாதுகாப்பு நிறுவனமான எவன்கார்ட் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் படையினர் உள்ளிட்ட பலர் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் சிவலுடையில்- கொல்லப்பட்ட ரொஷானின் உறவினர், நண்பர்களை போல கலந்து கொண்டு, அனைத்து காரியங்களையும் செய்துள்ளனர். அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இறுதிச்சடங்கு உள்ளிட்ட அனைத்தும் நடந்ததாக ரொஷானின் சகோதரர் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
சவப்பெட்டியை தூக்கிச் சென்றதும் அவர்கள்தான்.
இதுவொரு மோசமான அடக்கமுறை, இதுவரை அதுபற்றி வாய் திறக்க முடியாமல் இருந்தேன் என கூறும் சகோதரர், புதிய அரசு அதுபற்றிய விசாரணையை நடத்த வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று பாராளுமன்றம் பெரம் அமளிதுமளிப்பட்ட விடயத்தை ஏற்கனவே செய்திகள் வாயிலாக அறியத் தந்திருந்தோம். இதன்போது நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவம் இது. மகிந்த விசுவாசியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள தினன் குணவர்த்தன ஆரம்பத்திலேயே குழப்ப நடவடிக்கைகளில் இறங்கியிருந்தார். மத்திய வங்கியின் அளுனராக அர்ஜுன மகேந்திரன் நியமிக்கப்பட்டதற்கு ஆட்சேபம் தெரிவித்து, அவர் வெளிநாட்டு பிரஜையென கூச்சலிட்டார், அவருக்கு செமத்தியான பதிலடி கொடுத்ததுடன், வெள்ளைவான் கதை சொல்லி அவரது வாலை சுருட்ட வைத்துள்ளார் ரணில்.
‘மத்திய வங்கியின் ஆளுநரானஅர்ஜூன மகேந்திரன் நியமிக்கப்பட்டதை எதிர்ப்பதற்கு காரணம் அவர் சிறபான்மையினர்தான் என்பதும் எமக்கு தெரியும்’ என ஒரு போடும் போட்டார்.
பாராளுமன்றத்தின் விசேட அமர்வு நேற்று புதன்கிழமை சபாநாயகர் சமல் ராஜபக்ச தலைமையில் காலை 9.30 மணிக்கு கூடியது. இதன்போது மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் தொடர்பாக தினேஷ் குணவர்த்தனவின் கேள்விக்கு பதிலளித்து விசேட உரையொன்றை ஆற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
பிரதமர் சபையில் தொடர்ந்தும் உரையாற்றுகையில்- ‘வெளிநாட்டு பிரஜையான கே.பத்மநாதன் என்ற கே.பி.க்கு இலங்கையில் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கு கே.பி.யை ஒப்படைக்குமாறு பல நாடுகள் வேண்டுகோள் விடுத்தபோதிலும் அதனை நிராகரித்து கே.பி.யை பாதுகாக்க இலங்கை அரசு முயற்சிகளை மேற்கொண்டது.
எந்தவொரு நாட்டினதும் பிரஜையாகுவதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும். அது சட்டரீதியானது.
இதேபோன்று கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவில் சத்தியப்பிரமாணம் செய்தார்.
பாலித ரோஹன அவுஸ்திரேலியாவில் பிரஜையாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
கடந்த ஆட்சியாளர்கள் அமெரிக்கா பிரஜையை இங்கு வரவழைத்து நாட்டின் பாதுகாப்பை ஒப்படைக்கும் போது நீங்கள் இது தொடர்பில் கேள்வியெழுப்பியிருந்தால் அதனை நியாயப்படுத்தலாம்.
2005 நவம்பர் மாதம் 25 ஆம் திகதி தான் கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக பொறுப்பேற்றார். அவருக்கு இரட்டை பிரஜாவுரிமை நவம்பர் மாதம் 30 ஆம் திகதியே கிடைத்தது. உங்களது சிந்தனைக்கமைய அமெரிக்க பிரஜையொருவருக்கு அவ்வாறான பதவி வழங்கப்பட்டமை நியாயமானதாக இருக்கலாம்.
சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வகித்தவர் ஒரு அமெரிக்கர் ஆவார்.
