அநுராதபுரத்திலிருந்து தேர்தல் பிரச்சார நடவடிக்கையை ஆரம்பிக்கும் மஹிந்த!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது தேர்தல் பிரச்சாரங்களை அநுராதபுரத்திலிருந்து ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்றம் கலைப்பட்ட பின்னர் அநுராதபுரம் ஸ்ரீமகா போதி விகாரைக்கு அருகில் அவர் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரச்சார நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி தனக்கு நெருக்கமான ஒருவர் மூலம் முன்னாள் வட மத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித்திடம் அறிவித்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுத் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என தெரிவித்துள்ள பிவிதுரு ஹெல உருமய தலைவர் உதய கம்மன்பில, அது தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் குறித்து தற்போது விரிவான கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக தேர்தலில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதிக்கு வாய்ப்பு வழங்காவிட்டால் அதற்கான மாற்று நடவடிக்கை என்ன என எழுப்பப்பட்ட கேள்விக்கு, பதிலளித்த கம்மன்பில அதற்கான தீர்வு தமது அணியிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஓகஸ்டில் இலங்கை வரும் ஐ.நா. குழு காணாமல் செய்யப்பட்டோர் விசாரணை ஆணைக்குழுவிடம் தரவுகளை சேகரிக்கும்
இலங்கைக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 3 ஆம் திகதி பயணம் மேற்கொள்ளும் காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. செயற்குழு, உள்ளக விசாரணைக் குழுவுடன் முக்கிய பேச்சுகளில் ஈடுபடவுள்ளது.
அத்துடன், காணாமல்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான தரவுகளையும் கோரவுள்ளது என அறியமுடிகிறது. இவ்வாறானதொரு சந்திப்பு இடம்பெறவுள்ளதை உள்ளக விசாரணைக் குழுவின் உயர் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
வடக்கு, கிழக்கில் காணாமல்போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழு தனது இடைக்கால அறிக்கையை அண்மையில் வெளியிட்டது. இதுபற்றி ஐ.நா. குழுவுக்கு மேற்படி குழு தெளிவுப்படுத்தவுள்ளது.
அத்துடன், தமது பணிகள் குறித்தும் அது விவரிக்கவுள்ளது. காணாமல்போகச் செய்யப்பட்டோர் விவகாரம் தொடர்பில் உள்ளக விசாரணைக் குழுவிடம் இந்தச் சந்திப்பின்போது, ஐ.நா. குழு பல கேள்விகளை எழுப்ப லாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, படையினருக்கு எதிராகக் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் பற்றியும் கூடுதல் கவனம் செலுத்தப்படலாம் எனத் தெரியவருகிறது.
வடக்கு, கிழக்கில் செயற்படும் காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பான அமைப்புகளுடனும் ஐ.நா. குழு பேச்சு நடத்தவுள்ளது. காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா. செயற்குழுவானது, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின்கீழ் இயங்கும் அமைப்பாகும். 2006 ஆம் ஆண்டிலிருந்தே இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதற்கு இந்தக்குழு முயற்சித்தது.
எனினும், மஹிந்த அரசு இதற்கு இடமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்சி மாற்றத்தின் பின்னர், ஜெனிவாவில் வைத்து வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கொழும்பு வருமாறு மேற்படி குழுவுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையிலேயே ஐ.நா. குழுவின் 10 நாட்கள் இலங்கைப் பயணம் அமையவுள்ளது. இதேவேளை, காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்தகட்ட அமர்வு எதிர்வரும் ஜூன் 2 ஆம் திகதிமுதல் 5 ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.