மோடியின் விஜயத்தின் பின்னரே அரசியலமைப்பு திருத்தம் குறித்த யோசனை சமர்ப்பிக்கப்படும்?சுமந்திரன்
03 Mar,2015
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் பின்னரே அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பிலான யோசனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் சிங்கள பத்திரிகையொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் எதிர்வரும் 13ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதுடன், 15ம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருப்பார். அதன் பின்னர் 17ம் திகதி முதல் 20ம் திகதி வரையில் நாடாளுமன்றைக் கூட்டத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் எதிர்வரும் 17ம் திகதி நாடாளுமன்றில் அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பிலான யோசனை முன்வைக்கப்படலாம்.
நாடாளுமன்றிற்கு அதிகாரமளிக்கக் கூடிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கவும் சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவவும் 19ம் திருத்தச் சட்டம் அறிமுகம் செய்யப்படும் என அரசாங்கம் ஏற்கனவே 100 நாள் திட்ட வாக்குறுதிகளில் குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பிலான உத்தேச பிரேரணையும் 17ம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கப்பட உள்ளது.
குறித்த அரசியல் அமைப்பு திருத்தங்களை இம்மாத இறுதிவார நாடாளுமன்ற அமர்வுகளின் போது நிறைவேற்றிக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது
மோடியுடன் அதிகாரப் பரவலாக்கம் குறித்து பேசப்படும்!- சுமந்திரன்
இந்திய பிரதமர் இலங்கை வரும்போது வடக்கு கிழக்;கு மாகாணங்களுக்கான அதிகார பரவலாக்கங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன், பிரதமர் மோடி இலங்கை வரும் போது அவருடன் குறித்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
மோடி, முதல் தடவையாக உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு எதிர்வரும் 13ம் திகதி வருகிறார்.
இது, இந்திய பிரதமர் ஒருவர் 25 வருடங்களுக்கு பின்னர் இலங்கைக்கு மேற்கொள்ளும் உத்தியோகபூர்வமாக அமைந்துள்ளது.