கைதாகிடுவோமோ என அஞ்சும் மகிந்த
செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தலை நடத்தாமல் தடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னை பின்பற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.
செப்டெம்பர் மாதத்தில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் இலங்கை யுத்த குற்றங்கள் தொடர்பான அறிக்கையை வெளியிடும் வரை தேர்தலை தாமதப்படுத்திக்கொண்டால், எதிர்வரும் பொது தேர்தலை தனக்கு சாதகமான வகையில் மாற்றி அமைத்துக்கொள்ள முடியும் என மகிந்த எண்ணி வருகின்றார்.
விடுதலை புலிகள் நாசமாக்கிய தன்னை மற்றும் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதாக ஜெனீவா அறிக்கையில் தெரிவிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி எதிர்பார்த்து வருகின்றார்.
குறித்த ஊடகத்திற்கு முன்னாள் ஜனாதிபதியை பின்பற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் புதிய தேசிய அரசாங்கத்தை அமைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியிடம் உறுதியளித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் வாரங்களில் அரசாங்கத்திற்கெதிரான மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி அவர்களில் தானும் கைது செய்யப்படலாம் என அஞ்சி வருவதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
திவிநெகும பணத்தில் பத்திரிகை நடத்திய ராஜபக்ச குடும்பம்
மகிந்த ஆட்சிக்காலத்தில் திவிநெகும நிதியத்தின் பாரிய பணத்தொகை ராஜபக்ச சார்பில் நடாத்திச்செல்லப்பட்ட பல பத்திரிகைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில் ராஜபக்சவின் கீழ் செயற்பட்ட திவிநெகுமவின் நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து நிதிமோசடி விசேட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விசாரணகளின் போது நிதி நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருந்த ராஜபக்ச சார்பு பத்திரிகைகளுக்கு உதவ திவிநெகும நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி குற்றப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது குறித்து குறிப்பிட்ட பத்திரிகைகளின் உரிமையாளர்கள் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளதாக விசேட பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
ராஜபக்ச சார்பு பத்திரிகைகளின் உரிமையாளர்கள் சிலர் தற்போது வெளிநாடுகளில் வசித்து வருவதாகவும்,
அவர்கள் பத்திரிகை உலகில் ராஜபக்ச குடும்பத்தின் பொம்மைகளாக செயற்பட்டனர்.
இதற்கான ஆதாரங்கள் காணப்பட்ட போதிலும் இந்த பணப்பரிமாற்றங்கள் மர்மமான முறையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் நிதி குற்றப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
என்னைக்காப்பாற்றுங்கள்: நீதிமன்றில் தஞ்சம் புகுந்த கோத்தபாய!
தன்னை கைது செய்ய முடியாதென இதுவரை சவால் விட்டு வந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இறுதியில் சிறிய இனவாதக்கும்பலை வைத்து ஆர்ப்பாட்டம், ஊர்வலமென தன்னை கைது செய்ய முடியாதென்பதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முனைந்து, அதில் தோல்வியடைந்து, இன்றையதினம் உணர்நீதிமன்றத்தில் தஞ்சமடைந்துள்ளார். தன்னை கைது செய்ய அனுமதிக்க வேண்டாமென மனுவொன்றை இன்றையதினம் தாக்கல் செய்துள்ளார்.
தன்னுடைய அடிப்படை மனித உரிமை மீறப்படுவதாகக் கூறும் கோத்தபய ராஜபக்ச, பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு சவால் விடுக்கும் வகையில் இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார்.
கைது செய்தல் மற்றும் விசாரணை செய்யும் திட்டங்களில் பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு உள்ள அதிகாரத்தை கோத்தபய ராஜபக்ச தனது மனுவின் மூலம் சவாலுக்கு உட்படுத்தியுள்ளார்.
தன்னை கைது செய்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை தடுத்து தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோத்தபய ராஜபக்ஷ தனது மனுவில் கோரியுள்ளார்.
மனுவின் பிரதிவாதிகளாக அமைச்சரவை, ஜனாதிபதி செயலாளர், பொலிஸ் மா அதிபர், பொலிஸ் நிதி மோசடி பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அறுவர் பெயரிடப்பட்டுள்ளனர்.