குற்றவாளிகளுக்கு சிறை வேண்டாம் மரண தண்டனை வழங்குங்கள்! பொரளையில் மூவினத்தவர்களும் ஆர்ப்பாட்டத்தில்!
புங்குடுதீவு மாணவி கொடுமையான முறையில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று கொழும்பு பொரளையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இன்று மாலை 4மணிக்கு பொரளையில் நடந்த இவ்வார்ப்பாட்டத்தில் கொழும்பில் இருக்க கூடிய மூவினத்தை சேர்ந்த மக்களும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தினூடாக தமது கண்டனங்களை வெளிப்படுத்தியிருந்தனர்.
இவ்வார்ப்பாட்டத்தில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த மக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு மாணவியின் படுகொலைக்கு நீதிகிடைக்க வேண்டும் என குரல் எழுப்பினர்.
இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சமூக ஆர்வலர்களை லங்காவண்செய்திச் சேவை தொடர்பை ஏற்படுத்தி கேட்டபோது,
இன்று மாலை நான்கு மணியளவில் இவ்வார்ப்பாட்டம் ஆரம்பமாகியது. இவ் ஆர்ப்பாட்டத்தில் எவருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் மூவினத்தினை சேர்ந்த மக்களும் தமது பங்களிப்பை வழங்கியதோடு பெருந்திரளான பெரும்பான்மை இனத்தினை சேர்ந்த மக்களும் கலந்து கொண்டமை ஆச்சரியமளிக்கின்றது.
குறிப்பாக இவ் ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்தது தனிப்பட்ட பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சகோதர நண்பர்களே. இவ் ஆர்ப்பாட்டத்தில் ஒன்று கூடியவர்களில் பெரும்பாலானோர் சாதாரண மூவின மக்கள்.
இவர்கள் தாங்களாவே வீட்டில இருந்து பதாதைகளை தயார் செய்து வந்திருந்தார்கள்.
வடக்கில் என்ன நடந்தது என்பதைப்பற்றியதான தெளிவு இவர்களுக்கு இருந்ததை காணமுடிந்தது. முக்கியமாக எங்களை விட தண்டனை பெற்றுக் கொடுக்கவேண்டும் என்பதில் உறுதியா இருந்தார்கள்.
இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பான்மை இனத்தை சேர்ந்த இளைஞர்கள் தெரிவிக்கையில் குற்றவாளிகளுக்கு சிறை வேண்டாம் மரணதண்டனை வேண்டுமென்று குரல் கொடுத்தார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுவிக்கப்படவில்லை. இருந்தாலும் சிறுவர் விவகார அமைச்சை சார்ந்த ரோசியும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் கலந்து கொடார்கள்.
இதேவேளை ஆர்ப்பாட்டமானது சுயமாக ஒன்றுகூடி போராடியதால் எந்த ஊடகங்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.
குறிப்பாக சமூக வலைத்தளமான முகப்புத்தகத்தினூடாகவே பலர் போராட்டத்தில் ஒன்று கூடினார்கள்.
இந்த போராட்டமானது இதோடு நின்றுவிடாது பல்வேறு இடங்களிலும் நிகழ்த்துவதற்கு முடிவு செய்திருக்கிறார்கள். வெகு விரைவில் யாழிலும் இதைத் தொடர தீர்மானித்திருக்கின்றோம். அதற்கான அனுமதி கிடைக்கும் பட்சத்தில். ஏனெனில் இப்பொழுது யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இன்று நடந்த ஆர்ப்பாட்டமானது எவ்வித கலவரமின்றி, போக்குவரத்துக்கு இடையூமின்றி கொழும்பின் மத்தியில் 500பேருக்கு மேற்பட்டோர் அமைதியாக இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடாத்திக் காட்டியிருப்பது ஒரு முன்மாதிரியானது என அவர் தெரிவித்தார்.
இவ்வார்ப்பாட்டத்தின் இறுதியில் மெழுவர்த்தி ஏர்த்தி உயிரிழந்த மாணவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.