நடுவீதியில் கல்யாண மண்டபம் முறியடித்த மக்கள்!
04 May,2015
ஹட்டன் நகரின் டன்பார் வீதியின் பிரதான தமிழ் பாடசாலை ஒன்றுக்கு அருகில் அதிசக்தி வாய்ந்த மின் கடத்தி கட்டமைப்பை அகற்ற மேற்கொண்ட முயற்சியை பிரதேசவாசிகள் முறியடித்துள்ளனர்.
குறித்த மின்கடத்தி கட்டமைப்புக்கு மேலாக ஆபத்தான வகையில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் திருமண மண்டபத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காது மின்சார சபை மின் கடத்தி கட்டமைப்பையும் அதற்கான தூணையும் அகற்றி தனியார் காணி ஒன்றில் பொருத்த மேற்கொண்ட முயற்சி மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பல வருடங்களாக குறித்த இடத்தில் காணப்படும் மின் கடத்தி கட்டமைப்பு எவருக்கும் இடையூறாக இருந்ததில்லை.
இந்த நிலையில், குறித்த நபர் அவர் தேவைக்கு அமைய அடாவடித்தனத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இவரின் தேவைக்கு அமைய அதனை அங்கிருந்து அகற்றி தமது காணிகளில் பொருத்த எந்த வகையிலும் இடமளிக்க போவதில்லை எனவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
ஹட்டன் டன்பார் வீதியில் குறுக்கீட்டை ஏற்படுத்தும் வகையில் வீதி ஒழுங்கு விதிகளை மீறி ஹட்டன் டிக்கோயா நகர சபையின் ஒத்துழைப்புடன் இந்த திருமண மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
20 அடி முன்னோக்கி நிர்மாணிக்கப்பட்டுள்ள வாகன தரிப்பிடத்தை உடைத்து அகற்றுமாறு நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தரவிட்டுள்ள போதிலும் திருமண மண்டபம் மின்சார சபையின் சில அதிகாரிகளின் உதவியுடன் திறக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டினர்.
திருமண மண்டபத்தின் வாகன தரிப்பிடம் காரணமாக வீதியில் இரண்டு வாகனங்கள் கூட மாறிச் செல்ல முடியாத நிலைமை காணப்படுவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் வீதியில் செல்லும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேசவாசிகள் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.