அடுத்த பொதுத்தேர்தலில் சுதந்திரக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் மகிந்த ராஜபக்சவின் கனவை ஜனாதிபதி மைத்திரிபால கடந்த தன்கிழமை நடந்த சந்திப்பில் கலைத்ததன் பின்னர், பிரதமர் வேட்பாளர் தொடர்பான புதிய தகவலொன்று கிளம்பியுள்ளது. வடமேல் மாகாண முதல்வர் தயாசிறி ஜெயசேகர பிரதமர் வேட்பாளராகலாமென மைத்திரிக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். இதனை மைத்திரி சூசகமாக கூறியுமிருக்கிறார்.
கடந்த புதன்கிழமை மகிந்தவுடனான சந்திப்பின் பின்னர், அவரது பிரதமர் வேட்பாளர் கனவை மைத்திரி கலைத்திருந்தார். இனி மகிந்த பிரதமர் வேட்பாளர் என்ற பேச்சிற்கே இடமில்லையென்றாகிவிட்டது. இந்த சந்திப்பின் பின்னர் தனக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் உரையாடிய மைத்திரி, நேரம் வரும்போது தெளிவான தலைமைத்துவம் வரும் வரும். என்னைச் சுற்றி ரணதுங்க, துமிந்த திசாநாயக்க, தயாசிறி போன்றவர்கள் இருக்கிறார்கள். 2018இல் நான் தலைமைத்துவத்திலிருந்து விலகும்போது தெளிவான கண்களையுடைய ஒருவர் தலைமைக்கு வருவார் என குறிப்பிட்டதாக தீபத்திற்கு அறியக்கிடைத்துள்ளது.
தயாசிறி தொடர்பில் மைத்திரிக்கு நல்ல அபிப்பிராயம் இருப்பதால் அவரே பிரதமர் வேட்பாளராகலாமென தெரிகிறது.
எனினும், மைத்திரியின் எதிர்பார்ப்பு பெரியது, தயாசிறி இன்னும் தகுதியான அரசியல்வாதியாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லையென்ற பேச்சுக்களும் கட்சிக்குள் இல்லாமலில்லை.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவிக்கப்பட்டால், அதற்கு எதிராக போட்டியிட மற்றுமொரு தரப்பு தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் எஸ்.பி.நாவீன்ன குண்டைத்தூக்கிப் போட்டு, மகிந்த அணியின் வயிற்றில் புளியை கரைத்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர் இவ்வாறு பிரதமர் வேட்பாளராக களமிறங்குவார்கள். தங்களுக்கும் பிரதமர் வேட்பாளர் பதவி வழங்கப்பட வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுப்பார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலின் போது எந்த சந்தர்ப்பத்திலும் பிரதமர் வேட்பாளர் ஒருவரை சுதந்திரக் கட்சி பெயரிட்டதில்லை. பிரதமர் வேட்பாளர் யார் என்பதனை சுதந்திரக் கட்சி தேர்தலின் பின்னரே தீர்மானிக்கும்.
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்திலும் இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டது. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியும் இதே வழிமுறையை பின்பற்றுவார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாருடையதும் தனிப்பட்ட சொத்து கிடையாது.
நாட்டின் தேவைகளையும் கட்சியின் கொள்கைகளின் அடிப்படையிலுமே தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி என்ற ரீதியில் வெற்றியீட்டுவதே எமது நோக்கமாக அமைந்துள்ளது.
மாறாக தனியொரு நபரை மன்னராக்குவது எங்களது நோக்கமல்ல என எஸ்.பி. நாவீன்ன சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
பார்த்தீபன் பாணியில் குண்டக்கமண்டக்க பேசிய விமல் வீரவன்ச
தேர்தலில் மைத்திரிக்கு வாக்களித்த 63 இலட்சம் மக்களின் பக்கமா அல்லது மகிந்தவிற்கு வாக்களித்த 58 இலட்சம் மக்களின் பக்கமா நிற்கிறார் என்பதை ஜனாதிபதி மைத்திரி தெளிவுபடுத்த வேண்டும். தனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள், ஐதேக, தமிழ்தேசிய கூட்டமைப்பு என அந்தப்பக்கமும் இல்லாமல் இந்தப்பக்கமும் இல்லாமல் எந்தப்பக்கம் நிற்கிறார் என தெரியாமல் மைத்திரி நிற்கிறார் என தமிழ்ச்சினிமாவின் பார்த்தீபன் பாணியில் குண்டக்கமண்டக்க பேச்சு பேசியுள்ளார் விமல் வீரவன்ச. நேற்று மகிந்தவை ஆதரித்து குருணாகலில் நடந்த கூட்டத்திலேயே இந்த பேச்சை பேசினார்.
நேற்றைய கூட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக அஸ்வர் மற்றும் அலவி மௌலானா ஆகிய இரு புதுமுகங்கள் மேடையேறின. இவர்கள் இருவருக்கும் எதிராக அண்மைக்காலமாக முஸ்லீம் சமூகத்திலிருந்தே கடுமையான விமர்சனங்கள் வருவது குறிப்பிடத்தக்கது.
இவர்களை விமல் வீரவன்ச வரவேற்றார். பின்னர் பேசிய விமல், ஜனாதிபதி தேர்தலில் தோல்விடைந்தாலும் மகிந்தவை பிரதமராக்குமாறு மக்கள் தன்னிடம் கோருவதாகவும், மக்களின் கோரிக்கைக்கு மைத்திரி செவிசாய்க்க வேண்டுமென்றும் கூறினார்
மகிந்தவின் காதைப்பிடித்து முறுக்கிய பொன்சேகா!
முதுகெலும்பு பலமிருந்து, முதுகெலும்பில் ஒரு எலும்பிலாவது ஆத்ம கௌரவம் இருக்குமானால், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெட்கமின்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலடிக்கு சென்று பிரதமர் வேட்பாளராக நிறுத்துமாறு கேட்டிருக்கமாட்டார். இவ்வாறு ஜனநாயகக் கட்சியின் தலைவரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
களுத்துறை மாவட்டம் மத்துகம பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வெட்கமின்றி திருடர்கள் கூட்டத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலடிக்கு சென்று தன்னை பிரதமர் வேட்பாளராக நிறுத்துமாறு மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார். மகிந்தவுக்கு பிரதமர் பதவி வேண்டுமாம். மைத்திரிபால சிறிசேன பச்சை குழந்தை என்று மகிந்த எண்ணிக்கொண்டிருக்கின்றார்.
63 லட்சம் வாக்குகளை பெற்று தெரிவான தலைவரிடம் தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவித்து அடுத்த தேர்தல் நடத்த சந்தர்ப்பம் வழங்குமாறு கேட்கிறார்.
மகிந்தவிடம் மீண்டும் அதிகாரத்தை ஒப்படைத்தால் மைத்திரிபால சிறிசேன போர்த்தி கொண்டுதான் இருக்கவேண்டும். மகிந்த ஆச்சரியமான ஒரு நபர். அவரை மீண்டும் எழுந்திருக்க நாம் விடப் போவதில்லை. மீண்டும் நாட்டை அழிக்க இடமளிக்க மாட்டோம்.
நாங்கள் மகிந்த ராஜபக்சவின் காதை பிடித்து திருகி சுழற்றி விட்டு பாதாளத்தில் கொண்டு போய் கைவிட்டோம். எந்தளவு கீழ் மட்டத்திற்கு சென்றாலும் எப்படி துரத்தியடித்தாலும் மகிந்தவுக்கு அதிகார பேராசை இல்லாமல் போகவில்லை எனவும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.