இயல்புநிலைக்கு திரும்பும் யாழ் நகரம் -வவுனியாவில் முழு அடைப்பு
20 May,2015
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைக்கு நீதிவேண்டி நேற்று யாழில் நடந்த பிரளய கொந்தளிப்பின் பின்னர், இன்று மெதுமெதுவாக இயல்புநிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. நகரில் வர்த்தக நிலையங்கள் மெல்லமெல்ல திறக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் மெதுவாக இருந்தபோதும், தற்போது மக்கள் நகரில் குவியத் தொடங்கியுள்ளனர். பேரூந்து நிலையமும் பரபரப்பாக தொடங்கியுள்ளது.
அரச மற்றும் தனியார் பேரூந்துகள் வழக்கமான தமது சேவைகளை செய்து கொண்டிருக்கின்றன.
நேற்றைய கொந்தளிப்பை பற்றியே பெரும்பாலானவர்கள் பேசிக் கொள்வதுடன், நகரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தால் சேதமடைந்த பகுதிகளை பார்ப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வவுனியாவில் முழு அடைப்பு: வன்முறையை தவிர்க்க கோரிக்கை!
புங்குடுதீவு மாணவி கொலைக்கு நீதி வேண்டி இன்று வவுனியாவில் பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டு வருகிறது. வவுனியா வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட பொதுஅமைப்புக்கள் இணைந்து விடுத்த இந்த அழைப்பையடுத்து, வவுனியா நகரத்திலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டுள்ளன. வீதிகளின் பல இடங்களில் தடை ஏற்படுத்தப்பட்டு ரயர்கள் எரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் வவுனியா நகரம் முழுமையாக வெறிச்சோடிப் போயுள்ளது.
நேற்றைய யாழ்ப்பாண கடையடைப்பின் பின்னர் ஏற்பட்ட அசம்பாவிதத்தை கருத்தில் கொண்டு, இன்று வவுனியாவில் பொலிசார் முழு அளவில் களமிறக்கப்பட்டுள்ளனர். சந்திக்கு சந்தி பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதுடன், இளைஞர்களை பொது இடங்களில் கூட வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர்.
சில பகுதிகளில் இளைஞர்கள் அசம்பாவிதங்களில் ஈடுபட எத்தனிப்பதாகவும் அறிய முடிகிறது.
கொல்லப்பட்ட மாணவிக்கு நீதிவேண்டி நடத்தப்படும் இதுபோன்ற அறப்போராட்டங்களை திசைதிருப்ப எத்தனிக்க வேண்டாமென சம்பந்தப்பட்ட அனைவரிடமும் தீபம் இணையத்தளம் வேண்டுகோள் விடுக்கிறது
வடமராட்சியில் நேற்று ரயர் எரித்த 21 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். மாணவி வித்தியா கொலையை கண்டித்து நேற்று நடந்த போராட்டத்தின் போது இவர்கள் ரயர் எரித்துள்ளனர்.
நேற்றைய போராட்டத்தின் போது வடமராட்சியின் பல பகுதிகளிலும் ரயர்கள் எரிக்கப்பட்டன. இதனால் ஒரு கலவர நிலை தோன்றியது. இதனையடுத்து, ரயர்களை எரித்தவர்களை பொலிசார் கைது செய்தனர். இவர்களில் 18 பேரை பருத்தித்துறை இரண்டாம் குறுக்குத்தெரு, கடற்கரைவீதி, எச்.என்.பி சந்தி, வியாபாரிமூலை சந்தி, இன்பருட்சி விளையாட்டு மைதானம் பொன்ற பகுதிகளிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.நெல்லியடி பொலிசார் மூவரை கைது செய்தனர்.
இவர்கள் அனைவரும் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.