சம்பூர் மீள்குடியேற்றம் சிக்கலில்: ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலிற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!
16 May,2015
சம்பூரில் முதலீட்டு ஊக்குவிப்பு சபைக்கு வழங்கப்பட்ட 818 ஏக்கர் காணியையும் திரும்பப்பெற்று, பொதுமக்களிற்கே வழங்கும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலிற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது. முதலீட்டு ஊக்குவிப்புசபையினால் குத்தகைஅடிப்படையில் காணிகள் ஒப்படைக்கப்பட்ட SLGI நிறுவனம் தொடுத்த வழக்கில் இன்று இந்த பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பையடுத்து, சொந்த இடங்களிற்கு திரும்பும் மக்களின் கனவுவில் மண் விழுந்துள்ளது.
பாரம்பரியமாக தமிழ்மக்கள் வாழ்ந்த சம்பூரிலிருந்து மக்கள் விரட்டப்பட்ட பின்னர், அந்த பகுதியின் 818 ஏக்கர் நிலத்தை மகிந்த அரசு முதலீட்டு ஊக்குவிப்புசபைக்கு வழங்கியது. முதலீட்டு ஊக்குவிப்புசபை அதனை குத்தகை அடிப்படையில்SLGI நிறுவனத்திற்கு வழங்கியது.
சம்பூரின் எஞ்சிய பகுதிகள் உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருந்தன. இதனால் மக்களில் சொந்த நிலங்களிற்கு திரும்பும் கனவு கானல்நீராகவே இருந்து வந்தது.
ஆட்சிமாற்றத்தின் பின்னர், புதிய அரசு இந்த நிலங்களை விடுவிக்கும் முயற்சியில் இறங்கியது. இதன் ஒரு கட்டமாக அங்குள்ள கடற்படை முகாம் அகற்றப்பட்டு சுமார் 200 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படுமென வாக்களிக்கப்பட்டது. இந்த அறிவித்தல் வெளியான சில நாளில், முதலீட்டு ஊக்குவிப்புசபைக்கு வழங்கப்பட்ட 818 ஏக்கர் காணிக்கான அனுமதியை இரத்து செய்து ஜனாதிபதி மைத்திரிபால வர்த்தமானி அறிவித்தலில் கைச்சாத்திட்டார்.
இந்த செய்தியறிந்ததும் சம்பூரிலிருந்து விரட்டப்பட்டு அகதி வாழ்க்கை வாழ்ந்து வந்த மக்கள் விபரிக்க முடியாத மகிழ்ச்சியடைந்தனர். இதுபற்றி அங்கிருந்து தகவல் அனுப்பிய செய்தியாளர், மக்கள் பேச்சற்றவர்களாக இருப்பதாக குறிப்பிடுகிறார்.
இந்தநிலையில் முதலீட்டு ஊக்குவிப்புசபையிடமிருந்து காணிகளை பெற்ற SLGI நிறுவனம் இன்று உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்தது. தமக்கு வழங்கப்பட்ட காணிகளை மீளப்பெற்றது முறையற்றதென் அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தார்கள். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், எதிர்வரும் 21ம் திகதிவரை சம்பூரில் மீள்குடியேற தடைவிதித்துள்ளது.
இந்த செய்தி வெளியானதும் சம்பூர்மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியேற்பட்டது. அகதிமுகாம்களில் உள்ள மக்களிற்கு இந்த தீர்ப்பு விபரம் இன்று விளக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், SLGI நிறுவனத்திற்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்துவதென்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.