ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நியுயோர்க்கில் நேற்றுச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
ஐ.நாவுக்கு சிறிலங்காவுக்கும் இடையிலான ஒத்துழைப்புகள் குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக, ஐ.நா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இல்கையின் புதிய அரசாங்கத்தின் முக்கியமான நடவடிக்கையான 100 நாள் செயற்திட்டத்துக்கு, மங்கள சமரவீரவிடம், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் ஆதரவையும், ஊக்குவிப்பையும் வெளிப்படுத்தினார்.
மனித உரிமைகள், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் ஆகிய சிறிலங்காவின் சிக்கலான விவகாரங்கள் குறித்து, பான் கீ மூனும், மங்கள சமரவீரவும் கலந்துரையாடினர்.
இலங்கையில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான ஐ.நாவின் திட்டங்கள் தொடரும் என்றும், சிறிலங்காவுக்கும் அதன் மக்களுக்கும் ஐ.நாவின் உதவிகள் தொடர்ந்து கிடைக்கும் என்றும், ஐ.நா பொதுச்செயலர் உறுதியளித்துள்ளார் என்றும் அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன், ஐ.நாவுக்கான பிரதிநிதி பாலித கொஹன்னவும், ஐ.நா பொதுச்செயலருடன் ஐ.நா உதவிச் செயலர் ஒஸ்கார் பெர்னான்டஸ் தரங்கோவும் கலந்து கொண்டார்.
இந்தச் சந்திப்பை ஒளிப்படம் எடுக்க செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஐ.நாவின் அதிகாரபூர்வ ஒளிப்படப்பிடிப்பாளர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா அறிக்கையை வெளியிடுவது தனது கையில் இல்லை கைவிரித்தார் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் .
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா நடத்திய விசாரணை அறிக்கையை வெளியிடுவதை தாமதப்படுத்துவது
தனது கையில் இல்லை என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் கைவிரித்து விட்டதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அடுத்த மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள ஐ.நா விசாரணை அறிக்கையைப் பிற்போடும்படி, சிறிலங்கா அரசாங்கம் கோரி வருகிறது.
நேற்று நியுயோர்க்கில் ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூனை சந்தித்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா விசாரணை அறிக்கையை பிற்போடும் தமது அரசாங்கத்தின் விருப்பத்தை வெளியிட்டதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் இந்த விருப்பத்தை வெளியிட்டது தொடர்பாக ஐ.நாவின் அதிகாரபூர்வ செய்திக்குறிப்பில் எதுவும் கூறப்படவில்லை.
ஆனால், மூடப்பட அறைக்குள் பான் கீ மூனுடன் நடத்திய சந்திப்பில், அறிக்கையைப் பிற்போடுவதன் அவசியத்தை மங்கள சமரவீர வலியுறுத்தியதாக, தம்மை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாத இராஜதந்திர வட்டாரங்கள் ரொய்ட்டர்ஸ்சிடம் தெரிவித்துள்ளன.
ஆனால், இது தனது விவகாரம் அல்லவென்றும், ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரே இதுபற்றி முடிவெடுக்க வேண்டும் என்றும் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தெரிவித்து விட்டதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
ஐ.நா அறிக்கையைத் தாமதப்படுத்துவதற்கு, ஐ.நா மற்றும் அமெரிக்காவின் ஆதரவைத் திரட்டிக் கொள்வதற்கே , மங்கள சமரவீர தனது அமெரிக்கப் பயணத்தை, பயன்படுத்தியுள்ளார் என்றும் இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.