ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபல சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று புதன்கிழமை (06) பிற்பகல், சுமார் ஒரு மணித்தியால பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.
நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஜனாதிபதி காரியாலயத்தில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்;சியின் எதிர்காலம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டாக பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தை வெற்றியளித்ததாக தெரிவித்த அமைச்சர், இந்த பேச்சுவார்த்தை தொடர்பில் சு.க.வின் செயலாளர் நாயகம் அறிக்கையொன்றை வெளியிடுவார் எனவும் கூறினார்.
இந்த சந்திப்பில், எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, சு.க.வின் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா, அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, எம்.கே.ஏ.டி எஸ். குணவர்தன, துமிந்த திஸாநாயக்க ஆகியோர் ஜனாதிபதி தரப்பிலிருந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
முன்னாள் ஜனாதிபதியுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜீ.எல்.பீரிஸ், பந்துல குணவர்தன, டலஸ் அலகப்பெரும, குமார வெல்கம மற்றும் மஹிந்தானந்த அலுத்கமகே ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் முஸ்தபாவும் கலந்துகொண்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று பிற்பகல் 1.45 மணியளவில் இந்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகியதாக தெரிவிக்கப்படுகின்றது. சரியாக ஒரு மணித்தியாலம் வரை மட்டும் தொடர்ந்த இந்த பேச்சுவார்த்தையின் பின்னர் ஜனாதிபதி, நாடாளுமன்ற வளாகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார். அவர் சென்று 10 நிமிடங்களுக்குப் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் புறப்பட்டுச் சென்றார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருமணி நேரத்துக்கு முன்னதாகவே அதாவது பிற்பகல் 12.45 க்கு நாடாளுமன்றத்துக்கு வருகைதந்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு மணிநேரம் தாமதித்தே வருகைதந்தார்.
இந்த சந்திப்பின் தேவை தொடர்பில் நேற்று முன்தினம், ஜனாதிபதி செயலகத்தினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில், ‘முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பொன்று அத்தியாவசியமானது என்று இரண்டு வாரங்களுக்கு முன்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவரது வீட்டில் வைத்து சந்தித்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம மற்றும் டி.பீ ஏக்கநாயக்க ஆகியோர் கோரிநின்றனர்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன், ‘ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவ்விருவரும் சந்தித்த இரண்டு நாட்களுக்கு பின்னர் வண. முருத்தெட்டுவே ஆனந்த தேரர், வண.மெதகொட அபயதிஸ்ஸ, வண. உடுவே தம்மாலோக்க தேரர், ஆகியோர் உள்ளிட்ட தேரர்கள் குழு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்புக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கைவிடுத்தனர்.
அதனடிப்படையில், நாடாளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதி காரியாலயத்தில் இந்த சந்திப்பை 2015ஆம் ஆண்டு மே மாதம் 06ஆம் திகதி பிற்பகல் 1.30க்கு நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சந்தர்ப்பமளித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவது விசேட எதிர்ப்பார்ப்பாகும். இதன்போது, அரசாங்கத்தினால் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற எந்தவொரு நடவடிக்கை தொடர்பிலும் கலந்துரையாடப்படமாட்டாது. இந்த பேச்சுவார்த்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி செயற்பாடுகளை மட்டுப்படுத்தியதாக அமைந்திருக்கும் என்பதை தெரிவித்துகொள்கின்றோம்.
ஜனாதிபதி என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதற்கு எந்தவொரு நபரும் அல்லது அமைப்பும் கோரிக்கை விடுத்தால் அதற்கு சந்தர்ப்பம் அளிப்பது சாதாரணமாகும். இது தொடர்பில் சிற்சில நபர்களினால் கூறப்படுகின்ற கருத்துக்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முழுமையாக நிராகரிக்கின்றார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படும் போது இவ்வாறான சந்திப்பு, சுவிஷேசமானதாக கருதப்படாது. அத்துடன் கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தலின் போது தன்மீது நம்பிக்கை வைத்த 63 இலட்சத்துக்கு அண்மித்த வாக்காளர்களின் கௌரவம் மற்றும் நம்பிக்கைக்கு எவ்விதமாக இழுக்கும் ஏற்படாத வகையில் ஜனாதிபதியினால் இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய மைத்திரிபால சிறிசேன, பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராக களத்தில் குதித்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 2014ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 8ஆம் திகதி, இராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகத்தில் இடம்பெற்றபோது இவ்விருவரும் முதன் முறையாக சந்தித்கொண்டனர்.
ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் 149 நாட்களுக்கு பின்னர் அவ்விருவரும் நேற்று 6ஆம் திகதி புதன்கிழமை ஒரு மணிநேரம் சந்தித்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். சந்திப்பு நிறைவடைந்து வெளியேறிய போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதற்கு இருவரும் மறுத்து விட்டனர்.