நல்லிணக்கம் மற்றும் தேசத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் தென்னாபிரிக்காவின் அனுபவம் குறித்து இலங்கையுடன் பகிர்ந்துகொள்வதற்காக அந்த நாட்டின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது.
சர்வதேச ஒத்துழைப்புகளிற்கான தென்னாபிரிக்காவின் பிரதியமைச்சர் தலைமையிலான குழுவினர் இலங்கையில் அமைச்சர்கள், எதிர்கட்சியினர் மற்றும் சிவில்சமூகத்தினரை சந்திக்கவுள்ளனர்.இதன் போது அவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவுள்ளனர்.
இலங்கை தென்னாபிரிக்காவின் அனுபவத்திலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு தனக்கான உள்நாட்டு தீர்வை உருவாக்க முயலும், தென்னாபிரிக்காவை அப்படியே பின்பற்றாது என பிரதிவெளிவிவகார அமைச்சர் அஜித்பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு ஏற்ற நல்லிணக்க முறை குறித்து ஆராய்வோம்,அதேவேளை யுத்தகுற்றங்கள் குறித்தஉள் நாட்டு விசாரணை பொறிமுறையை உருவாக்குவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் புதிய அரசாங்கம் அமைந்த பின்னர் தென்னாபிரிக்க தூதுக்குழுவொன்று மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது
கடந்த ஆண்டிலும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன! வருடாந்த அறிக்கையில் சர்வதேச மன்னிப்புச் சபை
கடந்த ஆண்டிலும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் வருடாந்த அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
2014ம் ஆண்டில் 160 நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டவிரோத கைதுகள், படையினரின் சித்திரவதைகள், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை, பயங்கரவாத தடைச் சட்டம் போன்ற சட்டங்களின் ஊடாக மக்கள் துன்புறுத்தப்படுகின்றமை போன்ற சம்பவங்கள் இலங்கையில் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது.
மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் காணாமல் போன கடத்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
சிறுபான்மை மதத்தினர் மீது தாக்குதல் நடத்தப்படுவதுடன் அடக்குமுறைகள் தொடர்வதாகத் தெரிவித்துள்ளது. புதிய அரசாங்கம் இந்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தி, எதிர்காலத்தில் துரித கதியில் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.
இலங்கையில் பாரியளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இவற்றை ஒரே இரவில் மாற்றியமைக்க முடியாது என்பது யதார்த்தமானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
காவல்நிலையங்களில் கைதிகளின் உயிரிழப்புச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்வதாகவும் பெண்களுக்கு எதிரான வன்முறகைள் அடக்குமுறைகள் அதிகரித்துச் செல்வதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.