வெளிநாட்டு சேவையை அவுஸ்திரேலிய பிரஜைக்கு வழங்கிய போது நீங்கள் கேள்வியெழுப்பவில்லை.
ஆனால் அன்று வாய்கள் மூடி மௌனிகளாக இருந்தவர்கள் அர்ஜுன மகேந்திரனின் பிரஜாவுரிமை தொடர்பாக கேள்வியெழுப்புகின்றனர். அதேவேளை இன்று உங்களுக்கு கேள்வியெழுப்புவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு மகிழ்ச்சியடைகின்றேன்.
கடந்த ஆட்சிக்காலத்தில் தினேஷ் குணவர்த்தன எம்.பி அமெரிக்க பிரஜைகள் தொடர்பாக கேள்வியெழுப்பியிருந்தால். வெள்ளை வானிலேயே பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
இன்று வெள்ளை வானில் கடத்தல்கள் இல்லை. எனவே இன்று பலரது வாய்கள் திறக்கப்பட்டுள்ளன. அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிடும் எவ்விதமான நடவடிக்கைகளையும் கோத்தபாய ராஜபக்ச இதுவரையில் மேற்கொள்ளவில்லை.
அமெரிக்க பிரஜையொருவருக்கு வேறொரு நாட்டில் பிரஜையாகும் உரிமையுள்ளது. ஆனால் அமெரிக்காவுக்கு துரோகமிழைத்தால் வழக்கு தொடர்வதற்கு அமெரிக்காவிற்கு அதிகாரம் உள்ளது.
இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர் முதலில் அமெரிக்க பிரஜையாக கருதப்படுகின்றார். இதன் காரணமாகத்தான் எமது நாட்டில் மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதி ஆகியோர் இலங்கை பிரஜையாக இருக்க வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே அரசில் பதவிகளை விடுத்து ஏனைய எந்த பதவிகளுக்கும் வெளிநாட்டவர்கள் நியமிக்கப்படலாம். உதயங்கன வீரசிங்க பாலித கோஹன, லக்ஷமன் ஜயவீர, ஜாலிய விக்கிரம சூரிய போன்ற பெயர் பட்டியலொன்றை உங்களுக்கு கையளிக்க முடியும்.
இவர்கள் அனைவரும் அரசில் முக்கிய பதவிகளை வகித்தவர்கள். இவர்கள் அனைவரும் வெளிநாட்டு பிரஜைகள். கடந்த ராஜபக்ச ஆட்சியில் பலர் சீசல்ஸ், ஏமன் தீவுகள், பிரிட்டன், அன்டோரா, மொரோக்கோ, உகண்டா போன்ற நாடுகளில் பிரஜாவுரிமைகளை பெற்றுக் கொண்டுள்ளனர். அவ்வாறு எவரும் வெளிநாட்டு பிரஜாவுரிமையும் பெற்றுக்கொள்ளாமல் இருந்தால் அது தொடர்பில் எனக்கு சான்றிதழ் வழங்குங்கள்.
அர்ஜுன மகேந்திரன் இலங்கையில் பிறந்தவர், இங்கு வாழ்ந்தவர், தொழில் புரிந்தவர், கல்விமான். அவர் ஆரம்பகாலத்தில் இலங்கை மத்திய வங்கியில் 11 வருடங்கள் தொழில்புரிந்தவர். அதன்பின்னர் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்தார்.
2002ஆம் ஆண்டில் இலங்கை முதலீட்டு சபை தலைவர் பதவி வகித்தார். 2004 வரை அப்பதவியில் இருந்தார். பின்னர் ராஜபக்ச ஆட்சி உருவானது. அதன்பின்னர் அவர் நாட்டை விட்டு வெளியேறினார். அர்ஜுன மகேந்திரன் மட்டுமல்ல பலர் ராஜபக்ச ரெஜிமெண்ட்டுக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேறினார்.
