ஆயுத விநியோகஸ்தராக இருந்த கே.பி KP வெளிநாடு செல்வதற்கான தடை
26 Feb,2015
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுத விநியோகஸ்தராக இருந்த கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தொடர்பான முழுமையான அறிக்கையொன்றை 6 மாதத்துக்குள் நீதிமன்றில் சமர்ப்பிப்பதாக சட்டமா அதிபர் திணைக்களம், நேற்று வியாழக்கிழமை (26) கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்நிலையில், கே.பி தொடர்பில் விசாரணை நடத்த 6 மாத கால அவகாசம் வழங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட, அந்த விசாரணை காலத்துக்குள் கே.பி வெளிநாடு செல்லவும் தடை விதித்தார்.
குமரன் பத்மநாதனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கோரி மக்கள் விடுதலை முன்னணி, கடந்த மாதம் 19ஆம் திகதி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று இடம்பெற்றது. இதன்போது, சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சார்பில் சட்டத்தரணி பிரியந்த நாவான்ன, மன்றில் ஆஜராகியிருந்தார்.
இதன்போது, ‘மக்கள் விடுதலை முன்னணியின் மனு அடிப்படையில் கே.பி தொடர்பில் 193 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 193 சம்பவங்கள் தேசிய மற்றும் சர்வதேச குற்றங்கள் தொடர்பில் உள்ளன. விசேடமாக ராஜீவ் காந்தி கொலை, கப்பல் கொள்வனவு, தொழிற்சாலை, நிதி கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட பல சம்பவங்கள் அவற்றில் உள்ளடங்குகின்றன. அந்த சம்பவங்கள் குறித்து விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க குறுகிய காலம் போதாது. அதற்கு ஆறு மாத காலம் தேவை’ என சட்ட மா அதிபர் திணைக்கள சட்டத்தரணி, நீதியரசரிடம் கூறினார்.
இந்த கருத்தை பரிசீலித்த நீதிபதி, இந்த வழக்கில் மனுதாரரான மக்கள் விடுதலை முன்னணி சார்பில் சட்டத்தரணி சுனில் வட்டகலவிடம் கருத்து கேட்டது. அதற்கு பதிலளித்த சட்டத்தரணி வட்டகல, முறையான விசாரணை நடத்த ஆதரவு வழங்கப்படும்’ என கூறினார்.
இதற்கமைய, இந்த வழக்கு விசாரணையை 6 மாத காலத்துக்கு, அதாவது 2015 ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, வெளிநாடு செல்வதற்கு கே.பி.க்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் 6 மாத காலத்துக்கு நீடித்தார்.