யுத்தவெற்றி கொண்டாடுங்கள்: இனவாத தீயை பற்ற வைக்கும் மகிந்த!
ஒரு குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகள்
12 May,2015
எதிர்வரும் 19ம் திகதி யுத்தவெற்றி கொண்டாட்டத்தை நடத்த அரசாங்கம் தடையேற்படுத்துமாக இருந்தால், மக்கள் கிராம மட்டத்தில் யுத்தவெற்றி கொண்டாட்டத்தை நடத்த வேண்டுமென இனவாத கொள்ளி வைத்துள்ளார் முன்னாள் சர்வாதிகாரி மகிந்த ராஜபக்ச. நேற்று படையினரின் உறவினர்களை கொழும்பில் சந்தித்து பேசியபோதே இப்படி கொள்ளி வைத்துள்ளார்.
இந்த சந்திப்பில் கலந்து கொண்ட மகிந்த ஆதரவுபடையினர் சிலர், அரசாங்கம் மீது குற்றம் சுமத்தினார்கள். யுத்தத்தை வெற்றிகொண்ட படையினருக்கு உரிய கௌரவம் வழங்குவதில்லை, வடக்கு கிழக்கில் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந் நிலைமையை சரி செய்ய மகிந்த மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமென அவர்கள் வலியுறுத்தினார்கள்.
இதன் பின்னர் உரையாற்றிய மகிந்த முழுக்க முழுக்க இனவாத பேச்சு பேசினார். ‘யுத்த வெற்றி கொண்டாட்டங்களிற்கு அரசு தடைவிதித்துள்ளதாக அறிய முடிகிறது. இது முற்றிலும் தவறு. அரசாங்கம் யுத்தவெற்றி கொண்டாட்டத்தை தடைசெய்ய முயன்றால், மக்கள் கிராமமட்டத்தில் அதனை கொண்டாட வேண்டும்.
எதிர்வரும் 19ம் திகதி பாராளுமன்றத்தில் விசேட விவாதமொன்றை கோருமாறு எனது பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு கூறியுள்ளேன். படையினருக்கு உரிய கௌரவம் வழங்க அதில் வலியுறுத்துவார்கள்” என்றார்.
ஒரு குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகள்: சட்டமாக்க கோரி பீதியை கிளப்புகிறது பொதுபலசேனா!
இலங்கையில் அதிகரித்து செல்லும் சனத்தொகையை கட்டுப்படுத்த குடும்பமொன்று இரண்டு பிள்ளைகளிற்கு மேல் பெற்றுக் கொள்ள முடியாதென்ற சட்டத்தை கொண்டு வரவேண்டுமென பரபரப்பு அறிவித்தல் விடுத்துள்ளது பொதுபலசேனா. கிருலப்பனையில் உள்ள அந்த அமைப்பின் தலைமையகத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், பொதுபலசேனவின் இணைப்பாளர் டிலந்த விதானகே இதனை தெரிவித்துள்ளார்.
வில்பத்து வனப்பகுதியை அழித்து குடியிருப்புக்களை அமைத்து கொடுக்கும் வேலைகளை அமைச்சர் ரிசாட் செய்கிறார். மறிச்சுக்கட்டியில் வாழ்ந்த குடும்பங்களிற்கும் வில்பத்தில் வீடுகள் அமைக்கப்படுகின்றன. யுத்தகாலத்தில் வெளியேறியவர்களை அதிகளவானவர்களை அமைச்சர் குடியேற்றியுள்ளார். இதற்க அதிகரித்த சனத்தொகையே காரணம்.
இலங்கையில் சனத்தொகை அதிகரிப்பு வீதம் அதிகமாக இருந்தால், மாடிவீட்டு திட்டத்தைதான் அரசாங்கம் செய்திருக்க வேண்டும். மாறாக காடுகளை அழித்து குடியிருப்புக்களை அமைக்க கூடாது.
இலங்கையில் சனத்தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்த நாம் இரண்டு யோசனைகளை முன்வைக்கிறோம். முதலாவது அதிகரிக்கும் சனத்தொகை வீதத்திற்கு ஏற்ப, தொடர்மாடிவீடுகளை அமைக்க வேண்டும். அடுத்ததாக, குடும்பத்திற்கு இரண்டு பிள்ளைகளைத்தான் பெற வேண்டுமென்ற சட்டத்தை கொண்டு வரவேண்டுமென்ற சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்றார்.