ஜோசப்பரராஜ சிங்கம், ரவிராஜ், மகேஸ்வரன் போன்ற தமிழ் எம்.பிக்கள் எமக்கு இல்லாமல் போயுள்ளனர். அன்று இந்த நாட்டில் ஒரு பயங்கரமான இருண்ட யுகமே காணப்பட்டது. இதன் காரணமாகவே அர்ஜுன மகேந்திரன் தொழில்புரிய சிங்கப்பூர் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு அவர் சென்றிருக்காவிட்டால் லசந்த விக்கிரமதுங்க, பிரதீப் எக்ஹெலியகொட போன்ற பலருக்கு ஏற்பட்ட நிலைமை அர்ஜுன மகேந்திரனுக்கு ஏற்பட்டிருக்கும். இதனால் அவர் சிங்கப்பூருக்கு சென்று தனது உயிரை பாதுகாத்துக்கொண்டார்.
இவ்வாறானதோர் சூழ்நிலையிலேயே கடந்த ஜனவரி 8 ஆம் திகதி புதிய யுகம் மைத்திரிபால சிறிசேன தலைமையில் உருவாகியது.
இதன் பின்னர் மரண பயத்தால் நாட்டை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் நாட்டுக்கு வர ஆரம்பித்தனர்.
அத்தோடு மரண பயத்தால் வெளிநாடு சென்றவர்களை மீள இங்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அர்ஜூன மகேந்திரனை மட்டுமல்ல, அன்று ராஜபக்சவின் பயங்கரமான யுகத்திற்கு பயந்து வெளிநாடு தப்பிச்சென்ற பொலிஸ் பேச்சாளர் ஊடகப் பேச்சாளர் பிரியஷாந்த ஜயகொடியையும் வரவழைத்தோம்.
அன்றைய ஆட்சியில் பழிவாங்கப்பட்ட சரத் பொன்சேகா மற்றும் ஷிராணி பண்டாரநாயக போன்றோருக்கு நீதியை பெற்றுக் கொடுத்தோம்.
ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் பொருளாதார நிபுணரல்லாத ஒருவர் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். பல ஊழல் மோசடிகள் இடம்பெற்றன.
பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட பிரான்ஸ் நாட்டின் டொமினிக் ஸ்ரிங்கனின் சேவையும் மத்திய வங்கிக்கு பெற்றுக் கொள்ளப்பட்டது.
இவ்வாறான செயற்பாடுகளால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது.
ராஜபக்சவை போன்று பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறையில் ஈடுபட்டோரை நாம் இலங்கைக்கு அழைத்துவரவில்லை.
இலங்கையில் பிறந்து வளர்ந்த கல்வி நிபுணத்துவம் உள்ளவர்களை நாம் இங்கு கொண்டு வந்தோம். நீங்கள் நிபுணத்துவமிக்கவர்களை கண்டு பயப்படுகின்றீர்கள் ஏனென்றால் முன்னைய ஊழல் மோசடிகள் வெளியாகும் என்ற அச்சமே காரணமாகும்.
அர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.
அவருக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை விட பல மடங்கு ஊழல் மோசடிகள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
எனவே தான் எமது நல்லாட்சியின் பயணத்திற்கு தடை போடுகின்றனர். கூச்சல் போடுகின்றனர்.
தினேஷ் குணவர்த்தன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர் அல்ல இன்று சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்ப ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுக்கும் முயற்சிகளுக்கு நீங்கள் தடைவிதிக்கின்றீர்கள்.
உங்களுக்கு அமைச்சர் பதவிகள் தேவையென்றால் என்னிடம் கூறுங்கள். அதற்கான உதவிகளை நான் செய்கிறேன். உங்களது இனவாதம், மதவாதம் மற்றும் குலவாதத்தை ஜனவரி 8 ஆம் திகதி மக்கள் நிராகரித்துள்ளனர். இதனை மெதமூலனவுக்கு அனுப்பிவைத்தனர். எனவே மீண்டும் இனவாதத்தை தலைதூக்க இடமளிக்க மாட்டோம்.
கடந்த தேர்தலில் நீங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தோல்வியடையச் செய்யவே முயற்சிகளை மேற்கொண்டீர்கள். அண்மையில் சுசில் பிரேம்ஜயந்த வெளியிட்ட அறிக்கையிலும் ஜனாதிபதியை சாடியுள்ளார். ஆனால் நாங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.
உண்மைக்கான, சத்தியத்திற்கான பாதையில் செல்வோம். திருடர்கள் மோசடிக்காரர்களை நிராகரிப்போம். ஒழுக்கமுள்ள இலங்கையை கட்டியெழுப்புவோம்’ என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.